பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள மக்கள் யாரும் கைதுசெய்யப்படாததால் அதன் பாதக தன்மை சிங்கள மக்களுக்கு தெரியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத சட்டத்தின் பாதக தன்மை மற்றும் அதன் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் எவ்வாறான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது தொடர்பாக பலரும் எமது தரப்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக இந்த சட்டம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டாலும் தற்போது பல்வேறு பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் இந்த சட்டத்தின் கீழ் சிங்களம், தமிழ், முஸ்லிம் என யாரு கைதுசெய்யப்பட்டாலும் அவர்களின் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றாலும் நான் நீதி அமைச்சரிடம் கேட்பது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் சிங்கள மக்களில் யாராவது இந்த சட்டத்தின் கீழ் கைது சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றதா? ஒருவரையேனும் சிறையில் அடைத்திருக்கின்றதா? ஒரு சிங்களவரேனும் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்தவில்லை என்றே நினைக்கின்றேன்.
அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாதாக நிலைமையை சிங்கள மக்களுக்கு உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.
இது சாதாரண சட்டம் என்றே சிங்கள மக்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் என்றார்.