செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மத்திய வங்கி ஆளுநரைச் சந்திக்காதது ஏன்? | ஹர்ஷ டி சில்வா கேள்வி

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மத்திய வங்கி ஆளுநரைச் சந்திக்காதது ஏன்? | ஹர்ஷ டி சில்வா கேள்வி

3 minutes read

அரசாங்கம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துநின்று தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண முயற்சிக்கின்றது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஓர் குழுவும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் மற்றொரு குழுவுமாகப் பிளவடைந்திருக்கின்றன. 

இருதினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் நிதியமைச்சரவையும் ஜனாதிபதியையும் சந்தித்திருக்கின்றார்களே தவிர, அவர்கள் மத்திய வங்கி ஆளுநரைச் சந்திக்காதது ஏன் என்ற கேள்வி எழுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துநின்று தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண முயற்சிக்கின்றது. 

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஓர் குழுவும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் மற்றொரு குழுவுமாகப் பிளவடைந்திருக்கின்றன. 

இருதினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் நிதியமைச்சரவையும் ஜனாதிபதியையும் சந்தித்திருக்கின்றார்களே தவிர, அவர்கள் மத்திய வங்கி ஆளுநரைச் சந்திக்கவில்லை. 

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவிகளைப்பெறும்போது அதுகுறித்த ஆவணத்தில் நிதியமைச்சரும் மத்திய வங்கி ஆளுநருமே கையெழுத்திடவேண்டிய பொறுப்பில் இருக்கின்றார்கள்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் வழங்கப்பட்ட பல்வேறு வரிச்சலுகைகள் மற்றும்  வரிநீக்கம், சர்வதேச நிதிச்சந்தையில் இலங்கை அதன் வாய்ப்பை இழந்துள்ளமை, வெளிநாட்டுக்கையிருப்பு உரியவாறு முகாமை செய்யப்படாமை, மிக உயர்வான வரவு, செலவுத்திட்டப்பற்றாக்குறை ஆகியவையே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இருப்பினும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கான எந்தவொரு செயற்திட்டத்தையும் தற்போதுவரை அரசாங்கம் முன்வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கூறியதாவது:

நாட்டில் தற்போது டொலருக்கான பற்றாக்குறை காணப்படும் நிலையில், இது பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக இயல்பாக இடம்பெற்றதா? அல்லது முன்கூட்டியே திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பலர் மத்தியில் காணப்படுகின்றது.

ஏனெனில் ஊழல், மோசடிகள் மூலம் சட்டவிரோதமான முறையில் திரட்டிய கறுப்புப்பணத்தை வங்கிகளின் ஊடாக செல்லுபடியாகக்கூடிய பணமாக மாற்றமுடியாது. 

எனவே கறுப்புப்பணத்தை மாற்றுவதற்காக தற்போதைய டொலர் பற்றாக்குறை நிலைவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்ததாக பொருளாதார மீட்சிக்கான ஆறுமாதகால செயற்திட்டமொன்றை கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் மத்திய வங்கி வெளியிட்டது. அச்செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த 12 பிரதான விடயங்களில் தற்போதுவரை வெறுமனே 2 விடயம் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

எனினும் பொருட்களின் விலைகள் குறைவடையும், பணவீக்கம் வீழ்ச்சியடையும், வெளிநாட்டுக்கையிருப்பு உயர்வடையும் என்பன உள்ளடங்கலாக அச்செயற்திட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பல்வேறு விடயங்களின் தற்போதைய நிலைவரம் அதற்கு முற்றிலும் முரணானதாகவே இருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நாம் பொருளாதார மீட்சிக்கான மாற்றுச்செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். 

அந்தச் செயற்திட்டம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரதும் நம்பிக்கையை மையப்படுத்தியதாகவே அமையும். ஏனெனில் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் தொடக்கம் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வரை பல்வேறு கட்டமைப்புக்களினதும் நிர்மாணப்பணிகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. 

அதன் காரணமாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய அனைவரும் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். 

எனவே ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எமது பிரதான கொள்கையாகும். அதேபோன்று எமது ஆட்சியின்கீழ் சுயாதீன வழக்குத்தொடுநர் காரியாலயமொன்றும் ஸ்தாபிக்கப்படும். 

அதன்மூலம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கொன்றை நீதிமன்றம் தவிர்ந்த சம்பந்தப்பட்ட தரப்பினர் வாபஸ் பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More