நேர்கண்டவர் – ரொபட் அன்டனி
19 ஐ கொண்டு வந்தால் எதிரணி ஆட்சியமைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வீரகேசரிக்கு செவ்வி
இந்த நெருக்கடி நேரத்தில் நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாட்டை நூறு வீதம் என்னால் செய்ய முடியும். நானே மங்கள சமரவீர எம்.பி.யுடன் பெல்ஜியம் சென்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பேச்சு நடத்தி ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கொண்டுவந்தேன். எமக்கு இந்த விடயத்தில் அனுபவம் இருக்கிறது. எம்மால் செய்ய முடியும்.
நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவே இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும். எனவே ஜனாதிபதி பதவி விலகி செல்லவேண்டும், அல்லது 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும். அதன் பின்னர் நாங்கள் ஆட்சியமைக்க தயாராக இருக்கின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார் .
செவ்வியின் விபரம் வருமாறு:
கேள்வி: தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்கு எப்படி தீர்வுகாண முடியும் என்று உங்கள் தரப்பு கருதுகின்றது ?
பதில்: தற்போதைய சூழலில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடியிலிருந்து வெளியே வரவேண்டியுள்ளது. அரசியல் நெருக்கடியில் இருந்து வெளியே வந்துதான் பொருளாதார நெருக்கடியை தீர்க்க வேண்டும். அதாவது மக்கள் நம்பிக்கை வைகக்கூடிய ஒரு அரசாங்கம் உருவாகவேண்டியது முக்கியமாகும் . ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டுள்ளது . மக்கள் சகல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் . அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கூறுகின்றனர் . எனவே ஜனாதிபதி பதவி விலகி செல்லவாரா? அல்லது என்ன நடக்கும் என்பதே கேள்வியாக உள்ளது.
கேள்வி: ஜனாதிபதி பதவி விலக தயாரில்லை என்று கூறியுள்ளாரே?
பதில்: ஜனாதிபதி பதவி விலகி செல்ல தயாராக இல்லையாயின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தை நீக்கி 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும். அதனூடாக ஒரு தீர்வை நோக்கி பயணிக்கலாம்.
கேள்வி: உடனடியாக 19ஐ மீண்டும் கொண்டுவந்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளனவா?
பதில்: அரசியலமைப்பில் 18ஆவது திருத்த சட்டத்தை ஒருநாளில் கொண்டுவர முடியுமாயின் ஏன் 19 ஆவது திருத்த சட்டத்தை கொண்டுவர முடியாது . 20 ஆவது திருத்த சட்டத்தை நீக்கி 19 ஆவது திருத்த சட்டத்தை ஒருநாளில் கொண்டுவர முடியும். அதாவது இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற உண்மையான எதிர்பார்ப்பு இருப்பின் செய்யலாம்.
கேள்வி: அப்படியானால் 19 ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்துக்கு அதிகாரம் கிடைத்தால் நீங்கள் எல்லோரும் இணைந்து அரசாங்கத்தை அமைக்க தயாரா?
பதில்: ஆளும் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாது. எம்மால் அரசாங்கத்தை பொறுப்பெடுத்து நடத்த முடியும். 19 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் எம்மால் இதனை செய்ய முடியும். நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தால் அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியாது.
கேள்வி: 19 ஐ கொண்டுவந்தால் எதிர்க்கட்சி தனித்து அரசாங்கத்தை அமைக்குமா?
பதில்: ஆம் நிச்சயமாக எங்களால் முடியும்.
கேள்வி: நீங்கள் 2020 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று கூறி வந்தீர்கள் அல்லவா?
பதில்: நான் இதனை தொடர்ச்சியாக கூறி வருகிறேன். 2020 நவம்பர் மாதத்தில் இருந்து இதனை கூறுகிறேன். ஆனால் நான் கூறியதை கேட்கவில்லை . அகம்பாவம் காரணமாகவே அவர்கள் அதனை ஏற்கவில்லை .
கேள்வி: தற்போது ஹர்ஷ டி சில்வா இதனை பொறுப்பெடுத்து நடத்த வேண்டும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றதே ?
பதில்: யார் என்ன கூறினாலும் இதற்கு ஒரு முறை இருக்கிறது. என்மீது நம்பிக்கை வைக்கின்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் அதனை செய்வதற்கு சட்டரீதியாக அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் .
