செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா எப்படி இருக்கிறது ‘குழலி’

எப்படி இருக்கிறது ‘குழலி’

2 minutes read

தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த முன்னணி நட்சத்திர படைப்பாளிகள், தங்களின் பார்வையை அகில இந்திய அளவில் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதற்கான கதை மற்றும் கதை களங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழ் ரசிகர்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதிலும் அவர்களுக்கு  மண் மணம் மாறாத உயிர்ப்புள்ள படைப்புகளை வழங்க வேண்டும் என்ற அக்கறையுடன் இயங்கும் ஒரு சில படைப்பாளிகளில் ‘குழலி’ படத்தின் இயக்குநரும் ஒருவர். அப்படியென்ன வித்தியாசமான படைப்பை வழங்கி விட்டார்? என்பதைத் தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் உட்பகுதியில் மலையை ஒட்டியிருக்கும் அடிவாரப் பகுதியில் இருக்கும் கிராமங்கள் தான் கதைக்களம். இங்கு ஆதிக்க சாதியினரும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் வசிக்கிறார்கள். வழக்கம் போல் ஆதிக்க சாதியை சேர்ந்த நாயகிக்கு, தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நாயகன் மீது காதல் வருகிறது. இந்த காதல் அறத்தோடு போற்றப்பட்டு இல்லறத்தில் தொடர்ந்ததா? இன்னமும் மாற்றப்படாத  மாற்றிக் கொள்ள விரும்பாத சாதிய அடுக்கு முறைகளில் புதைந்து மறைந்ததா? என்பதே இப்படத்தின் கதை.

எம்மில் பலரும் கேட்கலாம். இன்னுமா கிராமங்களில் மாசற்ற காதல் இருக்கிறது.? இருக்கிறது, என்று விவரித்ததுடன் அல்லாமல், அவர்களுக்குள் சாதிக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது. ஆனால் அந்தக் கனவை கடக்க, அவர்கள் காதலை கடக்க வேண்டும். காதல் என்று வந்து விட்டால், சமூகமும், சாதியும் உட்பகுந்து அவர்களையும், அவர்களது கனவுகளையும் சிதைத்து விடும். 

இதனைக் கடந்து தான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது என்பதனை முகத்தில் அடித்தாற் போல் ஓங்கி அழுத்தமாக உரைத்திருக்கிறார் இயக்குநர்.

தற்போது தமிழ்த் திரையுலகில் காதல் படம் என்றால்… அதிலும் ஆணவ கொலை சார்ந்த காதல் படம் என்றால்.., பா. ரஞ்சித் பாணியிலான படம் அல்லது மோகன் ஜி பாணியிலான படம் என இரண்டு பாணியிலான படங்கள் மட்டுமே இங்கு சாதியம் சார்ந்த படைப்புகளாக ஏற்கப்பட்டிருக்கும் சூழலில், சாதிகளை பற்றி பகிரங்கமாக பேசாமல், குறியீடுகள் மூலம் உணர்த்தி, சாதி அவசியமா..? சாதி, காதலையும், காதலர்களையும் மட்டும் அழிப்பதில்லை. 

காதலித்த காரணத்தினால் அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் சேர்த்து அழிக்கிறது என்பதை துணிச்சலுடன் சொல்லி இருக்கும் இயக்குநருக்கு தாராளமாக பாராட்டு தெரிவிக்கலாம்.

கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தி, தன்னுடைய மகளை கடும் போராட்டங்களுக்கு இடையே வளர்க்கிறாள். அவள் காதலில் விழுந்த போது, அவளின் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், சாதி சனங்கள் காப்பாற்றும் என உறுதியாக நம்புகிறார். அவளின் நம்பிக்கையை சாதி சனம் காப்பாற்றவில்லை. அதனால் அவள் சாதிகள் மீது வெறுப்புக் கொண்டு காரி உமிழும் போது.. பார்வையாளர்களுக்கும் அதே போன்ற உணர்வு எழுவதால் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.

அழுத்தமான கதையை விவரிக்கும் போது, அதிலும் நனவோடை உத்தியை பின்பற்றி இயக்குநர் கதையை விவரிக்கும் போது, உச்சகட்ட காட்சி இப்படித்தான் இருக்கும் என பார்வையாளர்களுக்குள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஆனால் நடந்தது அதுவல்ல… வேறொரு சம்பவம் என்று இயக்குநர் விவரிக்கும் போது, பார்வையாளர்களின் புருவம் ஆச்சரியத்தால் உயர்கிறது. இதனால் ‘குழலி’ இனிய புல்லாங்குழல் ஒலியைப் போல் ஒலிக்கிறது.

‘குழலி’ படத்தின் நிறைவான அம்சம் என்று முதன்மையாக பட்டியலிட வேண்டும் என்றால், அதில் முதலிடத்தில் ஒளிப்பதிவு இடம் பிடிக்கிறது. கிராமத்து மண்ணின் அழகியல்களையும், அப்பகுதியின் நிலவியல் அழகியலையும் கண் குளிர காட்சிப்படுத்தி, பார்வையாளர்களை இருக்கைகளில் அமர வைக்கிறது. இதற்காக ஒளிப்பதிவாளரைப் பாராட்டலாம்.

தயாரிப்பு : முக்குழி பிலிம்ஸ்

நடிகர்கள் : ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ஆரா, செந்தி குமாரி மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் : சேரா கலையரசன்

மதிப்பீடு 2.5 / 5

குழலி- கருந்தாள் குழலி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More