நாட்டில் தற்போது சுமார் 4000 மெட்ரிக் தொன் பெற்றோல் , 5000 மெட்ரிக் தொன் டீசல் தொகை கையிருப்பில் உள்ளன.
எதிர்வரும் வாரங்களில் இவற்றை இறக்குமதி செய்வதற்காக திங்கட்கிழமை (4) வெவ்வேறு நிறுவனங்களுக்கு சுமார் 111 மில்லியன் டொலர் முற்பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
குறித்த முற்பணத் தொகைகள் செலுத்தப்பட்டால் 8 – 9 திகதிகளுக்கிடையில் கொரல் என்ற நிறுவனத்தினதும் , 11 – 14 ஆம் திகதிகளுக்கிடையில் விட்டோல் என்ற நிறுவனத்தினதும் டீசல் கப்பல்கள் வருகை தரவுள்ளன.
22 – 23 ஆம் திகதிகளுக்கிடையில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் பெற்றோல் கப்பலும் , 15 ஆம் திகதி கொரல் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கப்பலும் , 10 அல்லது 11 ஆம் திகதிகளில் உராய்வு எண்ணெய் கப்பலும் நாட்டை வந்தடையும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
வலுசக்தி அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பி;டுகையில்,
தற்போது 5274 மெட்ரிக் தொன் டீசல் கொலன்னாவ முனையத்தில் கையிருப்பில் உள்ளது. கடந்த 30 ஆம் திகதி ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 7500 மெட்ரிக் தொன் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக 11 மில்லியன் டொலர் முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய திருகோணமலை முனையத்திலிருந்து கொலன்னாவைக்கு குறித்த டீசல் வழங்கப்படும். அதற்கமைய ஒட்டுமொத்தமாக 12 774 மெட்ரிக் தொன் டீசல் இருப்பில் உள்ளது.
மேலும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 1414 மெட்ரிக் தொன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 2647 மெட்ரிக் தொன், சுப்பர் டீசல் 233 மெட்ரிக் தொன், விமான எரிபொருள் 500 மெட்ரிக் தொன், உராய்வு எண்ணெய் 27 000 மெட்ரிக் தொன் கையிருப்பில் உள்ளன. ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 7500 மெட்ரிக் தொன் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக செலுத்தப்பட்ட முற்பணம் தவிர மேலும் பல விநியோகத்தர்களுக்கு முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதோடு , சில நிறுவனங்களிடம் கப்பல்களுக்கு முற்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய விட்டோல் என்ற நிறுவனத்திற்கு 40 000 மெட்ரிக் தொன் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 30 ஆம் திகதி 28 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்திற்கு எதிர்வரும் 8 ஆம் திகதி மேலும் 49 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது. 8 ஆம் திகதி குறித்த தொகையை வைப்பிலிட்டதன் பின்னர் 11 மற்றும் 14 ஆம் திகதிகளுக்கிடையில் 40 000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளமைக்கு மேலதிகமாக மேலும் 4 கப்பல்களை வரவழைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக முதலாவது பெற்றோல் கப்பலுக்கு ஆரம்ப கட்டணமாக 19.95 மில்லியன் டொலர் கடந்த 30 ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இதற்குரிய கப்பல் எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதிகளில் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கப்பலுக்காக எஞ்சிய 19.95 மில்லியன் டொலரையும் 8 ஆம் திகதி செலுத்த வேண்டியுள்ளது. இந்த மேலதிக கொடுப்பனவு இந்திய கடன் திட்டத்தில் மீதமுள்ள 20 மில்லியன் டொலர் ஊடாக வழங்கப்படும்.
அடுத்தது கொரல் என்ற நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள முற்பதிவிற்கமைய 5 ஆம் திகதி (நாளை செவ்வாய்கிழமை) டீசல் கப்பலொன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 8 அல்லது 9 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் ஊடாக 40 000 மெட்ரிக் தொன் டீசல் கொண்டு வரப்படும். இதற்கான 66 மில்லியன் டொலரை கப்பல் வருகை தந்ததன் பின்னர் செலுத்த வேண்டும்.
விட்டோல் நிறுவனத்திற்கு மீண்டுமொரு டீசல் கப்பலுக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளது. 40000 மெட்ரிக் தொன் டீசலுடன் குறித்த கப்பல் எதிர்வரும் 11 – 14 ஆம் திகதிக்க இடையில் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு தம்மால் மேலும் இரு டீசர் கப்பல்களை இலங்கைக்கு அனுப்ப முடியும் என்று சனியன்று ஐ.ஓ.சி. நிறுவனம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு கப்பல் 15 – 17 ஆம் திகதிகளுக்குள் நாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு 50 சதவீத முற்பணத்தை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் ஏனைய கப்பல்களுக்கும் முற்பணம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்த கப்பலுக்கான 30 சதவீத முற்பணத்தை புதனன்று செலுவதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
இது தவிர மலேசிய அரசாங்கத்தின் தலையீட்டுடன் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 10 – 11 திகதிகளுக்கிடையில் மசேலிய நிறுவனமொன்றிடமிருந்து 50 000 மெட்ரிக் தொன் கப்பலொன்று வரக் கூடும்.
மேலும் கொரல் எனர்ஜி நிறுவனத்திற்கு உராய்வு எண்ணெய்க்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய 135 000 மெட்ரிக் தொன் உராய்வு எண்ணெய் கப்பல் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிறுவனத்திடம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி நாட்டை வந்தடையும் வகையில் பிரிதொரு உராய்வு எண்ணெய் கப்பலும் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட அனைத்து கப்பல்களுக்கும் நாளை (இன்று திங்கட்கிழமை) 111 மில்லியன் டொலர் முற்பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய இவ்வாரத்திற்குள் ஒட்மொத்தமாக 136.2 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. மத்திய வங்கி மற்றும் திறைசேரி என்பவற்றுடன் கலந்தாலோசித்து இவற்றை செலுத்துவதற்கான நடவடிக்கையை எவ்வாறேனும் முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றார்.