கேள்வி: இப்படி போராட்டங்கள் காரணமாக தலைவர் ஒருவர் பதவி விலகுவது தவறான முன்னுதாரணம் என்று கூறப்படுகின்றதே?
பதில்: இதனை போன்றதொரு நிலைமை இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. மக்கள் புத்திசாலிகள். மக்களை இந்த இடத்துக்கு அரசாங்கமே தள்ளியது. அரசாங்கத்தின் தூரநோக்கமற்ற தீர்மானமே இந்த நிலைக்கு தள்ளியது. வரிகளை நீக்கி நாணயத்தை அச்சடித்து நாட்டை அழித்துவிட்டனர். இரசாயன உரத்தை தடை செய்து விவசாயத்தை அழித்துவிட்டனர். எனவே 21 மில்லியன் மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அந்த மக்களின் அரசாங்கத்தின் மீதான வெறுப்பு கடுமையாக இருக்கின்றது. அதனால்தான் எப்போதுமில்லாதவாறு மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகின்றனர். இதற்கு முன்னர் எந்த ஜனாதிபதியோ அரசாங்கமோ இவ்வாறு விமர்சனத்துக்கு உட்படவில்லை .
கேள்வி: ஐக்கிய மக்கள் அடுத்து உடனடி தேர்தல் ஒன்றுக்கு தயாராக உள்ளதா?
பதில்: நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவே இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும். எனவே ஜனாதிபதி பதவி விலகி செல்லவேண்டும், அல்லது 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும். அதன் பின்னர் நாங்கள் ஆட்சியமைக்க தயாராக இருக்கின்றது.
கேள்வி: இந்த இரண்டு தெரிவுகளையும் செய்யாமல் பயணித்தால் என்ன நடக்கும்?
பதில்: மேலும் பாரிய அளவில் நாடு நெருக்கடிகளை சந்திக்கும். நாம் நினைத்துப் பார்க்காத அராஜக நிலமை ஏற்படும் அதனை செய்ய வேண்டாம்.
கேள்வி: தற்போதைய பிரதமர் மஹிந்த முன்னாள் பிரதமர் ரணில் ஆகியோரின் வகிபாகம் எவ்வாறு அமையவேண்டும்.
பதில்: அவர்கள் இருவரும் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள். நாம் கூறுகின்ற இந்த தீர்வு திட்டங்களில் அவர்களுக்கும் ஒரு வகிபாகம் இருக்கலாம் அதனைவிட வேறொன்றையும் நாம் பார்க்கவில்லை.
கேள்வி: தற்போதைள நெருக்கடியில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்று உங்களுக்குத் தெரிகிறது:
பதில்: இது ஒரு பிரச்சினையல்ல என்பதை வெளிக்காட்டவே அரசு முயற்சிக்கின்றது. அடித்தால் அடிப்போம் என்கிறது. அது ஏமாற்று நடவடிக்கையாகவே அமையும். அதனை வைத்து பிரச்சினையைத் தீர்க்க முடியாது. மக்களின் கருத்து என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும் . அரசாங்கம் கூற முற்படுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக மக்களின் கோரிக்கை அமைந்திருக்கின்றது . மக்களின் கருத்தை செவிமடுக்காத அரசாங்கத்தினால் நீண்டகாலம் பயணிக்க முடியாது.
கேள்வி: உங்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்துனை் பேச்சுவார்த்தை ந டத்தி தற்போதைய நெருக்கடியை தீர்க்க முடியுமா?
பதில்: இந்த நெருக்கடி நேரத்தில் நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாட்டை நூறு வீதம் என்னால் செய்ய முடியும். நானே மங்கள சமரவீர எம்.பி.யுடன் பெல்ஜியம் சென்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பேச்சு நடத்தி ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கொண்டுவந்தேன். எமக்கு இந்த விடயத்தில் அனுபவம் இருக்கிறது. எம்மால் செய்ய முடியும்.
கேள்வி: பாராளுமன்றத்தில் ஹரீன் பெர்னாண்டோ உங்களை ஜனாதிபதியாக்கவேண்டும் என்று கூறினார். அதனால் கட்சிக்குள் உங்களுக்கு தலைவர் மத்தியில் அசெளகரியமான நிலைமை ஏற்பட்டதா?
பதில்: (சிரிக்கிறார்) நாம் நேர்மையான மனிதர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே இவற்றை நாம் தலைக்கு எடுக்கமாட்டோம். எமது அரசியல் கதாபாத்திரம் சகலருக்கும் தெரிந்தது.