செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை 13 ஆவது திருத்தத்தில் இருந்து இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு? | நிலாந்தன்

13 ஆவது திருத்தத்தில் இருந்து இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு? | நிலாந்தன்

6 minutes read

இரண்டாம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு மெய்நிகர் மாநாடு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த கவிஞர் காசிஆனந்தன் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.“ஈழத்தமிழர் புவிசார் அரசியலில் இந்திய அரசின் உடனடித்தலையீடு காலத்தின் கட்டாயம்” என்பதே அம்மாநாட்டின் பேசுபொருளாகும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஈழ ஆதரவு பிரமுகர்கள் இதில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியும் கொங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்கவில்லை. தாயகத்திலுள்ள தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட 3கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.எனினும் மூன்றுகட்சிகளும் இந்த மாநாட்டில் உத்தியோகபூர்வமாக பங்கேற்கவில்லை. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இதில் உத்தியோகபூர்வமாக பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டாலும்  அக்கட்சியின் தலைவராகிய விக்னேஸ்வரனின் கடிதம் ஒன்று அங்கே வாசிக்கப்பட்டிருக்கிறது.விக்னேஸ்வரனின் கூட்டணியை சேர்ந்த சிவாஜிலிங்கமும் அனந்தியும் அதில் பங்குபற்றியிருக்கிறார்கள்.தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா அதில் பார்வையாளராக பங்குபற்றினார். ஆனால் பேசவில்லை.

வட்டுக்கோட்டை தீர்மானம் எனப்படுவது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து போவதை நியாயப்படுத்துகிறது என்பதால் அது பிரிவினையை ஆதரிக்கும் ஒரு தீர்மானமாகவே பொதுவாக வியாக்கியானம் செய்யப்படுகிறது.எனவே ஆறாவது திருத்தச் சட்டம் இருக்கத்தக்கதாக பிரிவினையை முன்மொழியும் ஒரு தீர்மானத்தின் பெயரிலான மாநாட்டில் பங்குபற்றுவது என்பது நாட்டில் இருக்கும் கட்சிகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினால் தமிழரசுக்கட்சி பங்கு பற்றவில்லை என்று கூறப்படுகிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  செயலாளர் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானம் தமக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதனால் அதில் பங்கேற்கவில்லை என்றும் கூறுகிறார்.எனினும் அவர் வழங்கிய ஒரு பேட்டியில் ஓரிடத்தில் 6 ஆவது திருத்தத்தை குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மாநாட்டில் பேசிய பெரும்பாலான தமிழகப் பிரமுகர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்து என்றால் குரல் கொடுப்பவர்கள். எனவே இந்த மாநாட்டுக்கு அவர்களுடைய அங்கீகாரம் உண்டு.இது முதலாவது. இரண்டாவது இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மட்ட பிரமுகராக வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொள்வதாக ஒப்புதல் அளித்திருந்தார்.எனினும் பயணத் தாமதம் காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அது ஒரு மெய்நிகர் மாநாடு. எனவே எங்கிருந்தாலும் இணையத்தின் மூலம் அதில் பங்கு பற்றியிருந்திருக்கலாம்.எனினும் திருமதி வானதி உத்தியோகபூர்வமாக அதில் பங்குபற்றுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.இது எதைக் காட்டுகிறது?இந்த மாநாட்டிற்கு இந்திய ஆளுங்கட்சியின் அனுசரணை அல்லது ஆசீர்வாதம் உண்டு என்பதைத்தான்.

இந்த இரண்டு விளக்கங்களின் பின்னணியிலும் இந்த மாநாட்டை இனிப்பார்க்கலாம். இந்த மாநாட்டை ஒழுங்கு படுத்தியவர்கள் எதற்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தை கையில் எடுத்தார்களோ தெரியவில்லை. அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதை ஒரு குறியீட்டுப் பெயராகப் பயன்படுத்தினார்களா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.ஆனால் வட்டுக்கோட்டை தீர்மானம் எனப்படுவது அதை நிறைவேற்றிய கட்சியாலேயே கைவிடப்பட்ட ஒரு தீர்மானம்.அந்த தீர்மானத்தை நிறைவேற்றிய கட்சி அதன்பின் மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக் கொண்டு தனது தீர்மானத்திலிருந்து தானே பின்வாங்கிவிட்டது. அதன்பின் 2009இல் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு ஐரோப்பாவில் சில செயற்பாட்டாளர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மறுவாக்கெடுப்பு ஒன்றை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடாத்தினார்கள். இது வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான இரண்டாவது எத்தனம். கடந்த வாரம் தமிழகத்தில் இடம்பெற்றது மூன்றாவது எத்தனம்.

