செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் பிரதமராக பொறுப்பெடுக்குமாறு இதுவரையில் எவரும் கோரவில்லை | ரணில்

பிரதமராக பொறுப்பெடுக்குமாறு இதுவரையில் எவரும் கோரவில்லை | ரணில்

11 minutes read

யாரை பலிக்கடாவாக்குவது என்பதே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான  பிரச்சினையாகும். எனினும் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வே இங்கு முக்கியமாகின்றது. மறுப்புறம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை நிறைவேற்றப்பட்ட பின் ஏற்படும் மாற்றம் குறித்து எதிர்க்கட்சி தெளிவுப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியலமைப்பில் இடைக்கால அரசாங்கம் என்றதொரு விடயம் இல்லை. காபந்து அரசாங்கம் என்ற விடயமே உள்ளது. எவ்வாறாயினும் பிரதமராக பொறுப்பெடுக்குமாறு இதுவரையில் யாரும் என்னிடம் கோரிக்கை விடுக்க வில்லை எனவும் குறிப்பிட்டார்.

வீரகேசரி வார வெளியீட்டிற்கு வழங்கிய சிறப்பு  செவ்வியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் வழங்கிய செவ்வி வருமாறு,

கேள்வி : நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் : உண்மையாகவே நாட்டில் இன்று அரசியல் மற்றும் பொருளாதாரம் என இரு நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவை இரண்டுமே இன்று ஒன்றாகி அரசியல் மற்றும் பொருளாதார கலவை நெருக்கடியாகியுள்ளன. இதன் ஆரம்ப புள்ளியாக பொருளாதார நெருக்கடியே உள்ளது. இதன் தாக்கம் இன்று பெரும் எதிர்ப்பு அலையாக மாறி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்கும் போராட்டமாகியுள்ளது. 

அதேபோன்று  இந்த எதிர்ப்பு அலையின் அடுத்த நிலையாக முழு அரசாங்கத்திற்கு எதிரானதாக உருவெடுத்துள்ளது. இவ்வாறானதொரு அரசியல் – பொருளாதார நெருக்கடியை இலங்கை இதற்கு முன்பு எதிர்க்கொள்ள வில்லை.

கேள்வி : இரு நெருக்கடிகள் தொடர்பாக குறிப்பிட்டீர்கள். இதில் முதலில் தீர்க்கப்பட வேண்டியது எது?

பதில் : இரண்டையுமே விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகின்றது. ஏனெனில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே  நாட்டிற்கு பெரும் சவாலாகியுள்ளது. அடுத்த மாதம் ஆகுகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையும். 

எனவே இந்த சவாலை வெற்றிக்கொள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஏனெனில் அரசாங்கம் ஒன்று இருந்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட முடியும். யார் அரசாங்கம் ? எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது? என்பதே  தற்போதுள்ள பிரச்சினையாகின்றது.

கேள்வி : தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு நீங்கள் பரிந்துரைக்கும் தீர்வு யோசனை என்ன?

பதில் : நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளுக்கிடையில் ஒன்றிணைவு அவசியமாகின்றது. குறிப்பாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஏனெனில் தற்போது நாம் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி இதற்கு முன் இருந்ததில்லை. உணவு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வாழ்வாதார நெருக்கடி, நிறுவனங்கின் வீழ்ச்சி, வர்த்தகங்கள் பாதிப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகள் முடக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் வரிசையாக உள்ளன.

இவற்றை தீர்ப்பதற்கு வலுவான அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்றத்தில் இன்று யாருக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடும் – தொடர்பாடலும் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கு இடையில் காணப்பட வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரையில் நான் ஒருவரே பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன்.  ஆனால் அரச நிதி நிர்வாகத்தை பாராளுமன்ற வசப்படுத்தி அவற்றை முறையாக கையாளப்பட வேண்டும். அப்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதே போன்று பாராளுமன்றத்தில் தேசிய நிதி தொடர்பில் காணப்படுகின்ற குழுக்களை மேலும் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி : பதவி விலகுவது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவருகொருவர் விரல் நீட்டிக்கொள்கின்றனர். இது அரசாங்கத்திற்குள் தலைத்தூக்கியுள்ள மற்றுமொரு முக்கிய பிரச்சினை. இதனை நீங்கள் எவ்வாறு  நோக்குகின்றீர்கள்.

