அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (வயது 39). பாடகி, பாடலாசியர், நடிகை என பன்முகத் தன்மை கொண்ட இவர் இளம் வயதிலேயே தனது பாப் பாடல்கள் மூலம் உலகப் புகழ் பெற்றார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தனது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார்.
இதனால் தனது பொருளாதாரம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த எந்த ஒரு முடிவையும் எடுக்கும் உரிமை பிரிட்னி ஸ்பியர்சுக்கு மறுக்கப்பட்டது. குறிப்பாக தனது நீண்டகால காதலரான நடிகரும், உடற்பயிற்சி பயிற்சியாளருமான சாம் அஸ்காரியை (27) திருமணம் செய்து கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற கோர்ட்டில் கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர ஐகோர்ட்டு, பிரிட்னி ஸ்பியர்சின் நடவடிக்கைகளை அவரது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்படுத்துவதை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அவர் தனது காதலர் சாம் அஸ்காரியுடன் திருமணத்துக்கு நிச்சயம் செய்து கொண்டார். இது அவருக்கு 3-வது திருமணம் ஆகும். இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி பிரெண்டா பென்னி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பிரிட்னி ஸ்பியர்சை அவரது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக நீதிபதி குறிப்பிட்டார். இதன் மூலம் தொழில், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை சார்ந்த எந்த ஒரு முடிவையும் எடுக்கும் உரிமை பிரிட்னி ஸ்பியர்சுக்கு இனி உண்டு.