மூன்றாவது எத்தனத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. முதலாவது அது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் நீட்சியாக காட்டப்படுவது. இரண்டாவது இந்தியா ஈழத்தமிழர்கள் பொறுத்து இலங்கைத்தீவில் தலையிட வேண்டும் என்று கூறுவது. இந்த இடத்தில் ஒரு முக்கிய கேள்வியைக் கேட்க வேண்டும். இந்தியா ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் ஏற்கனவே தலையிட்டு கொண்டுதானே இருக்கிறது? இந்திய இலங்கை உடன்படிக்கை காலாவதியாகிவிட்டதோ இல்லையோ அதன் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தைத்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா முன்னிறுத்தி வருகிறது.அதை ஜெனிவா தீர்மானத்திலும் நிறைவேற்றியிருக்கிறது. இந்நிலையில் 13ஆவது திருத்தத்தை வலியுறுத்தும் இந்தியாவில் அதன் ஆளும்கட்சியின் மறைமுக அனுசரணையோடு ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு மெய்நிகர் மாநாடு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு இந்தியா தலையிடவேண்டும் என்று கேட்கிறது?

இந்திய ஆளுங்கட்சியின் மறைமுக ஆசீர்வாதத்தோடுதான் இந்த மாநாடு கூட்டப்பட்டது என்ற எடுகோளின் அடிப்படையில் கேட்டால் இக்கருத்தரங்கின் மூலம் இந்தியா ஈழத் தமிழர்களுக்கும் கொழும்புக்கும் காட்ட முயலும் சமிக்ஞைகள் எவை?

கொழும்பை பொறுத்தவரை இது அச்சுறுத்தலானது. இது ஓர் அரசியல் மாநாடு என்பதை விடவும் ஒரு ராஜதந்திர ரீதியிலான அழுத்த பிரயோக உத்தி என்பதே பொருத்தமானதாகும். சீனாவை நோக்கிச் செல்லும் கொழும்பில் உள்ள அரசாங்கத்துக்கு இந்தியா சில சமிக்ஞைகளை காட்டவிளைகிறது. ராஜபக்சக்களின் அரசாங்கம் அந்த சமிக்ஞைகளை எப்படி எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதேசமயம் தமிழர்கள் தங்களை நோக்கி காட்டப்படும் சமிக்ஞைகளை எப்படி விளங்கிக்கொள்வது? இந்த மாநாட்டுத் தீர்மானம் ஈழத்தில் உள்ள தமிழ் கட்சிகளையும் இணைத்து நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு மூன்று கட்சிகளும் அந்த தீர்மானத்தில் பங்களிப்பு செய்யவில்லை.இது அந்தத் தீர்மானத்தில் உள்ள முதலாவது குறைபாடு. இரண்டாவது குறைபாடு இந்த மாநாடு தமிழக நோக்கு நிலையிலிருந்து அதாவது இந்திய நோக்கு நிலையிலிருந்து ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து போகும் ஒரு தீர்மானத்தை இரண்டாவது முறை ஆனால் அதன் நீர்த்துப்போன வடிவத்தில் நிறைவேற்றுவதற்கு தமிழகம் ஒரு பொருத்தமான களமாக இருக்கலாம். ஆனால் அதை ஆதரித்துவிட்டு ஆறாவது திருத்தச் சட்டத்தின்கீழ் சட்டரீதியாகச் சிக்குப்பட நாட்டிலுள்ள தமிழ் கட்சிகள் தயாரில்லை. இது ஒரு ஈழ யதார்த்தம்.  இப்படிப் பார்த்தால் ஈழத் தமிழ்க் கட்சிகளும் பங்குபற்றத்தக்க தலைப்புகளை முன்வைத்து பரந்த அளவிலான ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.தமிழகத்தில் சுதந்திரமாக செய்யக்கூடிய ஒன்றை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் செய்ய முடியாது என்பதனை ஏன் ஏற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ளத் தவறினார்கள் ?

தமிழக கட்சிகளும் ஈழத்தமிழ் கட்சிகளும் ஒரு பொது இடையூடாட்டத் தளத்தில் ஒன்றாகக் கூடுவது என்பது கொழும்பை நோக்கி அழுத்தத்தை பிரயோகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த இடையூடாட்டத் தளம் எனப்படுவது தாயகத்தில் வாழும் கட்சிகளுக்கு சட்ட நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அதோடு முக்கியமாக தாயகத்தில் உள்ள கட்சிகளின் அச்சங்களையும் அபிலாசைகளையும் அபிப்பிராயங்களையும் கேட்டு ஒரு பொது முடிவை எடுத்த பின்னரே இப்படி ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில் கூறின் இதுவும் ஒரு நாடுகடந்த அரசியல் எத்தனம்தான்.ஆனால் இலங்கை அரசாங்கத்தின்மீது  அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஒரு உத்தி.

