இலங்கைத் தமிழர்கள் மீது எனக்குத் தனிப் பாசம் உண்டு என்று பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். ஷியாமளாங்கனின் ‘அன்பே’ பாடல் வெளியீடு தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் புகழ் பெற்ற பல பாடல்களைப் பாடியவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். இவர் முக நூலில் கடந்த வாரம் வெளியிட்ட பதிவில் ‘நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்குத் தந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள், அவர்கள் மீது எனக்குத் தனிப்பிரியம் உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஷியாமளாங்கன் இசையில் பாடிய ‘அன்பே’ பாடல் இந்த மாதம் யூடியூபில் வெளியாகியுள்ளதை முன்னிட்டு முக நூலில் எழுதிய பதிவிலேயே ஸ்ரீநிவாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மதுரன் தமிழவேள் வரிகளில் ஸ்ரீநிவாஸ் பாடியிருக்கும் ஷியாமளாங்கனின் பாடல் :
சங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே முதலான முன்னணி இசைக்கலைஞர்களோடு இணைந்து வெற்றிப் படைப்புகள் பலவற்றைத் தந்தவர் ஷியாமளாங்கன்.
தற்போது வெளிவந்திருக்கும் ‘அன்பே’ பாடலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கையின் மிகப் பிரபலமான பாடல்களான ‘கிரி கோடு ஹிதட’, ‘பது பெம் பதும்’ முதலானவற்றுக்கு இசையமைத்தவர் ஷியாமளாங்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் வெளியாகும் படங்களுக்கும் வெப்தொடர்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
‘இசை நுட்பங்களை அறிந்த திறமை மிக்க இசையமைப்பாளரான ஷியாமளாங்கனோடு இந்த அழகிய பாடலில் பணி புரிந்ததையிட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று ஸ்ரீநிவாஸ் தெரிவித்திருக்கிறார்.
‘காதலின் எல்லாப் பரிமாணங்களையும் உணர்த்தும் உயிர்ப்புள்ள வரிகளை மதுரன் தமிழவேள் எழுதியிருக்கிறார்’ என்று பாடலாசிரியரையும் சிலாகித்துப் பேசியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ்.
சந்தம் தப்பாமல் இசையோடு இழையோடும் வரிகளைப் பாவலர் மதுரன் தமிழவேள் எழுதியிருக்கிறார். ‘தரைமீது இருகால்கள் பதியாமல் அலைகின்றேன் – புவியீர்ப்பின் கணிதங்கள் பிழையானதே’ என்ற மதுரன் தமிழவேளின் வரி இணையத்தில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.