சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு ரணில் விக்ரமசிங்க கடிதம் எழுதியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் இரண்டு நாள் விவாதம் நடத்துமாறு கோரி விக்கிரமசிங்க சபாநாயகருக்கும் குணவர்தனவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தநிலையில் இந்த விவாதம், பசிலின் விரிவான முன்மொழிவுகளுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் அதில் வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே பசில் ராஜபக்ச கடந்த வாரம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது, இலங்கையின் சொந்த முன்மொழிவுகளைத் தயாரித்து, சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த முன்மொழிகளுடனேயே நாடாளுமன்ற விவாதம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதே ரணிலின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் கோரியுள்ளது.
இந்த விவாதம் ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் உறுதிப்படுத்தப்பட்ட திகதிகள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.