அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துவிட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி செயலணியை அமைத்தமை குறித்து நீதியமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார்.
அத்தோடு ஞானசார தேரர் தலைமையில் குறித்த செயலணியை அமைப்பது குறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அலி சப்ரி கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சு பதவியில் இருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக அவர் தீர்மானித்து கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.
எவ்வாறாயினும் அவரது சேவைகள் தொடர வேண்டும் என பல காரணங்களைக் கூறி இராஜினாமாவை ஜனாதிபதி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது.