இலங்கைக்கு உரிய நேரத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடுக்கும் சதி நடப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த நேரத்தில் நிலக்கரி விநியோகத்தை மறுப்பதற்கும் மின்வெட்டை நீடிப்பதற்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். சமீபத்தில் வழங்கப்பட்ட நிலக்கரி விலைமனுக்கள், கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை விட குறைவான ஏலத்துக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கை நிலக்கரியை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யத் தவறினால் அது நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், எனவே அவசர முடிவொன்றை எடுப்பதற்கு அமைச்சரவை உபகுழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்ததாகவும், மக்களை பாதிக்காத வகையில் கொள்முதல் செய்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்வெட்டு நீடிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் மின் உற்பத்தி நிலையத்தை மூடுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முடிவுகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அமைச்சரவை துணைக் குழு எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மக்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில், தேசிய அவசர தேவையாக நிலக்கரி கொள்முதல் செய்யப்படும்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு நிலக்கரி கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கை மீண்டும் மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வாய்ப்புள்ளது. 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குள் நிலக்கரி கிடைக்காவிட்டால் நாளாந்த மின்வெட்டு பத்து மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.