செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை தனித்துவிடப்படும் பாதிக்கப்பட்ட மக்கள்? | நிலாந்தன்

தனித்துவிடப்படும் பாதிக்கப்பட்ட மக்கள்? | நிலாந்தன்

4 minutes read

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மூன்று மாவட்டங்களில் மூன்று வேறு அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது, யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வடபகுதிக்கான மாநாடு.இரண்டாவது,முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப் பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு. மூன்றாவது,கிளிநொச்சியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி கோரிய ஒரு கவனயீர்ப்புப் போராட்டம்.

இம்மூன்றும் ஒரே நாளில் இடம் பெற்றன. இதில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு ஒப்பீட்டளவில் அதிக தொகையினர் வந்திருந்தார்கள். மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கானவர்கள் வாகனங்களில் ஏற்றி இறக்கப்பட்டதாகவும், அதற்கு அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த மைதானத்தில் கூடி இருந்தார்கள்.

இரண்டாவது நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு. இதிலும் ஒப்பீட்டளவில் மண்டபம் நிறைந்த தொகையினர் பங்குபற்றியிருந்தார்கள். வெற்றிகரமாக இடம்பெற்ற இந்த மாநாடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அண்மைய மாதங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட மூன்றாவது பெரிய பொது நிகழ்வு ஆகும். குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை.கிட்டு பூங்கா ஆர்ப்பாட்டம் ஆகியவை ஏனைய இரண்டு நிகழ்வுகள் ஆகும்.

மூன்றாவது நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய பிரம்மாண்டமான கவனயீர்ப்புப் போராட்டம் என்று அழைப்பு வந்தது. ஆனால் அதில் கிட்டத்தட்ட 200 பேர்கள்தான் கலந்து கொண்டார்கள். பொத்துவில் பொலிகண்டி வரை மக்கள் அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான வேலன் சாமியாரும் சிறீதரன், மாவை சேனாதிராஜா,சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட மிகச்சிலரைத் தவிர பெரும்பாலான அரசியல்வாதிகள் அந்நிகழ்வில் பங்குபற்றவில்லை. மக்களும் அதிகளவு பங்குபற்ற றவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் தலைவர்களில் ஒருவராகிய லீலாவதி மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொள்ளாததையிட்டு அதிருப்தி தெரிவித்திருந்தார். அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்களில் அநேகர் பங்குபற்றவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.இப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அரசியல்வாதிகள்தான். ஆனால் மிகக் குறைந்த தொகை அரசியல்வாதிகள்தான் அன்றைய கவனயீர்ப்பில் காணப்பட்டார்கள் என்றுமவர் கூறினார்.அது ஒரு பிரம்மாண்டமான கவனயீர்ப்பு அல்ல.

அன்று நடந்த மூன்று நிகழ்வுகளிலும் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த தொகையினர் பங்குபற்றியது அதில்தான். ஆனால் அதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு போராட்டம். அது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு போராட்டமும்கூட. கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக போராடும் ஒரு தரப்பு அதுதான். மிகச்சில முதிய அன்னையர்கள் காணாமல் போன தமது உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னைய ஆண்டுகளில் நடந்த இதுபோன்ற கவனயீர்ப்பு போராட்டங்களில் அதிக தொகை மக்களும் கட்சிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் சிவில் சமூகங்களும் பங்கு பற்றுறுவது உண்டு. ஆனால் இம்முறை அவ்வாறான பங்களிப்புக்கள் எவையுமின்றி அக்கவனயீர்ப்புப் போராட்டம் நடந்து முடிந்தது.

வடக்கில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு மாவட்டங்களில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகளையும் தொகுத்து பார்க்கும்பொழுது என்ன தோன்றுகிறது? மக்கள் பங்களிப்பு என்று பார்த்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டைத்தான் முதலாவதாகக் குறிப்பிடலாம். ஆனால் அதில் கலந்து கொண்ட பலரும் உண்மையான கட்சித் தொண்டர்கள் அல்லவென்றும், அரச வளங்களைப் பயன்படுத்தி அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் உண்டு.வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் அவ்வாறு ஏற்றி இறக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது ஒரு புதிய விடயமல்ல. கடந்த 30 ஆம் திகதி கிட்டு பூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் அவ்வாறு ஒரு தொகுதி மக்கள் வாகனங்களில் ஏற்றி இறக்கப்பட்டதாக ஒரு விமர்சனம் உண்டு. பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு மக்களை ஏற்றி இறக்குவது என்பது தென்னாசிய ஜனநாயகத்தின் ஒரு முக்கிய பண்பு. ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் போன்ற மக்கள் மயப்பட்ட பொது நிகழ்வுகளின் வெற்றிகளுக்குப் பின்னால் எப்பொழுதும் ஒரு மிகப்பெரிய பட்ஜட் இருக்கும். தென்னிலங்கையில் இடம்பெறும் கட்சிக் கூட்டங்கள் எல்லாவற்றுக்கும் அவ்வாறான பட்ஜட் உண்டு. அண்மையில் அனுராதபுரத்தில் ஆளும் கட்சி நடத்திய பெரும் கூட்டத்துக்கும் ஒரு பெரிய பட்ஜட் இருந்தது. இப்பொழுது எதிர்க்கட்சிகள் அதற்குச் சவாலாக ஒரு பெரிய கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றன. அங்கேயும் நிச்சயமாக பட்ஜட்றின் அளவுதான் கொண்டுவரப்படும் கூட்டத்தின் அளவையும் தீர்மானிக்கும். அதிகம் போவான் ஏன் ? தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுக தமிழ் நிகழ்வுகளின் போதும் அவ்வாறு ஒரு பட்ஜட் இருந்தது. எனவே மக்கள் மயப்பட்ட எல்லா அரசியல் நிகழ்வுகளிலும் அவற்றின் வெற்றியை தீர்மானிப்பது பெருமளவுக்கு பட்ஜெட்டும்தான்

