சித்திரை மாத வெயிலில் நிலம் காய்ந்து புழுதி பறந்து கொண்டிருந்தது. முற்றத்தின் இருகரையோரம் வளர்ந்திருந்த பூமரங்களுக்கு குழாய் பிடித்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன். நீரின் குளிர்மையில் சிலிர்த்துக் கொண்டிருக்கும் பூமரங்களைக் காணும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
வேலை முடிய பத்து மணியாகி விட்டது. பன்னிரண்டு மணிக்கு மாமிக்கு சாப்பாடு கொடுக்கவேண்டும். ஞாயிற்றுக் கிழமை பிள்ளைகளும் வீட்டில் இருப்பதால் பசி என்று வருவார்கள். அவசரமாய் சமையலைத் தொடங்கினேன். ஹோலில் இருந்து கோபத்தில் கத்தும் சத்தம் கேட்டது. லீவு நாட்களில் மாமிக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அடிக்கடி நடப்பவைதான். போனேன்.
“அப்பம்மா இண்டைக்கும் எங்களை ரீவி பாக்க விடாமல் தொடந்து பாத்துக் கொண்டிருக்கிறா. சனி ஞாயிறுதான் எங்களை ரீவி பாக்க விடுவீங்கள். நாங்கள் பாக்கப் போறம் அப்பம்மாட்ட சொல்லுங்கோ.” மகன் கேட்டதும் நான் மாமியைப் பார்த்தேன்.
“பிள்ளையாற்ர நாடகம் போகுது பாத்திட்டு விடுறன் பிறகு நீங்கள் பாருங்கோ”
ரீவியில் இருந்து கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டே சொன்னா.
“அப்பம்மா பாக்கட்டும். நீங்கள் போய் விளையாடுங்கோ பிறகு பாக்கலாம்”
சமாதானம் சொல்லி அனுப்பி விட்டு சமையலைத் தொடர்ந்தேன்.
சமைத்து முடியும்போது மாமி சமையலறைக்கு வந்தா.
“திவ்யா போன் பண்ணினாள் என்னைப் பாக்க இப்ப வாறாளாம். நானும் அவளைப் பாத்து மூண்டு மாசமாச்சு. வீட்டுவேலையள் எல்லாம் முடிஞ்சுதாம்” சந்தோஷமாகச் சொன்னா.
என்னால் சந்தோஷப்பட முடியவில்லை.
“வீட்டில மூண்டு அறையள் இருந்தாலும் வசதி காணாது அண்ணி. பிள்ளையள் இரண்டு பேரும் வளந்திட்டாங்கள் தனியறை வேணுமாம். வீட்டின்ர ஒரு பக்கத்தை இடிச்சு இரண்டு அறைகளோட குளியல் அறையும் சேர்த்துக் கட்டப் போறம்”
முன்பு வந்தபோது சொன்னாள். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இன்று வருகிறாள்.
திவ்யாவைக் கண்டதும் மாமியின் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.
“இவர் நேற்று கொழும்புக்குப் போயிட்டாரம்மா. வர நாலு நாளாகும். உங்களைக் கூட்டிக் கொண்டு போக வந்தனான்” என்றாள்.
“வந்து முதல் சாப்பிடு. பிறகு கதைக்கலாம்” இருவரும் சாப்பிட இருந்தார்கள்.
“கறிக்கு உப்பு குறைவாய் இருக்கு அண்ணி கொஞ்சம் தூக்கலாய் போட்டிருக்கலாம்”
கறியை எடுத்து நாக்கில் வைத்து சுவைத்தபடி சொன்னாள் திவ்யா.
“வர வர உப்புகளைக் குறைச்சு பச்சைத்தண்ணி கறியாய் இருக்கு. வீட்டில உப்பு இல்லையே அதைப் போட்டு ருசியாய் சமைச்சால் என்ன” முகத்தை சுழித்தபடி மாமியும் சொன்னா.
“போத்தில் நிறைய உப்பு இருக்கு. அதுக்காக அள்ளிப் போட முடியுமே”
விட்டுக் கொடுக்காமல் நானும் பதில் சொன்னேன்.
