அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள தீவு நகரில் புகழ்பெற்ற மியாமி கடற்கரை உள்ளது. பகல் நேரங்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அந்த வகையில் நேற்று முன்தினம் மதியம் மியாமி கடற்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். அவர்களில் பலர் கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கடற்கரைக்கு மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடலில் குளித்துக்கொண்டிருந்தவர்களுக்கு சில மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடலில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு நீந்தி சென்று அதில் இருந்தவர்களை மீட்டனர். ஹெலிகாப்டரில் 3 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொருவர் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஹெலிகாப்டர் கடற்கரையில் விழுந்து நொறுங்கிய பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதேபோல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரைக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு அதிகாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.