செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை ஊசிக் கதைகள் | நிலாந்தன்

ஊசிக் கதைகள் | நிலாந்தன்

7 minutes read

கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்கு  தடுப்பூசி போடும்  நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள்.கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே  அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின.

கிளிநொச்சியில் நடந்த ஒரு  கதை  வருமாறு…ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார்.காணொளியில் தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் தனக்கு காந்த சக்தி ஏற்பட்டதை நிரூபிக்கும் விதத்தில் ஊசி போட்ட இடத்தில் ஒரு சவர அலகை வைத்து அது ஒட்டிக் கொண்டிருப்பதை படம் பிடித்து அனுப்பியிருக்கிறார். அதைப்பார்த்த கிளிநொச்சியிலுள்ள அவருடைய உறவினர் காணொளியை தனக்கு தெரிந்த ஒருவருக்கு காட்டியிருக்கிறார்.அதைப்பார்த்த மற்றவர் தான் ஊசி ஏற்றிக் கொண்ட பின் தனது கையில் ஒரு சிறிய கத்தியை வைத்து பார்த்தாராம்.அது ஒட்டிக் கொண்டு விட்டதாம். அதைப் படம் எடுத்து தனக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த காணொளியை காட்டியவருக்கு அனுப்பியிருக்கிறார்.

ஊசி போட்டால் உடலில் காந்த சக்தி ஏற்படும் என்பது அல்லது உடல் ஒரு உயிருள்ள காந்தமாக மாறிவிடும் என்ற கருத்து முதலில் வட இந்தியாவில்தான் தோன்றியது. அங்கே ஊசி போட்டபின் ஒருவருடைய உடலில் அசாதாரணமாக காந்தசக்தி பெருகி அருகில் உள்ள உலோகங்கள் ஒட்டிக் கொள்வதை காட்டும் ஒரு காணொளி முதலில் வெளியாகியது. அது இப்போதும் நம்பப்படும் கதையாக உள்ளது.

இரண்டாவது கதையில் எனது நண்பர் ஒருவர் சொன்னார் தடுப்பூசி எடுத்த பின் தன்னுடைய மாமனாரின் குருதிக் குளுக்கோசின் அளவு ஒப்பீட்டளவில் குறைந்துவிட்டதாக.இன்ஷ்யூரன்ஸ் முகாமையாளர் ஒருவர் என்னிடம் கேட்டார் சினோபாம் போட்டால் ஆஸ்துமா கட்டுப்படும் என்று கூறுகிறார்களே உண்மையா ? என்று.

மூன்றாவது கதை நாட்டின் தலைநகரத்தில் நடந்தது.கொழும்பு மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசி இல்லாத போது ஏனைய தடுப்பூசியை பெற மனதில்லாமல் 20 தொடக்கம் 30 வயது வரையானவர்கள் பலரும் மீளத் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மாநகரசபையின்  பிரதான மருத்துவர் ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.இவ்வாறு தடுப்பூசி பெறாமல் திரும்புவோரின் எண்ணிக்கை 30 வீதமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.அதில் ஒரு அரசியல் பொருளாதார நோக்கம் உண்டு. உழைப்புச் சக்தி அதிகமுடைய அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளவர்களை தடுப்பூசி போட்டு மேலும் பாதுகாப்பதன்மூலம் நாட்டின் உழைப்பாளிகளைப்  பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கம்.