“வாய்க்கு ருசியாய் சமைச்சு சாப்பிட்ட அம்மாவுக்கு இதைச் சாப்பிட கஷ்டமாய் இருக்கும். அவாவின்ர விருப்பப்படி சமைச்சு குடுங்கோவன் அண்ணி”
“மாமிக்கு கொலஸ்ரோல் டயபற்றிக்கெல்லாம் இருக்கு. மருந்து எடுக்கிறா. சாப்பாட்டில கவனமாயிருக்கவேணும். உனக்குத் தெரியாதே” கோபத்துடன் கேட்டேன்.
“ஒவ்வொரு நாளும் இதைச் சாப்பிடலாமே. இடைக்கிடை காரசாரமாய் சமைச்சுக் குடுக்கலாம்தானே. அம்மா என்னோட இருந்தால் நான் வடிவாய்ப் பாப்பன் ஆசைப்பட்டதெல்லாம் செஞ்சு குடுப்பன். அதுக்கு என்ர மனிசன் விடமாட்டாரே”
திவ்யா சொன்னதைக் கேட்டதும் எல்லாம் உன்னாலதானே என்று கேட்க நினைத்தாலும் பேசாமல் இருந்தேன். மாமியின் கண்களில் திவ்யாவுடன் போய் இருக்கும் விருப்பம் தெரிந்தது. மருமகனின் பிடிவாதம் தெரிந்ததால் கேட்கவில்லை. தன் ஆதங்கத்தை திவ்யாவுடன் சேர்ந்து என்னிடம் காட்டினா.
பரந்தனில் இருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள கிளிநொச்சியில்தான் திவ்யாவின் வீடு. அடிக்கடி இங்கு வருவாள். தாயை நன்றாக கவனிப்பதில்லை என்று புலம்பிக் கொண்டும் என் சமையலை குறை சொல்லிக் கொண்டும் சாப்பிடுவாள். குமார் வேலை விஷயமாக கொழும்புக்கு போகும் நேரங்களில் வந்து மாமியை அழைத்துப் போவாள். திரும்பி வரக்கிடையில் இங்கு அனுப்பி விடுவாள். திவ்யா வீட்டுக்கு போய் வந்தாலே மாமியின் குணமும் கதையும் மாறிவிடும். நான் என்ன செய்தாலும் அதில் குற்றம் குறை கண்டு பிடித்து பேசிக்கொண்டே இருப்பா. நான் அதைக் கண்டு கொள்வதில்லை. வரதன் கவனித்து விட்டார்.
“எந்த நேரமும் என்னத்துக்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீங்கள். சுமதி உங்களை வடிவாய் பாக்கிறாள் ஏதாவது குறையிருந்தால் என்னட்ட சொல்லுங்கோ” என்றார்.
“ஏன் சரி பிழை நான் சொல்லக்கூடாதோ. அவளுக்காக கதைக்க வாறாய். உங்களை நம்பி இருக்கிறதாலதானே நீங்கள் சொல்லுறதெல்லாம் கேட்க வேண்டியிருக்கு. திவ்யாவோட போய் இருக்கலாமெண்டால் அவளுக்கு வந்த மனுசன் சரியில்லை. என்ன செய்யிறது”
சொன்னதைக் கேட்டதும் வரதனுக்கு கோபம் வந்து விட்டது.
“அவள் உங்களைப் பாப்பாளே. கொண்டு போய் இரண்டு நாள் சந்தோஷமாய் வைச்சிருப்பாள். பிறகு இங்கதான் கொண்டு வந்து விடுவாள்.அவளைப் பற்றி எனக்குத் தெரியாதே. வைச்சுப் பாக்கிற நல்ல குணம் இருந்தால் நாங்கள் சொல்லிறதைக் கேளாமல் அவள் ஏன்…”
“அவளைப்பற்றிக் கதைக்க மாமி கவலைப்படுவா விடுங்கோ. மாமிக்கு என்ன விருப்பமோ கேட்டு அதைச் செய்யுங்கோ”
இடையில் குறுக்கிட்டு பேச்சை நிறுத்தினேன். சிறிதுநேரம் கோபமாக முகத்தைத் தூக்கி வைத்திருந்தாலும் திவ்யாவின் குணம் தெரிந்ததால் விரைவில் சமாதானமாகி விடுவா.
