ஆரம்ப காலகட்டங்களில் உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படை தேவைகளை வறுமையின் எல்லையாக கொள்ளப்பட்ட போதிலும், தற்காலத்தில் கல்வி மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் போன்றவையும் அற்றுப்போதல் வறுமையென கருதப்படுகின்றது. இதனால் தற்காலத்தில் வறுமைக்கான எல்லைகள் மென்மேலும் விரிவடைகின்றது எனலாம்.
மேலும் வறுமை என்பதை குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத நிலை என சுருக்கமாக வரையறுக்கலாம்.
அதாவது வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும்.
வறுமையின் வகைகள்
வறுமையானது பிரதானமாக இரண்டு வகைப்படுகின்றது. அதாவது
- முழு வறுமை
- ஒப்பிட்டு வறுமை
இது தவிர தற்காலிக வறுமை, முதல் நிலை வறுமை மற்றும் இரண்டாம் நிலை வறுமை எனவும் வகைப்படுகின்றது.
முழு வறுமை எனப்படுவது, ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குடும்பமோ மொத்த வருமானத்தின் மூலம் தமக்கான அடிப்படை தேவைகளை பூரணப்படுத்திக்கொள்ள இயலாத நிலை ஆகும்.
ஒப்பிட்டு வறுமை என்பது மக்கள் அல்லது நாடுகளிடையே காணப்படும் வேறுபாடாகும். அதாவது இரு பிரதேசங்களுக்கிடையிலோ இரு சமூகங்களுக்கிடையில் ஒப்பீட்டளவில் வசதிகள், வளங்கள் போன்றவற்றில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதை குறிப்பிடுகின்றது.
வறுமை ஒழிப்பின் அவசியம்
உணவுப் பொருள் விநியோகம் மட்டுமே வறுமையை ஒழித்துவிடாது. அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதன் மூலம்தான் வறுமையை ஒழிக்க முடியும்.
தொடர்ச்சியாக வறுமையின் மூலம் போதிய கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்ய இயலாதவிடத்து, வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைக்கான வாய்ப்புகளும் திருடப்படுகின்றன.
வறுமையானது அடிப்படைப் பிரச்சினைகளையும் தாண்டி வறுமைக்குட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு சட்ட விரோதச் செயற்பாட்டிற்கும் காரணமாக அமைகின்றது.
இதனால் தனிநபர், குடும்பம், சமூகம் என அனைத்து மட்டமும் பாதிப்படைகின்றது, வறுமையால் இறப்பு விகிதம் அதிகரிக்கின்றது.
எனவே இவற்றினை இல்லாமல் ஒழித்து ஆரோக்கியமான மனித வாழ்வையும், சமூகத்தையும், நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு வறுமை ஒழிப்பு இன்றியமையாததாகும்.
வறுமையென்பதனை இல்லாதொழிப்பது என்பது மிகவும் சிக்கலானதாகும். எனினும் வறுமை ஒழிப்பு அவசியமானதாகவே உள்ளது.
வறுமைக்கான காரணங்கள், வறுமையால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச ரீதியில் ஆராய வேண்டியது அவசியமானதாகும்.