வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணம் செய்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. கவுதமாலா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளுக்கு 2 நாள் பயணமாக கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானதளத்தில் இருந்து நேற்று புறப்பட்டார்.
விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து கமலா ஹாரிஸ் பயணித்த விமானம் மீண்டும் ஆண்ட்ரூஸ் தளத்திற்கு திரும்பியது. விமானத்தில் இருந்து இறங்கிய கமலா ஹாரிஸ், நலமுடன் இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
உடனடியாக அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சோதனையிட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், எந்திர கோளாறை சரி செய்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று விமானத்தில் கமலா ஹாரிஸ் புறப்பட்டு சென்றார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணித்த விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட கோளாறு குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் இருந்து கீழே இறங்கிய கமலா ஹாரிஸ், தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அனைவரும் சிறிய பிரார்த்தனை செய்தோம். மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என குறிப்பிட்டார்.