மேட்டா நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க்கின் சொத்துமதிப்பு குறைந்துள்ளதால் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து அவர் 12 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்க பங்குச் சந்தைகளில் மேட்டா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்ததை அடுத்து, அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பேர்க் ஒரே நாளில் தனது சொத்து மதிப்பில் 31 பில்லியன் டொலரை இழந்திருக்கிறார்.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களை உள்ளடக்கிய மேட்டா நிறுவனத்தின் பயனர்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, அதன் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.
பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது.
மேலும் மேட்டாவில் முதலீடு செய்துள்ள பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் நியூயோர்க் பங்குச்சந்தையில் மேட்டா நிறுவன பங்கு பெரும் சரிவைக் கண்டது.
இதனால் மேட்டா பங்கின் விலை 26.39 சதவீதம் குறைந்துள்ளது.
ஒரே நாளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ள நிலையில், மேட்டா நிறுவனத்தில் 12.8 சதவீத பங்கினை வைத்துள்ள மார்க் சூக்கர்பேர்க்கின் நிகர மதிப்பு 82 பில்லியன் டொலராக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.