இத்தாலி பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரி தலைவர் ஜோர்ஜியா மெலோனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்தாலியின் முதல் பெண் பிரதமராக அவர் பதவி ஏற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் தீவிர வலதுசாரி அரசு ஒன்றை மெலோனி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பொருளாதாரமாக இத்தாலி இருக்கும் நிலையில் இந்த முடிவு ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை சமிக்ஞையாக உள்ளது.
எனினும் வெற்றிக்கு பின்னர் பேசிய மெலோனி, தனது இத்தாலி சகோதரர்கள் கட்சி அனைவருக்குமான ஆட்சியை நடத்தும் என்றும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்ய மாட்டாது என்றும் உறுதி அளித்துள்ளார்.
“இத்தாலியின் சகோதரர்கள் தலைமையிலான வலதுசாரி அரசு ஒன்றுக்கு ஆதரவாக இத்தாலியர் தெளிவான செய்தி ஒன்றை வழங்கியுள்ளனர்” என்று ரோமில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மாகாண முடிவுகளின்படி மெலோனியின் தீவிர வலதுசாரிகள் 26 வீத வாக்குகளை வென்றுள்ளனர்.
அவர்களுக்கு நெருக்கமான போட்டியாக இருந்த மைய இடதுசாரி ஜனநாயகக் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டது.
இதன்படி மட்டியோ சல்வினியின் தீவிர வலதுசாரி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் மைய வலதுசாரி போர்சா இத்தாலிய கட்சிகளைக் கொண்ட மெலோனியின் கூட்டணி 44 வீத வாக்குகளை வென்று பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது.
மெலோனி தனது தேர்தல் பிரசாரத்தில் வரி குறைப்பு, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நிறுத்த கடல் தடுப்பு அமைப்பது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இத்தாலியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றி வாக்குறுதி அளித்திருந்தார்.
நேற்று உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியானபோதும் வரும் நவம்பர் நடுப்பகுதியிலேயே புதிய அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.