இன்று திவ்யா தன்னுடன் வரச்சொன்னதும் ஆயத்தமாகி வரதன் வந்ததும் சொல்லிவிட்டு போவதற்கு காத்திருந்தார்கள்.
“அண்ணா எங்க போயிட்டார் அண்ணி”
“ஒரு கலைநிகழ்ச்சிக்கு கிளிநொச்சி போனவர் வாற நேரம்தான். வந்திடுவார்”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே கையில் பெரிய பார்சலுடன் ஓட்டோவில் வந்து இறங்கி உள்ளே வந்தார்.
“பெரிய பெட்டியோட வாறாய். உள்ள என்ன இருக்குது” மாமி கேட்டா.
“கலைநிகழ்ச்சி முடிய ரிக்கற் வித்து சீட்டு குலுக்கிப் போட்டதில எனக்கு முதல் பரிசு
இந்த கலர் ரிவி கிடைச்சுது” என்றார்.
“இங்கதான் புதுசாய் வாங்கின பெரிய ரீவி இருக்கே. பிறகேன் உதை கொண்டு வாறாய்”
“காசு குடுத்து வாங்கினானே கிடைச்சுது கொண்டு வந்தன்”
“அண்ணா எங்கட வீட்டில இருக்கிறது பழைய ரீவி. வாங்கி அஞ்சு வருசமாச்சு. நான் இதை கொண்டு போகட்டே”
திவ்யா இங்கு வரும்போது அவளுக்குப் பிடித்ததாய் ஏதாவது கண்ணில் பட்டால் எடுத்துக் கொண்டு போவது அவளுக்குப் பழகி விட்டது.
“கட்டின வீடு பாக்கப் போகேக்க ஏதாவது குடுக்க வேணும்தானே. அவள் ஆசைப்பட்டு இதைக் கேக்கிறாள் குடுங்கோவன்” மாமி சொன்னதும் வரதன் என்னைப் பார்த்தார்.
“வேண்டாம். வேற ஏதாவது வாங்கிக் குடுப்பம் இது இருக்கட்டும். அறைக்குள்ள வைக்க சின்ன அளவான ரீவி” என்றேன்.
“இருக்கிற ரீவியில பாக்க உனக்கு நேரமில்லை. எந்த நேரமும் வேலை எண்டு ஓடித் திரியிறாய். அறைக்குள்ள வைச்சுப் பாக்கப் போறியோ” மாமி கோபத்துடன் கேட்டா.
“அண்ணிக்கு விருப்பமில்லை எண்டால் வேண்டாம். பழைசையே வைச்சிருக்கிறன்”
இப்படிச் சொன்னால் நான் தருவேன் என்று நினைத்திருப்பாள். வழக்கமாய் அதுதானே நடக்கிறது. நான் வரதனிடம் சொன்னேன்.
“இந்த ரீவி எனக்கில்லை மாமிக்கு. ஆசையாய் எல்லா நிகழ்ச்சியும் பாப்பா. இண்டைக்கு காலமையும் மாமியைப் பாக்கவிடாமல் பிள்ளையள் சண்டை. அவங்களையும் பாக்கவிடாமல் தடுக்கேலாது. எங்களிட்ட ஆக்கள் வந்தால் பாத்த குறையில ரீவியை நிற்பாட்டுறது. அவான்ர அறையில வைச்சால் மாமி விருப்பின நேரம் போட்டு பாப்பா. அதாலதான் சொன்னேன்”
மாமி இதை எதிர்பார்க்கவில்லை. அம்மாவுக்கு என்றதும் திவ்யாவாலும் திரும்பக் கேட்கமுடியவில்லை.
