செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

2 minutes read

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டன் தி ஓவல் விளையாட்டரங்கிலும் 2025இல் லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை புதன்கிழமை (22) உறுதி செய்தது.

அடுத்த இரண்டு சுழற்சிகளுக்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கு பிரசித்திபெற்ற இரண்டு மைதானங்களை உறுதிசெய்வதையிட்டு மகிழ்ச்சி அடைவதாக ஐசிசி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெவ் அலார்டைஸ் தெரிவித்தார்.

‘அடுத்த வருடம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஓவலில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்த மைதானம் மரபு ரீதியான மற்றும் அற்புதமான சுற்றுசூழலைக் கொண்டுள்ளது. இதுபோன்ற முக்கியமான போட்டிக்கு இந்த மைதானம் மிகவும் பொருத்தமானது.

‘அதனைத் தொடர்ந்து 2025 இறுதிப் போட்டியை லோர்ட்ஸில் நடத்தவுள்ளோம். இந்த விளையாட்டரங்கு இறுதிப் போட்டிக்கு பொருத்தமான பின்னணியை வழங்கும்’ என்றார் அவர்.

‘சௌத்ஹம்ப்டனில் நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டி இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதேபோன்று தி ஓவலில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை உலகெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என நான் நம்புகிறேன். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, சரே கவுண்டி கிரிக்கெட் கழகம் மற்றும் மார்லிபோர்ன் கிரிக்கெட் கழகம் ஆகியவற்றுக்கு ஐசிசி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனவும் அவர் கூறினார்.

சரே கவுண்டி கிரிக்கெட் கழகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் எல்வேர்தி கருத்து வெளியிடுகையில், ‘உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்த ஓவல் தேர்வு செய்யப்பட்டிருப்பது எமக்கு பெரும் கௌரவமாகும். உலகின் இரண்டு சிறந்த அணிகள் தெற்கு லண்டனில் விளையாடுவது ஓர் அருமையான நிகழ்வாக இருக்கும்’ என குறிப்பிட்டார்.

இதேவேளை, ‘2025இல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை லோர்ட்ஸ் விளையாட்டரங்கு அரங்கேற்றுவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஐசிசி அடுத்த இரண்டு இறுதிப் போட்டிகளை லண்டனில் நடத்தத் தீர்மானித்துள்ளது மகத்தான விடயம். இரண்டு மைதானங்களும் சாம்பியன்ஷிப்பின் உச்சக்கட்டத்திற்கு பொருத்தமான இடங்களாகும்’ என மார்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்சிசி) பிரதம நிறைவேற்று அதிகாரியும் செயலாளருமான கய் லெவெண்டர் தெரிவித்தார்.

2023 மற்றும் 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கான திகதிகள் உரிய நேரத்தில் உறுதி செய்யப்படும்.

அடுத்த இரண்டு WTC இறுதிப் போட்டிகளுக்கு இங்கிலாந்து வரவேற்பு நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பேர்மிங்ஹாமில் நடைபெற்ற ஜூலை மாதம் ஐசிசி வருடாந்த பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More