செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் ஆட்சியமைக்க யாரும் முன்வராததால் ஆட்சியை நாம் தொடர்கிறோம் | கெஹெலிய விசேட செவ்வி

ஆட்சியமைக்க யாரும் முன்வராததால் ஆட்சியை நாம் தொடர்கிறோம் | கெஹெலிய விசேட செவ்வி

11 minutes read

நேர்காணல் – ரொபட் அன்டனி 

  • ரணில் திறமையானவர் 
  • மஹிந்த இன்னும் ஈடுபாட்டுடன் செயற்படவேண்டும் 
  • ஹர்ஷ தகுதியானவர் என்பதனை பேச்சில் காட்டுகிறார் 
  • பஷில் நிதியமைச்சை எடுக்காமல் இருந்திருக்கலாம் 
  • ஜனாதிபதி நம்பிய சிலர் அவரை ஏமாற்றிவிட்டனர்  

எரிபொருள் எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளுக்கு தீர்வுகண்டால் மக்களின் போராட்டங்கள் நி‍றைவு ‍பெற்றுவிடும்.  ஆனால்  ஜனாதிபதி பதவி விலகமாட்டார். எந்த நெருக்கடியானாலும் அது அரசியலமைப்புக்கு உட்பட்டே தீர்க்கப்படவேண்டும் என்று  பொதுஜன பெரமுனவின்   பாராளுமன்ற   உறுப்பினர்  முன்னாள் அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார்.   

அமைச்சரவை  பதவி விலகினால் எம்மால் 113 ஐ க்காட்டி   ஆட்சி நடத்த முடியும் என  சிலர் கூறினர். அதற்கு  சந்தர்ப்பம்  அளிக்கவே  நாம் விலகினோம்.   ரணில் விக்கிரமசிங்க,  சஜித் பிரேமதாச   என  பலருக்கும்  நாம் இதனை கூறியுள்ளோம்.  ஆனால் அவர்கள்  இதனை நிராகரித்து விட்டனர். எனவே அரசியலமைப்பின்படி அரசை காப்பாற்றவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என்றும் அவர் அறிவித்தார்.  

தற்போதைய  நெருக்கடி நிலையில்  வீரகேசரிக்கு  வழங்கிய  விசேட  செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.   செவ்வியின்  விபரம்  வருமாறு:

கேள்வி: தற்போது  இந்த  மக்கள்  எழுச்சி   நெருக்கடி  நிலைமைக்கு  என்ன  காரணம்?

பதில்  : 1978 ஆம் ஆண்டிலிருந்து  இந்த நாட்டில்  மேற்கொள்ளப்பட்டு  வரும்  செயற்பாடுகளும்  அக்காலத்தில் இருந்து  நாட்டை  ஆட்சி  செய்தவர்களும்  காரணமாகும்.   கடந்த காலங்களிலும்  இதுபோன்ற   போராட்டங்கள்  இடம்பெற்றுள்ளன.  

கேள்வி: ஆனால் அவற்றில்  அரசியல்  பின்னணி ஒன்று  இருந்தது. இம்முறை   அரசியல்  பின்னணி இல்லாமல்  மக்கள்    போராடுகின்றனரே?

பதில்: இல்லை  இங்கும்  ஒரு  அரசியல் நடவடிக்கை இருக்கின்றது  .   ஜே.வி.பி. யின்  அநுரகுமாரவின்  செயற்பாடு என்று  அது நன்றாகத் தெரிகின்றது .  தற்போதைய  இந்த பொருளாதார  நெருக்கடியினால்  பாதிக்கப்பட்ட மக்கள் நாட்டில் உள்ளனர்.   எரிபொருள், எரிவாயு, மின்சாரம்   இந்த மூன்று   விடயங்களே  நெருக்கடிக்கு காரணமாகும்.  இது   நடுத்தர மக்களை பாதிக்கின்றது.  

கேள்வி: அப்படியானால்  ஆரம்பத்தில் மக்கள்  தன்னிச்சையாக  போராட  வந்தார்கள்  என்றும்  தற்போது  அது  அரசியல் மயமாகியுள்ளது என்றும் கூறிகின்றீர்களா?

பதில்: மிகத் தெளிவாக  அதனைத்தான்  கூறுகின்றேன்.   மிரிஹானை  சம்பவத்தை  எடுத்தால்    நடுத்தர வர்க்க  மக்கள் தமது    எதிர்ப்பை   வெளிக்காட்ட வந்தனர். அது  ஜனநாயக  கட்டமைப்பில்  உள்ள  ஒரு உரிமை. ஆனால்  அதில் இடைநடுவில்  அரசியல்  ரீதியாக திட்டமிட்ட சிலர்  புகுந்து கொண்டனர்.  அதுதான்  தற்போதும் நடைபெறுகிறது.  அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். 