பதில் : யாரை பலிக்கடாவாக்குவது என்பதில் அவர்களுகிடையில் உள்ள பிரச்சினையே இதுவாகும். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வே இங்கு முக்கியமாகின்றது. மக்களுடன் பேசுவதில்லை. மறுப்புறம் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்த கவனம் செலுத்தவோ அல்லது அவர்களுடன் கலந்துரையாடல்களையோ முன்னெடுக்காது கதிரைகளை மாற்றுவதால் எவ்விதமான பலனும் ஏற்பட போவதில்லை.

கேள்வி : அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன ?

பதில் ; அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆனால் பிரதமருக்கு எதிராக கொண்டு வருகின்ற இந்த நம்பிக்கையில்லா பிரேரனையின் பின்னரான நிலை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பிரச்சினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கும் உள்ளன.

ஆனால் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையை சவாலுக்கு உட்படுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட உள்ள ஆவணத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவை தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பின்னரான நிலைமை குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அரசாங்கம் கலைந்துவிடும். எனவே அடுத்த கட்டம் என்ன என்பதை அறிய வேண்டியது முக்கியமானதொன்றாகும்.

கேள்வி : அரசாங்கத்தின் உத்தேச 21 ஆவது திருத்தம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் : அரசாங்கம் குறிப்பிடும் 21 ஆவது திருத்தத்தை நாம் இன்னும் காணவில்லை. பேச்சு மட்டத்திலேயே கூறுகின்றனர். இதற்கு முன்னர் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு மக்களுக்கு உணவளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 ஆவது திருத்தத்தை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். 19 ஆவது திருத்தத்தை மறுசீரமைத்து 21 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதனால் மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வோ உணவோ கிடைக்கப் போவதில்லை. விலைவாசியும் குறையப் போவதில்லை. எனவே இந்தியாவின் நிவாரணங்கள் முடிவடைந்த பின்னர் எரிபொருள் , உணவு மற்றும் மருந்து உள்ளிட்டவற்றை எங்கிருந்து பெற்றுக் கொள்வது?

மிக நெருக்கடியான காலப் பகுதியிலேயே நாம் உள்ளோம். எனவே இந்த பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து எவ்வாறு செயற்படு என்பது குறித்தே கருத்திற் கொள்ள வேண்டும்.

கேள்வி :  ஜனாதிபதி குறிப்பிடுகின்ற சர்வக்கட்சி இடைக்கால அரசிற்கு நீங்கள் ஆதரவளிக்க மாட்டீர்களா?

பதில் ; ஜனாதிபதி குறிப்பிடுகின்ற சர்வக்கட்சி இடைக்கால அரசு குறித்த யோசனை  என்னவென்று எமக்கு தெரியாது. இலங்கை அரசியலமைப்பில் இடைக்கால அரசு என்றதொரு விடயம் இல்லை. ஒரு அரசாங்கம் சென்ற பின் மற்றுமொரு அரசாங்கமே பதவிக்கு வரும். தேர்தல் காலங்களில் காபந்து அரசு காணப்படும். எனவே தற்போதுள்ள அரசாங்கத்தின் பின்னர் பொறுப்பெடுக்க கூடிய அரசாங்கம் குறித்து பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கிடையில் சரியான புரிதல் இருக்க வேண்டும். ஏனெனில் பல தரப்பகளினதும் ஆதரவு அந்த அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற வேண்டும்.

கேள்வி : நீங்கள் குறிப்பிட்டது போன்று, அவ்வாறானதொரு அரசாங்கத்தில் உங்களது பங்பளிப்பு எவ்வாறானதாக அமையும்?

பதில் : அவ்வாறனதொரு அரசாங்கம் வரும் பட்சத்தில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.

கேள்வி : பிரதமராக பொறுப்பெடுக்க கோரினால் ஏற்பீர்களா?

பதில் : பிரதமராக பொறுப்பெடுக்குமாறு இதுவரையில் யாரும் என்னிடம் குறிப்பிடவில்லை. தனியொருவனால் ஏற்கவும் முடியாது.