இப்படிப் பார்த்தால் கடந்த 16ஆம் திகதி யாழ். கிட்டு பூங்கா ஆர்ப்பாட்டம் இளங்கலைஞர் மண்டபத்தில் நடந்த ஆறு கட்சிகளின் கருத்தரங்குக்கு அப்படிப்பட்ட பட்ஜட் ஏதும் இருக்கவில்லையா? என்ற கேள்வி எழும். அது ஒரு கருத்தரங்கு. எழுச்சிப் போராட்டம் அல்ல. ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது இருப்பது தேர்தல் மைய அரசியல்தான். தேர்தல் மையக் கட்சிகள்தான். அரசியல் எனப்படுவது தலைகளை எண்ணும் அரசியல்தான். ஆனால் இளங்கலைஞர் மண்டபத்தில் கருத்தரங்கை ஒழுங்குபடுத்திய கட்சிகள் அதிக தொகை ஆட்களைத் திரட்ட வேண்டும் என்று திட்டமிடவில்லைப் போல் தெரிகிறது. அவர்கள் தெரிந்தெடுத்த மண்டபமே அதைக் காட்டுகிறது. அங்கே 400க்கும் குறையாத தொகையினர்தான் கூட. ஒப்பீட்டளவில் பெரிய கூட்டத்தை கூட்டுவது என்றால் வீரசிங்கம் மண்டபம்தான் பொருத்தமானது. அதைவிடப் பெரிய கூட்டம் என்றால் ஒரு பொது மைதானத்தை தெரிந்தெடுக்கலாம். கிட்டு பூங்காகூட சுமாராக இரண்டாயிரம் பேரை உள்ளடக்கும் ஒரு மைதானம்தான். எனவே தேர்ந்தெடுக்கப்படும் மைதானம் அல்லது மண்டபம் போன்றவை எவ்வளவு ஆட்களைத் திரட்ட போகிறோம் என்று குறிப்பிட்ட கட்சி முன்கூட்டியே மனதில் வைத்திருக்கும் ஒரு கணக்கைக் காட்டும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் இளங்கலைஞர் மன்றத்தில் கருத்தரங்கை ஒழுங்குபடுத்திய ஆறு கட்சிகளும் மிகப் பலவீனமான பட்ஜெட்டைக் கொண்டிருந்தனவா? அப்படி என்றால் ஆறு கட்சிகளின் பின்னணியில் நிற்பதாக குற்றம் சாட்டப்படும் இந்தியா அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கவில்லையா?

இவ்வாறாக கடந்த சில மாதங்களில் நடந்த பொது நிகழ்வுகளை தொகுத்து பார்த்தால், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அரசியல்வாதியும் தத்தமது பலத்தை நிரூபிப்பதற்காக அதிக தொகை மக்களை அரங்கிற்கு அல்லது மைதானத்திற்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை ஓரணியில் நின்று பலப்படுத்தும் நோக்கம் எதுவும் கட்சிகள் மத்தியில் இருப்பதாக தெரியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்திய அதே காலப்பகுதியில்தான் தமிழரசுக்கட்சியின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டமும் போய்க்கொண்டிருக்கிறது. அது முல்லைத்தீவில் முதலில் தொடங்கியது. இப்பொழுது நாடு முழுவதிலும் விரிவாக்கப்பட்டிருக்கிறது.அப்போராட்டத்தை சுமந்திரனே முன்னின்று நடத்துகிறார். ஆறுகட்சிகளாக இணைந்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக கோரிக்கையை அனுப்பிய கையோடு தமிழரசுக்கட்சி தனியாக ஏன் ஒரு கையெழுத்து வேட்டையைத் தொடங்கியது?

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் ஒருபுறம் சுமந்திரன் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இன்னொருபுறம் கட்சிகள் தனித்தனியாக மாநாடுகளையும் கூட்டங்களையும் ஒழுங்குபடுத்துகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் சாதாரண கவனயீர்ப்பு போராட்டமாக நடந்து முடிந்திருக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம்,காணிக்கான போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்துப் போராட்டங்களும் ஒரு மையத்திலிருந்து முடிவெடுக்கப்பட்டு ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் அனைத்து கட்சிகளையும் இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டியவை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் மிக அரிதாகத்தான் கட்சிகள் அவ்வாறு ஒன்றிணைந்துள்ளன.கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலப்பறிப்புக்கு எதிராக ஒன்றாக நின்றார்கள்.ஆனால், கட்சிகளாக ஆளுக்காள் மோதுகிறார்கள்.பொதுப்போக்கு என்னவெனில்,கட்சிகள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தும்,மாநாடுகளை நடத்தும், ஆர்ப்பாட்டங்களை நடத்தும் என்பதுதான். அதாவது தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுவதை விடவும் கட்சிகளைப் பலப்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More