தேங்கியுள்ள சடலங்களை துரிதமாக அப்புறப்படுத்த நடவடிக்கை - சுகாதார அமைச்சர் |  Virakesari.lk

கேள்வி:  ஞாயிற்றுக்கிழமை  ஏன்  அமைச்சரவை  பதவி விலகியது. ?

பதில்:  அது  மக்களின் கோரிக்கையாக  இருந்தது.   அதாவது  அமைச்சரவை  பதவி விலகினால் எம்மால் 113 ஐ க்காட்டி   ஆட்சி நடத்த முடியும் என  சிலர் கூறினர். அதற்கு  சந்தர்ப்பம்  அளிக்கவே  நாம் விலகினோம்.   நாம்  தொடர்ந்து  அந்த  அழைப்பை   விடுத்து வந்தோம்.  அதாவது யாரிடம்   113   பெரும்பான்மை  இருக்கின்றதோ  அவர்கள்  ஆட்சி அமைக்கலாம்.  நாம்  இதனை   தனிப்பட்ட ரீதியில் கூட  கோரிக்கையாக விடுக்கின்றோம்.  ரணில் விக்கிரமசிங்க,  சஜித் பிரேமதாச   என  பலருக்கும்  நாம் இதனை கூறியுள்ளோம்.  ஆனால் அவர்கள்  இதனை நிராகரித்து விட்டனர். 

கேள்வி:  அமைச்சரவை  பதவி விலகவேண்டும்  என்ற  முடிவை  எடுத்த  ஜனாதிபதியா?

பதில்:  இது கூட்டாக  எடுத்த முடிவு 

கேள்வி: யார்  யோசனை முன்வைத்தது?

பதில்: அதில் நான் உட்பட  கூட்டாக  இந்த யோசனை  முன்வைக்கப்பட்டது.  

கேள்வி:  மக்கள் கோரியதால்  அமைச்சரவை  விலகியதாக  கூறினீர்கள் ஆனால்   மக்கள்  ஜனாதிபதியை  பதவி விலகுமாறு கோருகின்றனரே?

பதில் : ஜனாதிபதி வீடு செல்ல வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை அல்ல,  அது மக்கள் தமது அழுத்தத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு முறையாக இருக்கின்றது.  அந்த இடத்தில் நாம் அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்க வேண்டும்.  எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இவையே முக்கிய காரணங்கள்.  அந்த விடயங்களை நாம் விரைவாக பார்க்க வேண்டும்.  அதனால்தான்  நாம் எதிர்க்கட்சிக்கு 113 ஐ காட்டி அரசாங்கத்தை  அமைக்குமாறு கூறினோம்.  தற்போது தேவையானளவு டொலர்களை  திரட்டி சில தினங்களில் நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். (வியாழக்கிழமை இரவு அவர் இதனை குறிப்பிட்டார்)  எரிவாயு  பிரச்சினையும் சில தினங்களில் தீர்க்கப்படும்.  மின்சார பிரச்சினை சற்று வித்தியாசமானது.  காரணம் மழை பெய்யும் வரை நான்கு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியேற்படும். 

கேள்வி  நீங்கள் கூறுகின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் மக்களின் எதிர்ப்பு குறையும் என்று நினைக்கிறீர்களா?  

பதில் : இந்த பிரச்சனைகளை தீர்த்தவுடன்  உண்மையான போராட்டங்கள் நின்றுவிடும். ஆனால் அரசியல் எதிர்ப்புகள் தொடரும். 

கேள்வி : அப்படியானால் ஜனாதிபதி வீடு செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு என்ன நடக்கும்?  

பதில் : அது நடக்காது.  அதனை    நாங்கள் அறிவித்து விட்டோம்.  இந்த நாட்டில் காட்டு சட்டங்களை கையில் எடுத்து பல சந்தர்ப்பங்கள் உள்ளன.  முதலாவதாக 1971 ஆம் ஆண்டை குறிப்பிடலாம்.  அதன்பின்னர் 1978 இல் அதுபோன்ற அனுவம் ஏற்பட்டது,பின்னர் 1988 ஆம் ஆண்டும் அவ்வாறு முயற்சிக்கப்பட்டது.  இந்நிலையில்  நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும்.

 கேள்வி : நீங்கள் மறைமுகமாக மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது  என்று கூற வருகிறீர்களா?