கேள்வி : சர்வக்கட்சிகளின் அரசு குறித்த ஜனாதிபதி கூறுகின்றார். பொறுப்பெடுக்க ஒருவர் இல்லை என்பதையும் அவரே கூறியுள்ளார். சர்வக்கட்சிகளின் அரசு எனும் போது நீங்களும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள்…

பதில் : நீங்கள் குறிப்பிடுவது காபந்து அரசாங்கமா  அல்லது அரசாங்கமா?

கேள்வி : அரசாங்கம்…….

பதில் : அவ்வாறெனில் இங்கு ஒரு பிரச்சினை உள்ளது. யார் முதலில் பதவி விலகுவது? பிரதமர் பதவி விலகுவாரா? அல்லது ஜனாதிபதி விலகுவாரா? அல்லது இருவருமே பதவி விலகுவார்களா? இந்த பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாது நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது.

கேள்வி : உண்மையாகவே நாட்டின் நெருக்கடிகள் இந்தளவு உக்கிரமடைய காரணம் என்ன? அரசியலமைப்பில் உள்ள குறைப்பாடுகளா அல்லது கொள்கை ரீதியான சிக்கலா ?

பதில் : அப்படியல்ல. பொருளாதார நெருக்கடிகளை மையப்படுத்தியதாகவே தற்போதைய நெருக்கடிகள் உள்ளன. நாட்டு மக்களுக்கு  உணவளிக்க அரசாங்கத்தால் இயலாது போனது. உற்பத்திகளை மேற்கொள்ள முடியாமல் போனது. பொருட்களின் விலைகள் அதிகரித்தன. நாட்டின் பொருளாதாரமும்  மக்களின் வாழ்வாதாரமும் ஒரே நேரத்தில் வீழ்ச்சியடைந்தன.

கேள்வி : நீங்கள் கூறிய பொருளாதார சார் யோசனைகளை அரசாங்கம் கண்டுக்கொள்ளாமை தான் இதற்க காரணமா? குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கான உங்களது வலியுறுத்தல் …..

பதில் : சர்வதேச நாணயத்திற்கு 2020 அல்லது 2021 ஆம் ஆண்டில் சென்றிருக்க வேண்டும். நாம் செல்ல வில்லை. அதன் விளைவுகளையே இன்று சந்திக்கின்றோம்.

கேள்வி : இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு எவ்வளவு காலம் செல்லும்?

பதில் : ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்று  கூற இயலாது. எனவே மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திற்குள் முதலில் தீர்வு காணப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண முதலில் நடவடிக்கை எடுக்கடுவதே தற்போதைய அவசியமாகும்.

ஏனெனில் மக்களுக்கு வாழ முடியாத நிலைமையே தற்போதுள்ளது. இதனை சரிசெய்யா விடின் நாட்டின் பொருளாதாரம் செயலிழந்து போகும். எனவே முதல் ஓரிரு வருடங்களில் ஸ்தீரமான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதன் பின்னர் பொருளாதாரத்துடன் தொடர்புப்பட்ட வர்த்தகங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும். மறுபுறம் தற்போதுள்ள பொருளாதார வியூகத்தால் அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எனவே ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். அதாவது புதியதொரு பொருளாதார சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும். எனவே நான் குறிப்பிட்ட இந்த 3 விடயங்கள் குறித்து உடனடியாக செயற்பட்டு தீர்வு காண வேண்டும்.

கேள்வி : நீங்கள் குறிப்பிடுகின்ற திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒத்துழைப்பு கிடைக்குமா?

பதில் : நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கின்றேன். ஆதனை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் வேறு பிரச்சினை. பாராளுமன்றத்தில் நான் முன்வைக்கின்ற யோசனைகளை ஏற்பார்களா இல்லையா என்பது என்னால் கூறக்கூடிய விடயமல்ல.

கேள்வி : சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் ஒத்துழைப்புக்கள் தற்போதுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு போதுமானதாக இருக்குமா?

பதில் : முறையான திட்டமொன்றின் ஊடாக செயற்படும் போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான ஒத்துழைப்புக்களையும் நிவாரணங்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான சிறந்த திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். அவ்வாறு செயற்படும் போது உலக வங்கியால் கிடைக்கக் கூடிய நிவாரணங்களையும் அதிகரித்துக் கொள்ள முடியும். அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி : உங்களிடம் கேட்க விரும்பும் அடுத்த கேள்வி யாதெனில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை சீனா விரும்பவில்லை. இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது ?

