ரம்புக்கனையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள கடந்த சில தினங்களாகவே நீண்ட வரிசை காணப்பட்டது.
எரிபொருள் விலை அதிகரிக்கும் வரை இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை வழங்காமல் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தி நேற்று முன்தினம் அதிகாலை மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.
விலை அதிகரிக்கப்படும் வரையில் எரிபொருள் பௌசரை குறித்த நிரப்பு நிலையத்திற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.
எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்திற்கு ரம்புக்கனை மற்றும் அதனை அண்மித்த பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்ததுடன், நேற்று (19) காலை 7 மணியளவில் ரயில் வீதியையும் மறித்தனர்.
பொலிஸார் தலையிட்டதையடுத்து காலை 11.30 அளவில் எரிபொருள் பௌசரொன்று ரம்புக்கனை நகரை அண்மித்தது.
அதிகரித்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய விரும்பவில்லை எனவும் பௌசரை மீண்டும் திரும்பி செல்லுமாறும் மக்கள் வலியுறுத்தினர்.
ரயில் வீதியில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த பௌசரின் சாரதியை அங்கிருந்து வௌியேறுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பின்னர் ரயில் வீதியையும் பிரதான வீதியையும் மறித்த மக்கள் சில மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், மற்றுமொரு எரிபொருளை ஏற்றிய பௌசர் ரம்புக்கனை நகரை அண்மித்திருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியின் பின்னர் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இரண்டு எரிபொருள் பௌசர்களும் நிரப்பு நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களும் அதனை சூழ்ந்துகொண்டனர்.
இதனையடுத்து, பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்டது.
கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பொலிஸார் பிரதான வீதிக்கு வந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்கினர்.
இந்த சம்பவங்களின் பின்னர் எரிபொருள் பௌசர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டின் பின்னர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நேற்றிரவு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.