குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம்.
கோடை என்றாலே உஷ்.. என்ன வெயில்!' என்று, முகம் சுளிக்கவேண்டாம். ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பது போன்ற உணர்வுடன்
ஜில்லென்று’ கோடைகாலத்தை ஜாலியாக கழிக்கவும் வாய்ப்பிருக்கிறது. கோடை காலத்தில் குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். காலை 11 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்கு பிறகும் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுமதிக்கவேண்டும். சூரியன் உச்சத்தில் இருக்கும் இதர நேரங்களில் இன்டோர் கேம்ஸ்களை வீட்டிற்குள்ளே விளையாட ஊக்குவியுங்கள்.
குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம். சூரிய கதிர்கள்பட்டு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த சன்ஸ்கிரீன் உதவும். சூரிய கதிர்களின் கடுமையான தாக்கத்தால் குழந்தைகளின் சருமத்தில் `சன் பர்ன்’ காயம் ஏற்பட்டால் அந்த இடங்களில் ஐஸ்கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த தண்ணீரையும் அந்த இடத்தில் ஊற்றலாம்.
குழந்தைகள் கடுமையான உஷ்ணத் தாக்குதலுக்கு உள்ளானால் தலைச்சுற்றல், மயக்கநிலைகூட ஏற்படலாம். அப்போது அவர்களுக்கு உடல்வெப்ப நிலை அதிகரிக்காது. ஆனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கோடைகாலத்தில் பருகும் தண்ணீரின் அளவு குறைவதுதான் இதற்கான காரணம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தையை உடனே காற்றோட்டமிக்க பகுதிக்கு கொண்டு சென்று, ரத்த ஓட்டம் அதிகரிக்கும் விதத்தில் தலையை சற்று தாழ்த்திவைக்கவேண்டும். குளிர்ந்த நீரில் முக்கிய டவலால் முகம் மற்றும் உடல்பகுதியை துடைத்துவிடுங்கள். சத்தமாக அழைத்தும் குழந்தை பதில் குரல் தராவிட்டாலும், சுவாசம் சரியாக நடந்துகொண்டிருக்கிறதா என்று பாருங்கள். சுவாசத்தில் தடை ஏற்பட்டிருந்தால் முதலுதவி அளித்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள்.
கோடையில் குழந்தைகளை போதுமான அளவு தண்ணீர் பருகவையுங்கள். அவர்களுக்காக சிப்பர் பாட்டில் வாங்கி, அதில் தண்ணீரை நிறைத்துக்கொடுங்கள். மதியத்திற்குள் குறிப்பிட்ட அளவில் பருகிவிட்டால் பரிசு தருவதாக கூறி, தினமும் தேவையான அளவில் நீரை பருகவைத்து விடுங்கள். எலுமிச்சை சாறில் உப்பும் தண்ணீரும் கலந்துகொடுங்கள். கஞ்சிதண்ணீர், மோர் போன்றவைகளையும் குடித்துக்கொண்டிருக்கச் செய்யலாம். பழச்சாறும் பருகக் கொடுக்கலாம்.
நன்றி | மாலை மலர்