பதில் : இங்கு இரு முறைமைகள் காணப்படுகின்றன. கடன் சுமையை தாங்கிக் கொள்ள கூடிய வகையிலான திட்டமொன்றை வகுப்பதென்பது தற்போது நமக்குள்ள அதிக கடன் சுமையை முகாமைத்துவம் செய்வதாகும். உண்மையாகவே எம்மால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிலான சுமையே உள்ளது. எனவே செலுத்த வேண்டிய கடன்களுக்கான கால எல்லையை நீடித்துக் கொள்வது முக்கியமானதாகின்றது. இதனூடாக நாட்டின் கடன்களை மெதுவாக குறைத்துக் கொள்வும் முடியும். இது சர்வதேச நாணய நிதியத்துடனான முறைமையாகும்.

ஆனால் சீன கடன்களில் இவ்வாறு இல்லை. மாறாக பெற்றுக் கொண்ட கடனை செலுத்துவதற்கு புதிய கடனை சீனா கொடுக்கும். இந்த முறைகளின் மோதல்களையே தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறானதொரு நிலைமை பல நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளன. சாம்பியா விவகாரத்தில் சீனா ஏனைய நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டது.

கேள்வி : அவ்வாறானதொரு விட்டுக் கொடுப்பை சீனா இலங்கைக்கும் செய்யுமா?

பதில் : இதனை கூற இயலாது. எனவே அரசாங்கம் இன்னும் திட்டத்தை முன்வைக்கவில்லை. திட்டத்தை முன்வைத்த பின்னரே கலந்துரையாட முடியும். அதே போன்று தனியார் பிணைமுறி சிக்கலே இங்கு அதிகமுள்ளன. இலங்கையின் மொத்த கடன் தொகையில் 47 சதவீதம் இதனையே சார்ந்துள்ளது. எனவே கடனுக்கான தவணை மற்றும் வட்டியை செலுத்துவதற்கான கால எல்லையை நீடிக்கவே அரசு முயற்சிக்கிறது. மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கடன்களாக 22 அல்லது 23 சதவீதம் உள்ளன. இதனைத் தொடர்ந்து சீனாவிற்கும் ஜப்பானுக்கும் செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் சுமார் மொத்த கடன் தொகையில் தலா 10 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது.

கேள்வி : இந்தியாவின் ஒத்துழைப்புக்கள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் : நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. மே மாதத்துடன் இந்த நிவாரணங்கள் முடிவடைகின்றன. இதற்கு மேலும் இந்தியாவினால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என்று நம்ப இயலாது. இதுவரையிலும் வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

கேள்வி : நீங்கள் கூறியதைப் போன்று இலங்கைக்கு பல வழிகளிலும் நெருக்கடிகளே உள்ளன. இவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது?

பதில் : நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே அரசாங்கத்தின் கடமையாகவும் உள்ளது.

கேள்வி : ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இழப்பின் பிரதிபலிப்பாகவா இந்த ஆர்ப்பாட்டங்கள் காணப்படுகின்றன?

பதில் : உண்மையாகவே மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை முழுமையாக சரிவடைந்துள்ளது. எனவே இதனை சரி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது. எனவே தான் தற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு துரித தீர்வை வலியுறுத்துகின்றேன். அரசாங்கமும் பாராளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளும் இந்த நெருக்கடியை தீர்ப்பதில் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும்

ஒவ்வொருவரும் வௌ;வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை தோன்றியுள்ளது. வீதியில் நின்று போராடும் மக்களின் வலியுறுத்தல்களுக்கும் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கும் வேறுபாடே உள்ளது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டு மக்களின் கோரிக்கைளை நிறைவேற்றுவதா அல்லது சம்பிரதாய அரசியலில் ஈடுபடுவதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி : மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலா நீங்கள் உள்ளீர்கள்?