“அம்மாவை நான் கூட்டிக் கொண்டு போறன். புதன் கிழமை எல்லாரும் வாங்கோ. இவர் நிற்பார் வீட்டை பாத்திட்டு நல்லாயிருக்கு எண்டு சொன்னால் சந்தோஷப்படுவார். திரும்பி வரேக்க அம்மாவையும் கூட்டிக் கொண்டு வரலாம். அம்மாவை வீட்டில இருக்க விடமாட்டார். அவரைப்பற்றித் தெரியும்தானே”
திவ்யா சொன்னதைக் கேட்டு எனக்குள் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டேன்.
புதன்கிழமை திவ்யா வீட்டுக்குப் போனோம். வீட்டைச் சுற்றிக் காட்டினார்கள். பார்க்கும்போது அதன் அழகும் செழிப்பும் கண்ணில் படவில்லை. ஆத்திரமும் கோபமும் வந்து கண்ணை மறைத்தது. வீடு கட்டுவதற்கு செலவழித்த பணத்தைப்பற்றியும் அலங்காரத்துக்கு வாங்கிய பொருட்களின் விலைபற்றியும் சொல்லிக் கொண்டிருக்கும் திவ்யாவையும் குமாரையும் பார்த்தேன். குற்ற உணர்வு இல்லாமல் எப்பிடி இவர்களால் சந்தோஷமாக இருக்க முடிகிறது. நிம்மதியாக சாப்பிட முடிகிறது. மனம் குமுறியது. அனைத்து வசதிகளோடு இருந்த பிள்ளைகளின் அறையைப் பார்த்ததும் தாங்கமுடியவில்லை. பிள்ளைகளுக்கு குறையில்லாமல் பார்க்க தெரிந்தவர்களுக்கு பெத்த தாயையும் இப்படிப் பார்க்க முடியாதா… அம்மா என்னோடதான் இருக்கவேணும் என்று நினைத்தால் யாரால் தடுக்கமுடியும். பழியை அடுத்தவர் மீது போட்டு விட்டு நிம்மதியாய் இருக்க எப்படி முடிகிறது.
“அண்ணி வீடு எப்பிடியிருக்கு சொல்லுங்கோ. அம்மா ஆசைப்படுறா எண்டு ஒரு கிழமை இருக்க ஓமெண்டு சொல்லிட்டார்” சந்தோஷமாய் சொன்னவளை வெறுப்போடு பார்த்தேன்.
“நீயும் அவருக்கு ஓமெண்டு சொல்லிட்டியா” பட்டென்று நான் கேட்டதும் இருவரும் திகைத்து விட்டார்கள்.
“அவற்ர அம்மாவை நீ பாக்க மாட்டன் எண்டு சொன்னதாலதானே அவரும் உன்ர அம்மாவை வேண்டாம் எண்டு சொல்லுறார். நாலு பிள்ளையளைப் பெத்தும் உங்களை மாதிரி மற்றவையளும் பாக்கமாட்டன் எண்டு சொன்னதாலதானே கடைசிநாளை எதிர்பாத்துக் கொண்டு முதியோர் இல்லத்தில இருக்கிறா. உரிமையோட இருக்க வேண்டிய அம்மாவை இரக்கமில்லாமல் எங்கையோ விட்டிட்டு எங்களைச் சாப்பிட கூப்பிடுறீங்கள். நான் அம்மா இல்லாமல் ஏக்கத்தோட வளந்தனான் இப்ப அந்த இடத்தில மாமி இருக்கிறா. மாமியை அம்மாவாய் நினைச்சால் பிரச்சனையே வராது. மனதில இருந்ததை சொல்லிட்டன். என்னால இருந்து சாப்பிட ஏலாது நான் போறன் நீங்கள் இருந்து சாப்பிட்டு வாங்கோ” பதிலை எதிர்பாராமல் படியிறங்கி நடந்த என் கால்கள் மாமியின் குரல் கேட்டு நின்றன.
“நில்லு பிள்ளை நானும் வாறன் சேர்ந்து போகலாம்”
.
நிறைவு..
.
.
.
விமல் பரம்
நன்றி : சிறுகதை மஞ்சரி மாத இதழ் புரட்டாதி – 2021