இலங்கை கால்பந்தாடட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் 5ஆம் கட்டத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (03) யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்துடனான போட்டியில் 10 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.
பெலிக்கன்ஸ் கழகத்துடனான போட்டியின் 31ஆவது நிமிடத்தில் சென. மேரிஸ் வீரர் கில்மன் ஜேசுராஜ் 2ஆவது மஞ்சள் அட்டைக்கு இலக்கானதால் அரங்கை விட்டு வெளியேற்றப்பட, எஞ்சிய 61 நிமிடங்களுக்கு அக் கழகம் 10 வீரர்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது.
போட்டியின் 16ஆவது நிமிடத்தில் ஒலாவேல் ஒலுவடாமிலெயார் போட்ட கோலின் உதவியுடன் சென். மேரிஸ் முன்னிலை அடைந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டதுடன் 21ஆம், 31ஆம் நிமிடங்களில் ஜேசுராஜ் மஞ்சள் அட்டைகளைப் பெற்றதால் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.
தொடர்ந்து 10 வீரர்களுடன் விளையாடிய சென். மேரிஸ் இடைவேளையின் போது 1 – 0 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 10ஆவது நிமிடத்தில் பெலிக்கன்ஸ் சார்பாக ஜெயகுமார் சாந்தன் கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
எவ்வாறாயினும் தனது சொந்த மைதானத்தை அனுகூலமாக பயன்படுத்தி வெற்றி கோலுக்கான முயற்சியில் சென். மேரிஸ் கடுமையாக இறங்கியது. இதன் பலனாக போட்டியின் 74ஆவது நிமிடத்தில் பெனல்டி ஒன்றை சென். மேரிஸ் ஈட்டியது.
அந்தப் பெனல்டியை செபமாலைநாயகம் ஞானரூபன் கோலாக்கி சென். மேரிஸ் கழகத்தை மீண்டும் முன்னிலையில் இட்டார்.
அதன் பின்னர் தடுத்தாடால் உத்தியைக் கையாண்ட சென். மெரிஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது.
எவ்வாறாயினும் போட்டி முடிவில் பெலிக்கன்ஸ் வீரர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பெலிக்கன்ஸ் சார்பில் முறையிடப்பட்டதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு செல்லும் அணிகள் முறையாக உபசரிக்கப்படாவிட்டால் மற்றைய அணிகளை அங்கு அனுப்புவது குறித்து இரண்டு தடவைகள் சிந்திக்க நேரிடும் என சம்மேளன அதிகாரி மேலும் கூறினார்.