ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உயர் நெடுஞ்சாலையை அரசாங்கம் திறந்து வைப்பதாகவும் குற்றம் சாட்டியது.
இந்த தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்களோ பொறுப்பென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையோ அல்லது நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையோ கூறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டத்தின் மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நபர்களின் குடியுரிமைகளை பறிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாகவும் இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது நீதித்துறை மற்றும் சட்டமியற்றும் செயல்முறையை முரண்பட வைக்கிறதென்றும் எனவே, இது இலங்கையின் அரசியலமைப்பின் 3 மற்றும் 4ஆவது சரத்தை மீறுவதாகும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கை அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான ஜனாதிபதியின் சத்தியப்பிரமாணத்தையும் மீறுவதாகும் எனவும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அமெரிக்காவினால் நடத்தப்படும் ஜனநாயகம் தொடர்பான மெய்நிகர் உச்சிமாநாட்டிற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படாததில் ஆச்சரியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கையை புறக்கணித்துள்ளார் என்றும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.