ஆனால் நாட்டில் தற்போது 20-30வயதுக்கு இடைப்பட்ட இளையோரி டையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் பாலியல் சக்தி குறையும்; சந்ததி விருத்தி பாதிப்புறும் என சமூக ஊடங்களில் வெளியான தகவல்களால் இளைஞர், யுவதிகள் மத்தியில் தடுப்பூசி பெறும் ஆர்வம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.ஆனால் இது உலகில் எந்த ஒரு ஆராய்ச்சியின் மூலமும் உறுதிப்படுத்தப்படவில்லை.எனவே இளைஞர்,யுவதிகள் அச்சமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயங்குவது நாட்டை ஆபத்துக்குள்ளாக்குகின்றது என அரசமருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக சமூகத்தில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.தடுப்பூசி நிலையங்களிற்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இளைஞர்கள் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளாத நிலை காணப்படலாம்.ஆனால் அவர்கள் சமூகத்தில் வைரஸ் சுமைகளை அதிகரிப்பார்கள் என தெரிவித்துள்ள அவர் சமூகத்தில் வைரஸ் சுமைகள் காணப்பட்டால் அதனால் புதிய திரிபுகள் உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.அவ்வாறான சூழ்நிலையில் திரிப்படைந்த வைரஸ் சமூகத்திற்குள்ளிருந்து உருவாகக்கூடும்.தடுப்பூசிகளால் அதனை கட்டுப்படுத்தமுடியாத நிலை காணப்படலாம்,இதன்காரணமாகவே வைரஸ் சுமைகளை குறைப்பதற்கு தடுப்பூசியை செலுத்தவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாலாவது கதையில் சம்பந்தப்பட்டவர் உள்ளூர் மருத்துவம், இயற்கை உணவு போன்றவற்றில் நாட்டம் உடைய ஒருவர்.அவர்தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.ஏனென்றால் அது ஒரு சீனச்சதி என்று சொன்னார். அப்படியென்றால் உலகில் அதிகம் பேர்,அதாவது இதுவரை 200 கோடிக்கு மேற்பட்டவர்கள் சீனத்தடுப்பூசியை பெற்றிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினேன். அவர் சொன்னார் இருக்கலாம் ஆனால் சீனா உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றாற்போல பொருட்களை உற்பத்தி செய்கிறது. அது குழந்தை பிள்ளைகளுக்காக உற்பத்தி செய்யும் விளையாட்டு பொருட்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தரத்தில் காணப்படுகின்றன. மேற்கு நாடுகளுக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் உயர்தரம் பேணப்படும். ஆனால் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படும் உற்பத்திகளில் அதிகம் ரசாயனம்  இருக்கும். அது குழந்தைகளுக்கு தீங்கானதாகவும் இருக்கும். எனவே சீனா எதைச் செய்தாலும் அதில் ஒரு வணிக நோக்கம் இருக்கும். எங்களுக்கு தரப்பட்டு ஊசி அப்படி ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னார்.

அரசு ஊழியரான தன்னுடைய மனைவி உத்தியோக நடைமுறைகளின் படி ஊசி போட வேண்டியிருந்தது என்றும் அவ்வாறு ஊசி போட்டுக் கொண்ட பின் அவருடைய உடலில் தசைகளில் மென்மைத் தன்மையும் எலும்புகளில் பலவீனமும் தோன்றியிருப்பதாக அவர் சொன்னார். இதை ஒரு ஊகமாக வைத்துக் கொண்டிருக்காமல் ஏன் உரிய மருத்துவர்களிடம் சென்று பரிசோதிக்ககூடாது என்று கேட்டேன். கொரோனா வைரஸ் மருத்துவர்களை மட்டுமல்ல மனித குலத்தின் அறிவியல் சாதனைகள் பலவற்றையும் நிர்வாணமாக்கி விட்டது என்றும் அவர் சொன்னார். இது நாலாவது கதை.

மேற்கண்டவை யாவும் பெரும்பாலும் சீனத்துத் தடுப்பூசி பற்றிய கதைகள். சீனாவை குறித்தும் அதன் உற்பத்திகளை குறித்தும் அப்படிப்  பல சந்தேகங்கள் உலகில் உண்டு. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்னரான ஒரு காலப்பகுதியில் யூதர்களை குறித்தும் உலகில் ஒரு பகுதியினர் அவ்வாறு சந்தேகித்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவில் இயற்கை அனர்த்தங்கள் பஞ்சம் என்று ஏதாவது வந்தால் அது யூதர்களின் பில்லி சூனிய வேலையாகத்தான் இருக்கும் என்று நம்பிய ஒரு காலம் உண்டு. இவர்கள் பில்லி சூனியக்காரர்கள் மந்திர தந்திரங்களில் தேர்ந்தவர்கள் என்ற ஒரு நம்பிக்கை நிலவியது. யூத இனப்படுகொலையை ஊக்குவித்த காரணிகளில் அதுவும் ஒன்று. யூதர்களைப் போலவே சீனர்களைப் பற்றியும் குறிப்பாக வைரசுகுப்பின் பல்வேறு விதமான மர்மக் கதைகள் உண்டு. இக்கதைகளில் பல சூழ்ச்சிக் கோட்பாடுகளில் இருந்து உற்பத்தியாகின்றன.சீனர்கள் எதை செய்தாலும் உள்நோக்கத்தோடுதான் செய்வார்கள் என்று நம்பும் ஒரு நிலைமையை கொரானா வைரஸ் கொண்டு வந்துவிட்டது.