 பதில் : அனுர குமார திசாநாயக்க சில தினங்களுக்கு முன்னர் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது எனக்கு அவ்வாறு தோன்றுகிறது.  இந்த போராட்டங்களின் பின்னணியில் அவர்கள் இருக்கிறார்கள்.  மூளை இருந்தால் பாடசாலை மாணவர்களை  வீதிக்கு அழைப்பார்களா? மக்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் பிள்ளைகளை வீதிக்கு அழைக்கக்கூடாது. மக்கள் விடுதலை முன்னணி  கடந்த காலங்களில் பல புரட்சிகளை செய்து அரசாங்கத்தை பிடிக்க முயற்சித்தது. அது  தோல்வி அடைந்தது.   தற்போது இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறது.   

கேள்வி : தற்போது எதிர்க்கட்சி அரசாங்கம் அமைக்கும் யோசனையை நிராகரித்திருக்கிறது.    அப்படியானால் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

 பதில் : தற்போதைய அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.  அதாவது இருந்ததைவிட குறைந்த அளவிலான அமைச்சரவை உறுப்பினர்களுடன் செலவுகளை குறைத்து  அரசாங்கத்தை நடத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.  நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

 கேள்வி : அந்த அரசாங்கம் எவ்வாறு அமையும்?   பிரதமர் யார் ?

பதில் : அதனை தற்போது கூற முடியாது.  ஒரு சிறிய அமைச்சரவையை உருவாக்கி பயணிக்கலாம்.   எந்த  மாற்று திட்டமாக இருந்தாலும்  அரசியலமைப்பு ரீதியாக இடம்பெறவேண்டும்.  இந்த விடயத்தில் மக்களிடம் நாம் மன்னிப்பு ‍கேட்க வேண்டும்.  அதனை அலி சப்ரி  பாராளுமன்றத்தில் பகிரங்கமாக  கூறினார். இன்னும் சில தினங்களில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்பது எனது நம்பிக்கையாகும். 

கேள்வி : தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தம் அரசாங்கத்திடம் இல்லையா?

 பதில் : அரசியலமைப்பை மீறி தேர்தலுக்கு செல்ல முடியாது.  அப்படியானால்  150 எம்பிக்கள் கையொப்பமிட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும்.  அந்த யோசனையும் இன்னும் முன்வைக்கப்படவில்லை. 

 கேள்வி : எதிர்க்கட்சித் தரப்பில் அவ்வாறான யோசனை முன்வைத்தால் நீங்கள் அதற்கு இணங்குவீர்களா?  

பதில் : நாம் அதற்கு தயாராக இருக்கின்றோம்.  ஆனால் எதிர்க்கட்சி அதற்கு விருப்பம் இல்லை என்பது தெரிகிறது.

 கேள்வி : நீங்கள் சுகாதார அமைச்சராக இருந்தவர்.  நாட்டில் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு   உள்ளதாக தெரிவிக்கப்படுகிறதே? 

 பதில் : மருந்துகள் வைத்தியசாலையில் இல்லை என்று கூறமுடியாது.  சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது.  14 மருந்துகளில் ஐந்து மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது.  அதில் இரண்டு  மருந்துகள் கிடைத்துவிட்டன.  மூன்று மருந்துகள் விரைவில் கிடைக்கும்.   மருந்துகள் இல்லை என்று கூறமுடியாது.

 கேள்வி :ஆனால் பேராதனை வைத்தியசாலையில் மருந்து இல்லை என்ற ஒரு கடிதம் வெளியாகியது.  அதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் அது பரவி இந்திய வெளிவிகார அமைச்சர் கூட அதில் கருத்து வெளியிட்டிருந்தாரே?

 பதில் : உள்ளக ரீதியில் வெளியான ஒரு கடிதமே அவ்வாறு பகிரங்கப் படுத்தப் பட்டது.  அந்த  கடிதம் வந்ததும் இரண்டு மணி நேரத்தில்  மருந்துகள் கொடுக்கப்பட்டன.   

கேள்வி : அப்படி என்றால் ஏன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தது? 

பதில் : அவர்களும் நாடு போகிற போக்கில் பயணிக்க வேண்டுமே? 

கேள்வி :  சர்வதேச நாணய நிதியத்திடம்  செல்வீர்களா?

 பதில் : நிச்சயமாக நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வோம். டொலர் கடன்  உதவியை பெற்று பிரச்சினையை தீர்ப்போம்.  

 கேள்வி: ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நாம் இந்த நாட்டில் வாழ்ந்த விதம் இருக்கிறதல்லவா ?அந்த நிலை எப்போது வரும்?

பதில்  சில வாரங்களில் சில தினங்களில் அந்த நிலைமையை  நாங்கள் கொண்டுவருவோம்.  

கேள்வி:  ரணில் விக்ரமசிங்க தற்போது பிரதமராகுவது குறித்து பேசப்படுகிறதே? 

