நேர்காணல்:- ஆர்.ராம்
• பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள குழியின் ஆழத்தை சரியாகக் கூறும் ரணிலிடம் அதை கடந்து செல்வதற்கான உபாயமில்லை.
• வேறுபாடுகள் காணப்பட்டாலும் மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம்
• பாராளுமன்றுக்கு வெளியில் ‘மக்கள் போராட்ட சபைகள்’ உருவாக்கப்பட்டு எழுச்சி தொடரவேண்டும்
யார் இவர்?
சண்டிலிப்பாயை பூர்வீகமாகக் கொண்ட குணரட்னம் தம்பதியருக்கு 1965ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி கோகாலையில் பிறந்தார் பிறேம்குமார்.
இவருக்கு நான்கு சகோதாரர்கள் உள்ளதோடு தனது கல்வியை சென்.மேரிஸ் கல்லூரி மற்றும் பின்னவல மத்திய கல்லூரி ஆகியவற்றில் தொடர்ந்திருந்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் இணைந்து கொண்டவர் ஜே.வி.பியுடன் 1981 முதல் இணைந்து செயற்படலானார். இவருடைய மூத்த சகோதரர் ரஞ்சிதம் குணரட்னம் ஜே.வி.பி. அரசியல் குழு உறுப்பினர் என்பதோடு 1988இல் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளார்.
குமார் குணரட்னம் என்று அறியப்பட்ட இவர் பல்வேறு போராட்டங்களின் மூளையாக செயற்பட்ட நிலையில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றார்.
அத்துடன் சிட்னியில் வைத்தியர் சம்பா சோமரத்தினவை கரம்பிடித்த இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் 2012இல் நாடு திரும்பியவர் கடத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டார். ஜே.வி.பியின் உட்கட்சி மீளாய்வை அடுத்து அதிலிருந்து வெளியேறிய பின்னர் குறிப்பிட்ட குழுவினருடன் முன்னிலை சோஷலிசக் கட்சியினை ஆரம்பித்தவர் தற்போது அதன் பொதுச்செயலாளராக செயற்படுகின்றார்.
காலிமுகத்திடல் போராட்டத்தில் நாம் பின்னணியில் நின்று செயற்படவில்லை. எமது தரப்பினரும் அப்போராட்டத்தின் பொதுவான இலக்கை அடைவதற்காக முன்னிலையில் நின்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
தேவை ஏற்படுமாக இருந்தால் அப்போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கவும் நாம் தயாராகவே உள்ளோம் என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி: உங்களுடைய கட்சி பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் சந்திப்புக்களை நடத்தி வருவதன் பின்னணி என்ன?
பதில்: காலிமுகத்திடல் உட்பட நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபயவையும், ராஜபக்ஷக்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்துகின்றன.
எனினும், இப்போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் நிலைப்பாடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்க வேண்டும் என்பதாகும்.
ஜே.ஆரின் காலத்திலிருந்து நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு நீடிக்கின்றது.
அதேநேரம், தற்போது 21ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்வதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன. அது நடைபெற்றாலும் இல்லாது விட்டாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பொன்று சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக உருவாக்கப்பட வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பில் நாம் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக பேச்சுக்களை நடத்தி வருகின்றோம்.
கேள்வி: இந்த விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே நீங்கள் அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளீர்களா?
பதில்: ஆம், மக்கள் விடுதலை முன்னணிக்கும் எமது விடயங்களை தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களைச் சந்திப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.
கேள்வி: காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் செயற்படும் அரசியல் கட்சிகளில் ஒன்றாக முன்னிலை சோஷலிசக் கட்சியும் உள்ளதா?
பதில்: காலிமுகத்திடல் போராட்டத்தில் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், அரசியல் கட்சிகளைச் சாராதவர்கள் பேதங்களை கடந்து பங்கேற்றுள்ளார்கள்.
அந்த அடிப்படையில் எமது கட்சியினைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று செயற்பாட்டு ரீதியாகவும் வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.
காலிமுகத்திடல் போராட்டத்தில் நாம் பின்னணியில் நின்று செயற்படவில்லை. அத்துடன் அந்தப் போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்படுமாயின் அதற்கும் தயாராகவே உள்ளோம்.
கேள்வி: மே-9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து இடம்பெற்ற வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டமை, வீடுகள் சேதப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட கோரமான சம்பவங்களின் பின்னணியில் உங்களுடைய கட்சியினருக்கு பெருந்தொடர்புகள் இருப்பதாக ஆளும் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனரே?
பதில்: மாணவர்கள் இயக்கமொன்று கொழும்பில் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் தடை உத்தரவினை பெற்றுவிடும் நிலைமைகளே உள்ளன. அவ்வாறு இருக்கையில் மே-9 சம்பவம் தொடர்பில் புலனாய்வுத்துறையினர், பொலிஸார், இராணுவத்தினர் ஏன் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை.
அதேநேரம், அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்குபற்றியவர்கள் காலிமுகத்திடல் நோக்கி நகருகின்றபோது ஏன் தடுத்து நிறுத்தப்படவில்லை. முப்பது வருட யுத்தத்தினை கட்டுப்படுத்திய படையினர் ஏன் 24மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் அமைதியாக இருந்தனர்.இந்த வினாக்களுக்கு ஆளும் தரப்பிடம் பதில்கள் இல்லை.