பதில் : ஆம். மாற்றமடைய வேண்டும். நாட்டு மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுடன் நாட்டின் அனைத்து துறைகளிலும் பாரியதொரு மாற்றத்தையே போராட்டத்தில் ஈடுபடும் இளையோர் விரும்புகின்றனர். இந்த மாற்றம் உண்மையானதாக இருக்க வேண்டும். அரசியல் மாத்திரமல்ல. அதிகாரங்கள் உள்ளதாக கூறப்படுகின்ற பல துறைகளும் மாற்றமடைய வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டங்களின் கோரிக்கையாகவுள்ளது.

குறிப்பாக செயற்திறன் மிக்க அரசாங்கமொன்று வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. பழைமை வாய்ந்த அரசியலை மக்கள் நிராகரிக்கின்றனர். இந்த வலியுறுத்தல்கள் அந்த மாற்றங்களுடன் முடிவடையவில்லை. ஊடகங்கள் தொடர்பிலும் மாற்றங்களை விரும்புகின்றனர். அதனைப் போன்று அரச சேவைகளிலும் மாற்றம் வேண்டும் என்பதே புதிய எதிர்பார்ப்புக்களாகும். வெறுமனே அரசாங்கத்தை மாற்றும் கோரிக்கைகளாக மக்களின் எதிர்ப்புக்கள் அமையவில்லை.

கேள்வி : அடுத்து வரும் அரசாங்கம் புதிய கொள்கைகளுடன் செயற்பட வேண்டும் என்றா கூறுகின்றீர்கள்?

பதில் : அது மாத்திரமல்ல. பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் ஈடுபாடு காட்டுவதுடன் ஏனைய துறைகளிலும் மக்கள் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது புதிய அரசாங்கத்தின் பொறுப்பாகியுள்ளது. இந்த மாற்றங்களுக்காக வெளியில் உள்ளவர்களையும் இளையோர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே அரசியல்வாதிகளை மாத்திரம் உள்ளடக்கி மாற்றங்களை தேடுவதற்கு முயற்சிக்க வேண்டாம். அரசியல் மேடைகளுக்கு வெளியில் உள்ளவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

கேள்வி : அரசாங்கம் தவறிழைத்த இடம் இதுவா?

பதில் : பொருளாதார திட்டத்திலேயே அரசாங்கம் தவறிழைத்தது. இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய மாற்றங்களுக்கான தேவை வெளிப்பட்டுள்ளது.

கேள்வி : இந்த விடயத்தில் ஜனாதிபதியையா அல்லது பிரதமரையா குற்றஞ்சுமத்துகிறீர்கள்?

பதில் : முழு அரசாங்கமும் தவறிழைத்துள்ளது. பொருளாதார நெருக்கடியும் அதனூடான அரசியல் நெருக்கடிக்கும் ஜனாதிபதியும் அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும். இதனை வேறுபடுத்தி பார்க்க இயலாது.

கேள்வி : அழைத்தால் யாரும் வருவதில்லை என்பதே ஜனாதிபதியின் குற்றச்சாட்டாகவுள்ளது ?

பதில் : அவர் யாரை அழைத்துள்ளார் என்று கூறுங்கள் பார்க்கலாம்? ஆளுங்கட்சியினருக்கே ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஏனைய கட்சிகளுக்கு ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேடைகளின் உரை நிகழ்த்தி அழைத்ததற்காக அதனை உத்தியோகபூர்வ அழைப்பாகக் கருத முடியாது. அந்த அரசியல் எமக்கும் தெரியும்.

கேள்வி : அந்த பணியை ஜனாதிபதி சரிவர செய்யவில்லை என்பதா உண்மை?

பதில் : யாரையும் அழைத்தோ அல்லது எழுத்து மூலம் தொடர்பு கொண்டோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்புத குறித்து கருத்திற் கொள்ளவில்லை. சர்வகட்சி குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் நானும் சென்றிருந்தோம். அதன் பின்னர் எந்தவொரு அடுத்தகட்ட முன்னெடுப்புக்களும் காணப்படவில்லை. தற்போது அவ்வாறானதொரு சர்வகட்சி குழுவை அழைப்பதும் சிக்கலான விடயமாகும். ஏனெனில் அரசாங்கத்திற்குள் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. அந்த பிரச்சினைக்கு எம்மால் தலையீடு செய்ய முடியாது.

நேர்காணல் – லியோ நிரோஷ தர்ஷன்

நன்றி – வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More