நடப்பு டி-20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியுடானான தோல்வி மற்றும் முக்கிய பிடியெடுப்பு வாய்ப்பினை நழுவவிட்டதனால் எழுந்த விமர்சனங்களுக்கு பின்னர் முதன் முறையாக பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வியாழனற்று இடம்பெற்ற ஐ.சி.சி. 2021 டி-20 உலகக் கிண்ண இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவிடம் ஐந்து விக்கெட்டுகளினால் தோற்றது.
ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட்டின் எளிதான பிடியெடுப்பை ஹசன் அலி தவறவிட்டார். பின்னர் மேத்யூ வேட் மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை விளாசி தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் பின்னர் பிடி நழுவல் மற்றும் அதனால் உண்டான இழப்புக்காக வேகப்பந்து வீச்சாளரான அலி, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானர்.
2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானின் பயணத்தின் நட்சத்திரமான அலி, அங்கு முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உருவெடுத்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் முதன்முறையாக வாய் திறந்துள்ள அலி, சனிக்கிழமை தனது டுவிட்டர் பதிவில்,
ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் தொடர்ந்தும் தனக்கான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
“எனது செயல்திறன் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை, ஆனால் நடந்த சம்பவத்தினால் என்னை விட நீங்கள் அனைவரும் வருத்தமடைந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன்.
என்னிடமிருக்கும் உங்கள் எதிர்பார்ப்புகளை மாற்ற வேண்டாம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அதிகபட்சமாக சேவை செய்ய நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
அலியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் பலரிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.