டுபாயில் இன்று மாலை ஆரம்பமாகும் 2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உகலக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்தும், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆவுஸ்திரேலிய அணியும் மோதவுள்ளன.
நான்கு வாரங்களுக்கு முன்பு பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக ஓமன் நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தபோது நடப்பு டி-20 உலகக் கிண்ணத்துக்கான பிரச்சாரம் ஆரம்பமாகியது.
மேலும் 44 போட்டிகள், 11,153 ஓட்டங்கள் மற்றும் 485 விக்கெட்டுகள் பின்னர், இந்த பரபரப்பான போட்டியில் களம் கண்ட 16 நாடுகளில் இரண்டு மாத்திரம் இன்னும் எஞ்சியுள்ளன.
டுபாய் சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் உலகின் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
திருப்பங்கள், உயர்வு தாழ்வுகள் மற்றும் எதிர்பாராத முடிவுகளுக்கு பிறகு டி-20 உலகக் கிண்ணத்தை யார் எடுப்பார்கள் என்பதைத் தீர்மானிக்க இது ஒரு பொருத்தமான இறுதிப் போட்டியாகும்.
2019 ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியாளர்கள், உலக டெஸ்ட் சாம்பியன்கள் மற்றும் தற்போது 2021 டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியாளர்கள் என்று மூன்று வடிவங்களிலும் ஒரு குறுகிய காலத்தில் நியூஸிலாந்து உலகின் சிறந்த அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
அதேபோல் ஐந்து முறை ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள அவுஸ்திரேலிய அணியும் இறுதிப் போட்டி என்றாலே விஸ்வரூபம் எடுக்கும்.
ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தை இன்னும் வெல்லாத இரு அணிகளுக்கு இடையில் இடம்பெறும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.