துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான இலங்கை முற்றிலும் எதிர்பாராத விதமாக ஆப்கானிஸ்தானிடம் 8 விக்கெட்களால் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றத்துக்குள்ளானது.
இந்தத் தோல்வியினால் இலங்கை அணி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் சுப்பர் 4 சுற்றுக்கு அது தகுதிபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தப் போட்டியில் சகல துறைகளிலும் முழுமையான திறமையை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான், ஆரம்பம் முதல் கடைசிவரை ஆதிக்கம் செலுத்தியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 106 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 10.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இரண்டாவது சர்வதேச இருபது 20 போட்டியில் இலங்கை அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும்.
ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்துடன் மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடி பவர் ப்ளேயில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும் 7ஆவது ஓவரில் வனிந்து ஹசரங்க டி சில்வா வீசிய முதல் பந்தில் குர்பாஸ் 40 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 103 ஓட்டங்களாக இருந்தபோது இப்ராஹிம் ஸத்ரான் 15 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.
மஹீஷ் தீக்ஷனவின் பந்தை ஹஸ்ரத்துல்லா ஸஸாய் ஓங்கி அடித்தபோது பந்து நேராக சென்று தீக்ஷனவின் கையில் உராய்ந்தவாறு மறுபக்க விக்கெட்டை நெரடியாக பதம் பார்த்தது. அப்போது ஸ்தரான் ஒரு மீற்றருக்கு வெளியே இருந்ததால் ரன்அவுட் ஆனார்.
ஆனால், அடுத்த ஓவரில் ஹஸ்ரத்துல்லா ஸஸாயும் நஜிபுல்லா ஸத்ரானும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை உறதிசெய்தனர்.
ஹஸ்ரத்துல்லா ஸஸாய் 37 ஓட்டங்களுடனும் நஜிபுல்லா ஸத்ரான் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது.
மிக மோசமாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை 2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
முதலாவது ஓவரை வீசிய பஸால்ஹக் பாறூக்கி 5ஆவது, 6ஆவது பந்துகளில் குசல் மெண்டிஸ் (2), சரித் அசலன்க (0) ஆகிய இருவரையும் ஒரே மாதிரி எல். பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்து இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தார்.
இரண்டாவது ஓவரில் நவீன் உல் ஹக்கின் பந்துவீச்சில் பெத்தும் நிஸ்ஸன்க 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். (5 – 3 விக்.)
துடுப்பாட்டவரிசையில் 4ஆம் இலக்கத்துக்கு பின்தள்ளப்பட்ட வழமையான ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக்கவுடன் இணைந்த பானுக்க ராஜபக்ஷ 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது முஜிப் உர் ரஹ்மானின் பந்துவீச்சில் குணதிலக்க 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து முஜிப் உர் ரஹ்மானின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 ஒட்டங்களுடனும், மொஹமத் நபியின் பந்துவீச்சில் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஓட்டம் பெறாமலும், ரன் அவுட் முறையில் பானுக்க ராஜபக்ஷ 38 ஓட்டங்களுடனும், ரன் அவுட் முறையில் மஹீஷ் தீக்ஷன ஓட்டம் பெறாமலும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (69 – 8 விக்.),
மெலும் 6 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்த நிலையில் மொஹமத் நபியின் பந்துவீச்சில் அறிமுக வீரர் மதீஷ பத்திரண (5) களம் விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து சாமிக்க கருணாரட்ன சற்று சமயோசிதத்துடன் துடுப்பெடுத்தாடி 31 ஓட்டங்களைப் பெற்று கடைசி வீரராக பஸால்ஹக் பாறூக்கியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 105 ஓட்டங்களாக இருந்தது. மற்றைய அறிமுக வீரர் டில்ஷான் மதுஷான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். கடைசி விக்கெட்டில் அவர்கள் இருவரும் 30 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 3.1 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் நபி 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஜீப் உர் ரஹ்மான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.