ஆனால் உலகில் அதிக தொகையினர் அதாவது 200 கோடிக்கும் அதிகமானவர்கள் சீன ஊசியைத்தான் போட்டிருக்கிறார்கள். இலங்கைதீவில் நானும் உட்பட லட்சக்கணக்கானவர்கள் சீனத்து ஊசியைதான் பெற்றுக்கொண்டோம். சீனாவின் ஊசிக்கு பின்னால் சூதான நோக்கங்கள் ஏதாவது இருக்குமா இல்லையா என்பதை சோதிக்கும் பரிசோதனைக் கூடமாக மாற்றப்பட்ட கோடிக்கணக்கான உடல்களில் என்னுடையதும் ஒன்று.

இவ்வாறு சீனத் தடுப்பூசிகளை குறித்து ஐரோப்பாவிலும் அச்சம் இருப்பதனால்தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டுக்குள் வருபவர்கள் சீன தடுப்பூசிகளை போட்டிருந்தால் குறிப்பிட்ட காலம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிய பின்னரே நாட்டுக்குள் பிரவேசிக்கலாம் என்று அறிவித்திருக்கின்றன.அவ்வாறு குறிப்பிட்டகாலம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் பொழுது அதற்கு வேண்டிய செலவையும் குறிப்பிட்ட பயணிதான் பொறுப்பேற்க வேண்டும்.அவ்வாறு நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானால் அதற்குரிய செலவு சில சமயம் விமான டிக்கெட்டைவிட அதிகமாக இருக்கும் என்ற அச்சம் உண்டு. இதனால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் குறிப்பாக அமெரிக்க இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் சீனத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு தயங்குகிறார்கள்.அதனால்தான் வடக்கு-கிழக்கில் மன்னார் மாவட்டத்தில் பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் இருந்தும் புத்தளம் சிலாபம் போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகமானவர்கள் பொய்யான ஆவணங்களைக் காட்டி மன்னாருக்கு சென்று பைசர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டார்கள்.இவ்வாறான முறைகேடுகளை முன்வைத்து அரசாங்கம் பைசர் தடுப்பூசியை நிர்வகிக்கும் பொறுப்பை முழுக்க முழுக்க படைத்தரப்பிடம் ஒப்படைத்தது.

ஆனால் மேற்கத்திய தயாரிப்புகளான பைசர் அல்லது மொடோனா தடுப்பூசிகள் மீதான மோகம் என்பது ஒருவித வெள்ளைக்கார மோகமாகவும் அல்லது சீன தயாரிப்புகள் மீதான சந்தேகமாகவும் காணப்படுகிறது. இலங்கைக்கு அதிகளவு தடுப்பூசிகளை வழங்கிய நாடு சீனா.ஆனால் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசாங்கம் பைசர் தடுப்பூசிகளை வழங்கியது தொடர்பில் நாட்டில் சர்ச்சைகள் ஏற்பட்டன.அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகம் இருப்பதனால் அங்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறியது.அப்பொழுது ஒரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டார் கொழும்பில் இருப்பது துறைமுகம் இல்லையா என்று. ராஜபக்சக்கள் தமது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டைக்கு ஏன் பைசர் ஊசிகளை கொடுத்தார்கள்? அவர்களுடைய இதயத்தில் வீற்றிருக்கும் சீனா தயாரித்த சீன தடுப்பூசிகளை ஏன் கொடுக்கவில்லை? அதைவிட முக்கியமான கேள்வி நாட்டை ஆளும் குடும்பம் எந்த ஊசியை ஏற்றிக் கொண்டது? யாருக்காவது தெரியுமா?