ஏனென்றால், இந்த வன்முறை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதொன்றாகும். இதற்கு ஜனாதிபதி, பிரதமர், ஏனைய ஆளும் தரப்பு உறுப்பினர்கள், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் பொறுப்புக்கூறவேண்டியவர்கள். ஆகவே அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும், ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தினை தோற்கடிப்பதற்கு ஆளும் தரப்பினருக்கு வன்முறைகள் அவசியமாக இருந்தன.
வன்முறைகளை தூண்டுவதன் ஊடாக பொதுமக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கலாம் என்றே அவர்கள் கருதினார்கள்.
ஆனால் வன்முறை நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் அது நாடாளவிய ரீதியில் மக்களின் கோபத்துக்கு காரணமாகியது. அதேநேரம், வன்முறைச் சம்பவங்களுடன் எமக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. அவ்விதமான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
கேள்வி: புதிய அரசியலமைப்பின் ஊடாக முன்மொழியப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறிருக்க வேண்டும் என்பது உங்களின் நிலைப்பாடாகவுள்ளது?
பதில்: காலிமுகத்திடல் உட்பட பொதுமக்களும், எதிர்கால சந்ததியினரும் எழுச்சி கொண்டுள்ள தருணத்தில் அதற்கு சமாந்தரமாக சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் பரஸ்பரம் காணப்படும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும்.
அத்துடன் பாராளுமன்றத்துக்கு வெளியில், அந்ததந்த மக்கள் கூட்டத்தின் தனித்துவ அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான அவர்களின் தேவைப்பாடுகளை வெளிக்கொண்டுவரப்பட்டு புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
அத்துடன் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது, இனஒடுக்குமுறை மற்றும் இனவாதத்தினை களைவதாகவும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் மக்களின் பங்கேற்புடன் நிறைவேற்றப்படுவதாகவும் அமைய வேண்டும்.
கேள்வி: பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு வெளியில் நீங்கள் குறிப்பிடும் முயற்சிகள் வெற்றியளிக்குமா?
பதில்: சம்பிரதாய பூர்வமான வரையறைகளுக்குள் நின்று சிந்தித்தால் எமதுக்கு வேறெந்த வழிகளும் இல்லையென்ற எண்ணப்பாடே ஏற்படுகின்றது.
ஆனால் பாராளுமன்றத்திற்கு வெளியில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது யதார்த்தமானது. குறிப்பாக, பிரதமர் மஹிந்த பதவி விலகியுள்ளார்.
ராஜபக்ஷக்களைக் கொண்ட அமைச்சரவை விலகியுள்ளது. இவை முழுமையான தீர்வாக இல்லை என்றாலும் நடைமுறைச் சாத்தியமாகியுள்ளது.
ஆகவே, இலங்கை அரசியல் வரலாற்றில் முற்போக்கான நிலைமையொன்று ஏற்பட வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றத்திற்கு வெளியில் நடைபெறும் போராட்டங்கள் ‘மக்கள் போராட்ட சபைகளாக’ ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
அவை தொடர்ச்சியாக அனைத்து தரப்பினரினதும் பங்கேற்புடன் இடம்பெற வேண்டும். இதன்மூலமே பொதுமக்களும் வாக்களிப்புக்கு அப்பால் பொது இலக்குடன் அரசியலில் ஈடுபடும் கடமையை முழுமையாக நிறைவேற்றலாம்.
கேள்வி: புதிய பிரதமாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? அவரால் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்று கருதுகின்றீர்களா?
பதில்: ராஜபக்ஷக்களின் நண்பர் பிரதமர் பதவிக்கு வந்துள்ளார். இதனால் ராஜபக்ஷக்கள் பாதுகாக்கப்படுவார்கள். அத்துடன் பிற்போக்குத்தமான மெதமுலன ராஜபக்ஷக்களின் நிலைப்பாடுகளுக்கு மாறாக முதலாளித்துவ வர்க்கத்தின் அபிலாஷைகளை பூர்த்தியாக்கவல்ல முதலாளித்துவத்தின் பிரதிநிதியொருவராக உள்ள ரணில் பதவிக்கு வந்துள்ளார்.
அதேநேரம், சீனாவுடன் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் ரணிலின் நியமனம் அவசியமானதாக காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், ரணில் நெருக்கடிகளுக்கு தீர்வினைக் காண்பாரா என்று பார்த்தால் இல்லை. அவர் தற்போது பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள குழியின் ஆழத்தினை சரியாகக் கணித்துக் கூறுகின்றாரே தவிரவும் அவரிடத்தில் அக்குழியை கடந்து செல்வதற்கான உபாயங்கள் இல்லை.
ஆகவே அவ்விதமானரால் எவ்வாறு நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்க முடியும் என்பது கேள்வியாகின்றது. அத்துடன் இந்த நெருக்கடிகள் ஓரிரு வருடங்களில் நிறைவுக்கு வரப்போவதில்லை. அடிப்படையில் மாற்றம் இடம்பெறாத வரையில் நெருக்கடிகள் நீடிக்கப்போகின்றன.