செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யார் பலசாலி? இந்தியாவா? அவுஸ்திரேலியாவா?

யார் பலசாலி? இந்தியாவா? அவுஸ்திரேலியாவா?

2 minutes read

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, நடப்பு ஐசிசி இருபது 20 உலக சம்பியன் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் யார் பலசாலி என்பதைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ஹைதராபாத்தில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

மொஹாலியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 4 விக்கெட்களால் அவுஸ்திரேலியாவும் நாக்பூரில் மழையினால் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 8 ஓவர் போட்டியில் 6 விக்கெட்களால் இந்தியாவும் வெற்றிபெற்று தொடர் 1 – 1 என சமனான நிலையில் இன்று தீர்மானம் மிக்க போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் கடைசிக் கட்ட ஓவர்களை கட்டுப்பாட்டுடன் வீச வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து விளையாடவுள்ளன.

முதலாவது போட்டியில் கே. எல். ராகுல், ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் அக்சார் பட்டேல் பந்துவீச்சிலும் பிரகாசித்து இந்தியாவை பலப்படுத்தியபோதிலும் அவை பலனற்றுப் போயின.

கெமரன் க்றீன், ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ வேட் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தன.

இரண்டாவது போட்டியில் ஆரொன் பின்ச், மெத்யூ வேட் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தபோதிலும் அக்சார் பட்டேலின் பந்துவீச்சும் ரோஹித் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டமும் இந்தியா வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த உதவின.

இந்தப் போட்டி முடிவுகளுக்கு அமைய இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாக தென்படுகின்றன. இதன் காரணமாக இன்றைய தீர்மானம் மிக்க கடைசிப் போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

எவ்வாறாயினும் இரண்டு அணிகளும் கடைசிக் கட்ட ஓவர்களை எந்தளவு கட்டுப்பாட்டுடன் வீசவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த 2 போட்டிகளில் கடைசிக் கட்ட ஓவர்களில் பந்து வீசியவர்கள் வாங்கிக்கட்டியதை மறக்கலாகாது.

எனவே இன்றைய கடைசிக் கட்ட ஓவர்களை எந்த அணி கட்டுப்பாட்டுடன் வீசுகின்றதோ அந்த அணிக்கு தொடர் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), கே. எல். ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சார் பட்டேல், ஹர்ஷால் பட்டேல், புவ்ணேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்த்ர சஹால் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின்.

அவுஸ்திரேலியா: ஆரொன் பின்ச் (தலைவர்), கெமரன் க்றீன், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மெக்ஸ்வெல், ஜொஷ் இங்லிஸ், டிம் டேவிட், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், நேதன் எலிஸ் அல்லது டெனியல் சாம்ஸ் அல்லது சோன் அபொட், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More