பதில் ரணில் திறமையானவர். ஆனால் அவரது திட்டங்களின் அடிப்படை கோட்பாடுகள் தவறாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.  அவருக்கு சர்வதேச தொடர்புகள் உள்ளன. அவரினால்  சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல முடியும்.  உலக வங்கிக்கு செல்லமுடியும்.  பிரச்சினைகளை எதிர்வுகூறக்கூடிய திறமை உள்ளது.  ஆனால் அதில் ஏதோவொரு குறை இருக்கிறது.  அது அந்த குறை என்று என்னாலும் தேட முடியாமல் இருக்கிறது.  அவரின் திறமையில் எமக்கு பிரச்சனை இல்லை.  அவருக்கு  திறமை இயலுமை ஆற்றல் இருக்கின்றது. 

கேள்வி: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்பட வேண்டுமா? 

பதில்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்பட வேண்டும் என்றே நானும் கருதுகிறேன்.  அந்த தேவை இருப்பதாகவே நான் கருதுகிறேன்.  புதிய அரசியலமைப்பில் அது தீர்க்கப்படும் என நான் கருதுகிறேன். 

கேள்வி: ஜனாதிபதியின் இரண்டு வருடங்கள் பணியாற்றினீர்கள்.  உங்களது மதிப்பீடு என்ன? 

பதில் சில நேரங்களில் அவர் நம்பிக்கை வைத்த சில குழுக்கள் அவரை ஏமாற்றிவிட்டன. 

கேள்வி: பிரதமர் தற்போது செயற்பாட்டு ரீதியாக ஈடுப‍டுவதில்லை என்று கூறப்படுகிறதே? 

பதில்  அதனை அவரிடம் தான்  கேட்க வேண்டும்.  ஆனால் ஒன்றை கூறுகிறேன்.  இதனைவிட பெரிய வகிபாகம் ஒன்றை பிரதமர் வகிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்.

கேள்வி:  உங்கள் அரசாங்கத்தில் அதிகளவு விமர்சனத்துக்கு உட்பட்ட நிதி அமைச்சர் பசில் தொடர்பில்?

 பதில் எனது மதிப்பீடு அவர் நிதியமைச்சர் பதவியை  எடுக்காமல் இருந்திருக்கலாம்.  பிரதமர் மஹிந்தவே நிதியமைச்சராக இருந்திருக்கலாம். 

கேள்வி: எதிர்க்கட்சியின் ஹர்ஷ டி. சில்வா ‍‍போன்ற   ஒருவர் தகுதியானவரா?

பதில்  அவர் தனது பேச்சில் திறமை இருப்பதை காட்டுகிறார்.  அதனால் அவருக்கு நாங்கள் அந்த சந்தர்ப்பத்தை கொடுத்து இருக்கிறோம்.  ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 

கேள்வி:  இரண்டு வருடங்களில் இவ்வாறான பிரச்சனை வரும் என்று கருதினீர்களா?

பதில்  மக்களின் தேவைகளை இவ்வாறு முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போகும் என்று நாம் நினைத்திருக்கவில்லை. 

கேள்வி: விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை   பதவி நீக்கியமையே இந்த பிரச்சனைக்கு காரணமா? 

பதில் இல்லை அவ்வாறு கூற  முடியாது.  அவர்கள் கூறுகின்ற   சில விடயங்களில் எனக்கு இணக்கப்பாடு உள்ளது.

கேள்வி : நீங்கள் அமைச்சரவையில் ஆவேசமாக பேசிய சந்தர்ப்பங்கள் உள்ளனவா? 

பதில் : நிதி அமைச்சருடன் பல பல விடயங்களில் நான் முரண்பட்டு இருக்கின்றேன்.  ஆவேசமாக பேசி இருக்கின்றேன். 

கேள்வி : மீண்டும் சுகாதார அமைச்சு கிடைக்குமா?

பதில் : நாம் எதையும் எதிர்பார்க்கவில்லை.  கிடைத்தால் அதனை செய்வேன். 

 கேள்வி : ஆர்ப்பாட்டக்காரர்கள் உங்கள் வீட்டுக்கும்  வந்தார்கள் அல்லவா?

 பதில்: ஆம் வந்தார்கள். நான் அப்போது கொழும்பில் இருந்தேன்.   ஆறு மணி அளவில் சிலர் வந்து எதிர்ப்பை காட்டிவிட்டு சென்றனர்.  அதன் பின்னர் ஒரு குழு வந்தது. குடிபோதையில் அவர்கள் வந்திருந்தனர். 

கேள்வி : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சுதந்திரக் கட்சியுடன் அரசிலிருந்து வெளி‍யேறியுள்ளாரே? 

பதில் : நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  

நன்றி – வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More