அதேசமயம்,குறைந்த விலையில் கொள்வனவுச் செய்யக்கூடிய சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஏன் அதிக விலை கொடுக்கப்படுகிறது ? என அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.இலங்கையிலும் உலகெங்கிலும் மிகவும் விரும்பப்படும் பைஷர்,மொடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக சீனத்தடுப்பூசிகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது. பொது நிதி பயன்படுத்தப்படுவதால், இதுதொடர்பில் அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.உலகின் ஏனைய இடங்களில் சினோபார்ம் தடுப்பூசியானது ஒரு டோஸுக்கு 10 முதல் 14 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கை தடுப்பூசியை 15 டொலருக்கு கொள்வனவு செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 22 மில்லியன் தடுப்பூசிகளில் 17 மில்லியன் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து வந்தவையாகும்.அதாவது நாட்டில்    தடுப்பூசிக்குள் கொமிஷன் இருக்கிறது  என்று பொருள்.

மக்களுக்கான வக்சின்  கூட்டமைப்பு என்ற உலகளாவிய அமைப்பு கடந்த மே மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையில்  covid-19 வைரஸானது ஒன்பது புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.இந்த ஒன்பது கோடீஸ்வரர்களும் நிகர லாபமாக 19.3 பில்லியன் டொலர்களை பெறுகிறார்கள் என்றும் குறைந்தளவு வருமானம் பெறும் நாடுகளிலுள்ள முழு மக்களுக்கும் 1.3 தடவைகள் வக்சினேற்ற இந்தக்  காசு போதும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

மேற்படி அமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஒக்ஸ்பாமின் சுகாதார கொள்கை நிர்வாக முகாமையாளரான அனா மரியோட் “இந்த கொடூரமான நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எமது கூட்டுக் தோல்வியை நாங்கள் சாட்சியம் செய்கிறோம். தங்கள் மிகவிரைவாக புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறோம் ஆனால்  கோடிக்கணக்கான மக்களுக்கு ஊசி போடுவதில் முழு அளவுக்கு தோல்வி அடைந்திருக்கிறோம்” என்று கடந்த மே மாதம் குறிப்பிட்டிருந்தார்.

“தடுப்பூசித் தானம் தொடர்பாக உண்மையிலேயே நான் மிகுந்த விரக்தியில் உள்ளேன். உலகின் பல நாடுகள் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும் சூழலில் சில நாடுகள் மூன்றாவது டோஸை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது டோஸ் போடும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தானமாகக் கொடுக்கலாம்.இதுவரை உலகளவில் உற்பத்தியாகியுள்ள 4.8 பில்லியனுக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசியில் 75வீத தடுப்பூசிகள் 10 நாடுகளே பயன்படுத்தியுள்ளன. தடுப்பூசி அநீதியால்  கொரோனா வைரஸ் மேலும் திரிப்படைந்து அச்சுறுத்தும். இந்த உலகில் உள்ள அனைவரும் பாதுகாப்பான நபராக மாறும்வரை எந்த ஒரு தனிநபரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறமுடியாது”என்று உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதானொம் கடந்த ஓகஸ்ட் மாதம் தெரிவித்துள்ளார்.

இன்டர்நெற்றுக்குக்கு அடுத்தபடியாக மனிதகுலம் முழுவதையும் -எல்லாக் கண்டங்களையும் எல்லா மதங்களையும் எல்லா இனங்களையும் பண்பாடுகளையும்- மாஸ்க்கின் மூலம் ஒருங்கிணைத்தது covid-19தான்.அதேசமயம் அந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி உலகில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த வைரஸ் உள்ளளவும் மாஸ்க் இருக்கும்;தடுப்பூசியும் இருக்கும்.தடுப்பூசி உள்ளளவும் தடுப்பூசி அரசியலும் ,தடுப்பூசி  ஏற்றத்தாழ்வும் ;தடுப்பூசி வணிகமும்; தடுப்பூசி முதலாளிகளும்; தடுப்பூசிக் கள்ளர்களும் ; தடுப்பூசிக் கதைகளும் இருக்கவே செய்யும்.

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More