செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சித்திரைச் செவ்வானம் | சிறுகதை | கவிஜி

சித்திரைச் செவ்வானம் | சிறுகதை | கவிஜி

8 minutes read

அங்கே நிறைய முகங்கள் அவனுக்கு தெரிந்த முகங்களாக இருந்தன. சாவு வீட்டில் திருடனைப் போல உணர்ந்தான்.

இது அனேகமாக பத்தாவது முறையாக இருக்கலாம். யார் வந்தாலும் அவர்களோடு உள்ளே சென்று படுத்திருக்கும் அவளை அவனும் ஒரு முறை பார்த்து விட்டு, பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தான். வாசலில் அமர்வதும்….. உள்ளே எழுந்து கூட்டத்தோடு கூட்டமாக செல்வதும்…..கண்டிப்பாக யாராவது கவனித்திருக்க கூடும்.

சாவு வீட்டில் வீசும் பூ வாசத்துக்கு சொல் இல்லை. சாவு வீட்டில் கூடும் கூட்டத்துக்கு மையம் இல்லை. அவன் சொல்லும் அற்று மையமும் அற்று செவ்வானத்தின் இறந்த சடலத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்.

கண் கெட்ட பிறகு கவனித்தால் என்ன…..காட்டிக் கொடுத்தால் என்ன… என்பது போன்ற விட்டேத்தித்தனத்தில் தான் செவ்வானத்தின் இறந்த உடம்பு கண்கள் மூடிக் கிடந்தது. அவனுக்கு வாய் விட்டு அழ வேண்டும் போல இருந்தது. என்ன சொல்லி அழுவது. அவள் அவனுக்கு தோழி கூட கிடையாது. அவனுக்கு அவள் பழக்கமே கிடையாது. அவனுக்கு அவள் முகம் கூட நினைவில் இல்லை. இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த முகம் கூட அவனுக்கு புதிய முகமாகத்தான் இருந்தது. அவளுக்கும் அவனுக்கும் ஒரு எட்டு வயது வித்தியாசம்கூட இருக்கும். அவளை எப்போதோ சிறுவயதில் பார்த்தது. அதன் பிறகு இப்போது தான்… கடந்த மூன்று மாதங்களாகத்தான் அவனுக்குத் தெரியும். அதுவும் முகநூல் வழியாகத் தான் பழக்கம்.

ஒரு நாள் முகநூல் உள்பெட்டிக்குள், ” எப்படி இருக்கீங்க….?” என்று எடுத்ததுமே இரண்டாம் கட்ட பேச்சாய் வந்து விழுந்திருந்தது ஒரு கால மிச்சம்.

“யார்டா இது….!?’ என்று யோசித்துக் கொண்டே, “நலம்.. நீங்கள்…?” என்று பதில் அனுப்பி இருந்தான்.

அந்த முகநூலின் பெயர் ஒரு பொதுப்பெயராக இருந்தது. அதில் ஆண் என்றும் பெண் என்றும் பார்த்ததும் தெரியாவண்ணம் ஒரு வித பொதுப் பெயர்.. “செவ்வானம்” என்றிருந்தது. ப்ரோபயில் படமும் செவ்வானம் தான்.

“நலம்……நலமறிய ஆவல்…… வீட்டில் எல்லாரும் நலமா…” என்று ஆரம்பித்து….”சமீபத்திய உங்க ஸ்டேட்டஸ் எல்லாமே அற்புதமாக இருக்கிறது. உயர்தரமான எண்ணங்களை விதைப்பதாக இருக்கிறது. இன்னும் இன்னும் நீங்கள் உயரம் தொட வாழ்த்துக்கள் ” என்று பேசிக் கொண்டிருந்த ஒரு நாள் இரவில், ” நீங்க யார்னு தெரியலயே” என்றான். வார்த்தைகளில் கொஞ்சம் அசடும் வழிந்தது.

“இன்னும் என்னை தெரியலயா…?” அவள் வார்த்தைகளில் பொய் கோபம் மிளிர்ந்தது.

அவனுக்கு அவள் தன் ஊரை சேர்ந்தவள் என்று தெரிகிறது. ஆனால் யார் என்ன விபரம் என்று தெரியவில்லை. பேசும் விதத்தை வைத்து அவள் பெண் தான் என்று உறுதி செய்ய முடிகிறது.

