பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிசென்னை:
நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
* சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
* 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர் நடிகர் விவேக்.
* கலை சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு.
* பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக்.
* எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது.
* தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு, திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
* நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர் விவேக்- ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
நடிகர் விவேக் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஓ பன்னீர்செல்வம்சென்னை:
நடிகர் விவேக் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.
நடிகர் விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.
விவேக் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நடிகர் விவேக் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்
மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் நடிகர் விவேக் என்று மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முக ஸ்டாலின்சென்னை:
நடிகர் விவேக் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
* நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் நடிகர் விவேக்.
* சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை 5 முறை வென்றவர் நடிகர் விவேக்.
* மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் விவேக்.
* பல சாதனையை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்தவரை இயற்கை அவசரமாக ஏன் பறித்துக்கொண்டதோ?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.