ஈழத்தமிழர்கள் கடந்த 12ஆண்டுகளாக கொழும்பிலுள்ள அரசாங்கங்களின்மீதோ அல்லது வெளி உலகத்தின்மீதோ பலமான அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதபடிக்கு பலவீனமாக காணப்படுகிறார்கள்.புவிசார் அரசியலும் பூகோள அரசியலும் நமக்கு சாதகமாக உள்ளன என்று கூறிக்கொண்டு அவற்றைக் கையாள தேவையான வெளியுறவுக் கொள்கைகளோ வெளியுறவுக் கட்டமைப்புக்களோ இல்லாத மக்களாகக் காணப்படுகிறார்கள்.அதனால்தான் பேராசிரியர் ஜூட் லால் பெர்ணான்டோ கூறுவதுபோல கடந்த 12 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய  வெற்றி எதையும் பெறமுடியாத மக்களாக காணப்படுகிறார்கள்.

சில எழுக தமிழ்களோ அல்லது ஒரு P2P யோ கொழும்பின் மீதோ அல்லது ஜெனிவாவின் மீதோ அல்லது உலக சமூகத்தின் மீதோ போதிய அளவுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பவைகளாக இல்லை என்பதைத் தான் கடந்த 12 ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன. எனவே தங்களை நோக்கி நீட்டப்படும் எல்லா நட்புக்கரங்களையும் ஈழத்தமிழர்கள் விழிப்போடு பற்றிக்கொள்ள வேண்டும். சிறிய மக்கள்கூட்டமான ஈழத்தமிழர்கள் பெரிய நண்பர்களை சம்பாதிப்பதன் மூலம்தான் கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். கொழும்பின்மீது அழுத்தங்களை பிரயோகிக்க முற்படும் வெளித் தரப்புக்களோடு கண்ணை மூடிக்கொண்டு கூட்டுச்சேர தேவையில்லை. யாரையும் மெய்மறந்து காதலிக்கவும் தேவையில்லை. யாரையும் ராஜதந்திரமின்றி  பகைக்கவும் தேவையில்லை.ராஜதந்திரம் எனப்படுவது பகைவர்களை சம்பாதிப்பது  அல்ல நண்பர்களை சம்பாதிப்பது.அது பகைவர்களை நண்பர்கள் ஆக்கும் ஒரு கலை.பகைவர்களை தங்களுக்கிடையே மோதவிடும் ஒரு  கலை.

கொழும்பிலுள்ள அரசாங்கத்தை பணிய வைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடையாது. சிங்கள-பௌத்த அரசியல்வாதிகள் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை தங்கத்தட்டில் வைத்து தருவார்கள் என்று நம்புவதற்கு இது ஒன்றும் அம்புலிமாமா கதை இல்லை. நூறு ஆண்டுகளுக்கும் மேலான இரத்தம் சிந்திப் பெற்ற ஓர் அனுபவம் அது. எனவே கொழும்பை பணிய வைப்பது என்ற அடிப்படையில் கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் எல்லா சக்திகளோடும் சமயோசிதமாகவும் தந்திரமாகவும் தீர்க்கதரிசனமாகவும் கூட்டுச் சேர்வதே ஒரே வழி.

எந்த ஒரு வெளித்தரப்பும்  தன்னுடைய நலன்களைத் தியாகம் செய்து ஈழத்தமிழர்களுக்கு உதவப்போவதில்லை.ஈழத்தமிழர்கள்தான் தங்களுக்காக தியாகம் செய்ய வேண்டும். எல்லா வெளித் தரப்புக்களும் அதனதன் நலன்சார் நோக்குநிலையிலிருந்தே ஈழத்தமிழர்களை அணுகும். அவ்வாறு அணுகும் பொழுது ஈழத்தமிழர்களின் நலன்களும் வெளித் தரப்புகளின் நலன்களும் எங்கேயோ ஓரிடத்தில் சந்திக்கும். அந்த பொதுப் புள்ளிகளை கண்டுபிடித்து அவற்றைப் பலப்படுத்தும் நோக்கிலான ஒரு வெளியுறவுக் கொள்கை அவசியம். தந்திரோபாயக் கூட்டுக்களே உலகப்போர்களை வென்றிருக்கின்றன. தந்திரோபாய கூட்டுக்களே மனிதகுலத்தின் எதிரிகளைத் தோற்கடித்திருக்கின்றன.தந்திரோபாய கூட்டுக்களே வரலாற்றில் பல சமயங்களில் நீதியை நிலைநாட்டியிருக்கின்றன.

எனவே ஈழத்தமிழர்களுக்கு தேவையாக இருப்பது தமது இறுதி இலக்குகளில் விட்டுக்கொடுப்பற்ற;விழிப்போடு கூடிய ஒரு வெளியுறவுக்கொள்கைதான்.அந்த வெளியுறவுக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு வெளியுறவு கட்டமைப்புத்தான். ஆனால் அரங்கில் உள்ள எந்தத்தமிழ் கட்சியிடம் அப்படிப்பட்ட ஒரு வெளியுறவுக் கொள்கையோ அல்லது வெளியுறவுக் கட்டமைப்போ உண்டு?

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More