இன்னாரின் மகள்.. இன்னாரின் தங்கை என்று சொன்னபோதும் அவனுக்கு அவளின் முகம் நினைவுக்கு வரவில்லை. அப்படி ஒரு பெண்ணை இதற்கு முன் சிந்தித்தது கூட இல்லை என்று அன்று இரவு நீண்ட நேரம் யோசித்தான். காத்திருந்த குளத்தில் தூண்டில் அசைக்கும் தூக்க சரிவு போல அந்த பெண்ணின் உருவம் அவனுள் நிழலாடியது.

சிறுவயதில்.. ஒரு 6 வயது பிள்ளையாக ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு கோவில் வளாகத்தில் அவள் ஒரு குட்டி யானையைப் போல ஓடி வந்த காட்சி அவன் மனதின் ஓரத்தில் இருந்து தோண்டி துழாவி எடுக்கப் பட்டது.

“அட, அந்தப் புள்ளையா இது…..! என்று சிந்தித்த மறுகணம் முகத்தில் ஒருவகை பூரிப்பு வந்து போனது. தானாக சிரித்தான். கண்களுள் காலங்கள் உருண்டன.

“ஹெலோ உன்னை எனக்குத் தெரியும்…!” என்றான்.

“ஓ…….! சூப்பர்……..யார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டீங்க…..?” என்றாள்.

“யார்கிட்டயும் இல்ல. நானே யோசிச்சு யோசிச்சு… பார்த்தேன். நீ நம்ம ஊர் கோயில் பக்கம் ஓடி வந்த காட்சி இன்னும் மனசுல இருக்கு…” என்று உற்சாகமாக கூறினான்.

“அப்போ இத்தனை வருசமும் உங்க மனசுல நான் ஓடிக்கிட்டே தான் இருந்திருக்கிறேன்……இல்லையா….! என்றாள். உடனே ஒரு கவிதையை சொல்ல அவளுக்கு இயல்பில் தெரிந்திருக்கிறது.

மிக தெளிவான ஆழமான அழகான பேச்சாக அவனுக்குப் பட்டது.

“இத்தனை தெளிவா எப்டி பேசற குட்டிப் புள்ள…..?” என்றான்.

“ஹெலோ கவிஞரே……குட்டிப் புள்ள இப்போ குண்டு புள்ள……” என்று சொல்லி…….” ஹா ஹா ஹா……” என்றும் எழுதி இருந்தாள்.

உள்பெட்டி நிறையத் தொடங்கியிருந்தது.

பின் ஒரு நாள்… அவன் திரும்பவும், நீ ஓடி வந்தது அப்டியே உள்ள பதிஞ்சிருக்கு. அது மூலமாத்தான் உன்னை இப்போ அடையாளப் படுத்த முடியுது. ஆனா……அதைத் தாண்டி உன் முகம் இப்ப எப்படி இருக்கும்னு எனக்கு தெரியல” என்றான்.

ம்ம்ம்” என்றவள்… ஏன் வேற எப்படியும் என்னை நினைவு வெச்சுக்கலயா…?” என்றாள். கேள்வியில் குறும்பு இருந்தது. ஓர் ஆர்வம் இருந்தது.

அவனுக்கு நிஜமாகவே அவள் பற்றிய ஒரு யோசனையும் இதுநாள் வரை இருந்தது இல்லை. இப்படி ஒரு பெண் இருக்கிறாள் என்றே அவனுக்கு தெரியாது. அவன் அவனின் ஊர் தொடர்பான எல்லாவற்றையும் விட்டு வெகு தூரம் வந்து விட்டவனாக இருந்தான். ஆனால் அவள் மிக தீர்க்கமாக, ” என்னை வேற எப்படியும் உங்களால உங்க நினைவுகள்ல இருந்து மீட்டெடுக்க முடியலையா…..?” என்று சொன்னது……எதுவோ பொருளோடு இருந்ததாக நம்பினான்.

அவன், ” இல்லையே…..” என்றேன்.

இரு நாட்கள் வேலைப்பளுவின் காரணமாக முகநூல் பக்கம் போக முடியவில்லை. அப்போது படக்கென்று ஒரு விஷயம் அவன் நினைவுக்குள் கொப்பளித்தது.

அவனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்த போது தூரத்து அக்கா ஒருவர் மூலமாக “இந்தப் பெண்ணை பார்க்கலாம்” என்று பேசியிருந்தது நினைவுகளில் படபடத்தது. ஏனோ அதன் பிறகு அவன் வீட்டில் அந்தப் பெண்ணைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேறு பெண் பார்க்க முடிவு செய்து விட்டார்கள். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அது பெரிய விஷயமாக இருந்திருக்கும். அவள் இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னது கூட திரும்பவும் நினைவுக்கு வந்தது.

“நான் எப்பவுமே உங்கள யோசிக்காம இருந்ததில்ல. போன பொங்கலுக்கு ஊருக்கு வந்தீங்கள்ல… அப்போ எங்க வீட்டை தாண்டி போகும் போது கூட ஜன்னல் வழியா பார்த்துட்டு தான் இருந்தேன். நான் எப்பவுமே உங்கள மறந்ததில்ல…”

அப்போ அந்தக் கல்யாண பேச்சு எடுத்த காலகட்டத்திலிருந்து அவள் அவனை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவனுக்கு ஒரு மாதிரி விஷயம் புரிந்து விட்டது.

அதனால் தான், ” வேற எப்டியும் என்னை நினைவு வெச்சுக்கலயா….!” என்று அழுத்தி அழுத்தி சொல்லி இருக்கிறாள்.

உடனே ஓடி சென்று உள்பெட்டியில் செய்தி அனுப்பினான். பதில் இல்லை. அன்று முழுக்க நிறைய செய்திகள் அனுப்பினான்.

“எனக்கு இப்ப தான் எல்லாமே ஞாபகம் வருது… உன்ன பொண்ணு பார்க்க என் போட்டோவெல்லாம் உங்க வீட்டுக்கு வந்துச்சு இல்லையா.. இப்போ தான் எல்லாமே புரியுது… ஏன் ஏதும் பேச மாட்டேங்கற…என்னாச்சு….”

அவளிடம் இருந்து பதில் இல்லை.

ஊர் நண்பன் வழக்கம் போல அலைபேசியவன்….” டேய்… ஊர்ல ஒரு சாவுடா…. அட நம்ம…….”

அவன் சொல்லிக் கொண்டிருப்பது… இரண்டு நாட்கள் முன்பு வரை முகநூலில் அவனோடு சாட் செய்து கொண்டிருந்த அந்த “செவ்வானம்” பற்றிய சாவு செய்தி தான்.

உள்ளே பரம்பொருள் உடைந்து நடுங்க… தாங்கொணா துக்கத்தில் ஊருக்கு கிளம்பி.. அவள் பிணத்தை சுற்றி சுற்றி.. நடந்து கொண்டேயிருக்கிறான்.

அவனுக்கு எல்லாமே ஒரு வகை போலி பாவனையாகவே இருந்தது. முகநூல் சாட் போலவே முகநூல் மரணம் என்பது போல ஒரு வித அழுத்தத்தை அந்த மரணம் ஏற்படுத்தவேயில்லை. என்ன மாயத்தின் விரிப்பாய் அவள் வந்தது, இப்போது செத்துக் கிடப்பது. இன்னும் தன்னிடம் சொல்ல என்ன நினைத்தாளோ…? ஒருவேளை அவள் அப்போதிருந்தே தன்னை காதலித்திருந்திருப்பாளோ….?

அவன் அந்த சாவு வீட்டில் உட்கார்ந்திருக்கும் பிணம் போல இருந்தான். சாம்பல் பூத்த முகத்தில் ஒரு நினைவு அவனை சுற்றிக் கொண்டே இருந்தது. “வேற எப்டியும் என்னை நினைவு வரலயா…?” என்ற வார்த்தைகள் அவனை ஓடிச் சென்று அவள் பிணத்தைக் கட்டிக் கொள்ளத் தூண்டியது.

வானம் சிவந்து கொண்டிருந்தது. அவளைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். பின்னால் நடக்கும் அரூபமாக அவன் செல்ல….அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்…..வீட்டுக் கூட்டத்தோடு முகம் வீங்க நின்றிருந்த சித்ரா.

மூன்று மாதங்களுக்கு முன் மளிகைக் கடைக்கு சென்று திரும்பிய போது முதுகை வளைத்து மூஞ்சூராக உள்ளாடை தெரிய வளைந்து நெளிந்து பைக் ஒட்டி வந்த ஒரு முள்ளம் பன்றி தலையன் அவள் மீது மோதி சுக்கு நூறாய் சிதறிப் போனான்.

