விசேட மருத்துவர்கள் ஓய்வு பெற்று சென்றாலும் பொருத்தமான வேலைத் திட்டங்கள் மூலம் அதற்கான குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களது சேவைக் காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியின் போது,
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்துக்கமைய நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் 300 விஷேட மருத்துவர்கள் ஓய்வு பெறப் போகின்றனர்.
பலர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் கொழும்பு, கண்டி அரசாங்க வைத்தியசாலைகள் புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளிலிருந்து இவர்கள் ஓய்வு பெறுவதால் விசேட மருத்துவர்களுக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது. இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்டார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
சுகாதாரத்துறையை முன்னேற்றுவதற்கு பொருத்தமான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. விசேட மருத்துவர்கள் பலர் தனிப்பட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கு தேசியக் கொள்கையே காரணமாகியுள்ளது .
நாட்டில் 2017 ஆம் ஆண்டு 1560 விசேட மருத்துவர்கள் கடமையில் இருந்தனர்.அந்த எண்ணிக்கை தற்போது 2380 ஆக அதிகரித்துள்ளது இடைப்பட்ட காலத்தில் 800 ற்கும் மேற்பட்ட விசேட மருத்துவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் உயர் பதவிக்கு வரமுடியாத நிலையில் இருக்கும் பல வைத்திய நிபுணர்கள் நாட்டில் இருந்து வெளியேறிச்செல்கின்றனர். அதனால் அவர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்கவேண்டி இருக்கின்றுது.
அத்துடன் விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெற்றுச்செல்வதால் அந்த துறைக்கு பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால், அதற்கான செயற்திட்டம் ஒன்றை தயாரித்து ஏதாவது ஒரு அடிப்படையில் தேவைப்படும் போது அவர்களது சேவைக் காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.