அன்று சுயநினைவு தப்பிப் படுத்தவள்…. வெறிக்க வெறிக்க மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். எல்லாம் கை விட்ட காட்சி பொருளாகிப் போனாள். உற்ற தோழி சித்ரா ஒருமுறை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்க்க, அவள் தலையணை அடியில் ஒரு நைந்து போன புகைப்படம் இருந்தது. எடுத்து ஆச்சரியத்தோடு போட்டோவைப் பார்த்தவளுக்கு, மூளைக்குள் ஏதேதோ ஓடியது. உலுக்கி கேட்டாள். கண்கள் கலங்க வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள். அவள் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உடையவள் என்று சித்ராவுக்குத் தெரியும்.

அவள் அறையில் தேடியதில்… அவளின் காதலும் இன்ன பிற காரணங்களும்.. அந்த புகைப்படத்துக்கு சொந்தக்காரனான அவன் பற்றிய எல்லா செய்திகளும் கிடைக்க… அழுது கொண்டே அவளைக் கட்டிக் கொண்ட சித்ராவுக்கு அந்த இரவு முழுக்க அழ வேண்டி இருந்தது.

இந்த மரணத் தருவாயில் அவளுக்கு ஏதாவது நிம்மதியைத் தர வேண்டும் என்று மனதார நம்பினாள் சித்ரா.

முகநூலில்… “செவ்வானம்” என்று ஒரு கணக்கை ஆரம்பித்து….

அதன் பிறகு தான் அவனோடு பேசியது எல்லாம். ஒவ்வொரு நாளும்… தான் அவனோடு என்னெல்லாம் பேசினேன் என்று அழுது அழுது கூறினாள் சித்ரா. அவளும் கண்களில் நீர் வடிய பார்த்துக் கொண்டே கிடந்தாள். தன் தோழியின் காதலை இந்த மூன்று மாதமும் சித்ரா காதலித்தாள். அவனோடு இருந்த இந்த மூன்று மாதமும் அவள் உயிரோடு இருந்த நாட்கள் என்று அவளின் கண்ணீர் தாரை தாரையாய் தாலாட்டி சொட்டியது.

இன்று செவ்வானம் மரித்து விட்டாள்.

அவனும் ஒரு பிசாசைப் போல அவளை சுற்றி சுற்றி சொல்ல முடியாத துக்கத்தில்…..இனம் புரியாத தடுமாற்றத்தில்… ஒரு வகை பித்து நிலைக்குள் ஒரு நாள் முழுக்க செவ்வானத்தின் பிணத்தை வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்த அவனை எத்தனை காதலித்தாலும் தகும். யார் காதலித்தாலும் தகும்.

ஆனால் இனி காதலுக்கு வழி இல்லை. அவனை உள்ளுக்குள் வைத்துக் காதலித்த தோழியே இல்லை. இனி அவள் பெயரில் முகநூல் கணக்கெதற்கு…?

முகநூல் கணக்கை அழித்து விட்டு கணினித் திரையையே வெறித்துக் கொண்டிருந்த சித்ராவுக்கு அப்போது தான் கத்தி அழத் தோன்றியது. நேற்றிரவு அவளின் தோழி இறந்ததில் இருந்து இன்று மாலை அவளை அடக்கம் செய்யும் வரை ஒரு சொட்டு கண்ணீர் கூட சித்ராவுக்கு வரவில்லை. இப்போது தான்… உள்ளே எதுவோ வெடிக்க……அழுகிறாள். அழுகிறாள். அழுது கொண்டே இருக்கிறாள். தோழி செத்ததுக்கும், கூட அவளை அறியாமல் தானும் காதலித்து விட்ட அந்த காதலுக்கும் சேர்த்து….அழுது கொண்டே இருக்கிறாள்.

அன்றிரவு…. மணி பத்து இருக்கும்.

முகநூல் திறந்த அவனுக்கு வழக்கம் போல செவ்வானத்திடம் இருந்து, ” ஹாய்” செய்தி வந்திருந்தது.

உடல் நடுங்க…. முகம் வியர்க்க, “எப்படி……..செத்தவள் கணக்கிலிருந்து மெசேஜ்….!” என்று யோசித்துக் கொண்டே, அவனும் பயந்து கொண்டே பதிலுக்கு, ” ஹாய்” என்று டைப் அடிக்கும் அவன் கையில் எல்லாம் புரிந்த நடுக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

– கவிஜி

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More