“350 இற்கு மேற்பட்ட பண்ணைகளில் சுமார் 120 பண்ணைகள் தான் மீனவ சமூகத்திற்குரியவை. ஏனையவை மீன்பிடித்தொழிலே தெரியாத வேறு வேறு நபர்கள் நிறுவனங்களில் பெயரில் பதிவு செய்யப்பட்டவை. இவற்றின் மீது தான் எங்களுக்கு சந்தேகங்கள் எழுகின்றன. இவை அனைத்தும் சீனாவினுடையதா என” யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா உரிமை மின்னிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்கிறது வணக்கம் இலண்டன்.
பருத்தித் தீவில் 50 ஏக்கரில் சட்டவிரோத கடலட்டைப் பண்ணை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே?
பருத்தித்தீவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணை 50 ஏக்கருக்கும் குறைவாக இருக்குமே ஒழிய குறைவாக இருக்காது. அங்கு ஒரு பண்ணையில் குஞ்சுகளும் விடப்பட்டு விட்டன. இன்னொரு பண்ணையும் அடைக்கப்பட்டுள்ளது. அனுமதி எடுக்கப்படாத இந்தப் பண்ணைக்கு துறை சார்ந்த நிறுவனமான மீன்பிடித் துறை சார்ந்த நிறுவனமான நெக்டா நிறுவனம் நவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் கூடிய ஜீ.பி.எஸ் உம் பொருத்திக் கொடுத்திருக்கிறது. அந்த ஜீ.பி.எஸ் இற்குள் என்னென்ன சாதனங்கள் உள்ளன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் இதுவரை எந்த அனுமதியும் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்தில் பெறப்பட்டிருக்கவில்லை. இந்த சட்டவிரோத பண்ணையை அகற்றுவதற்கு துறை சார்ந்த எந்த அதிகாரிகளுக்கும் துணிவில்லை. மீனவருக்கு வாழ்வாதாரம் கொடுக்கின்ற கடலில் சட்டவிரோதமாக ஒரு செயல் நடைபெறுகிறது. இதை தடுக்கவோ, நிறுத்தவோ வழியில்லாத அதிகாரிகள் தான் முதலீடு கொண்டு வருகின்றோம், மக்களுக்கு வேலைத்திட்டங்கள் கொண்டு வருகின்றோம் என மக்களை ஏமாற்றி வருகின்றனர். நெக்டா நிறுவனத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் வடக்கு மீனவரைக் கருவறுக்கின்ற செயற்பாடு தான். கடலட்டைப் பண்ணைகளால் வடக்கில் மீனவருக்கு பாதிப்பு. இதனை இங்கு அமைக்க வேண்டாம் என்று எமது மீனவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 21 ஆம் திகதியும் வடக்கில் கடலட்டைப் பண்ணை அமைக்க வாருங்கள் என நெக்டா நிறுவனம் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரித்திருக்கிறது. இவர்கள் வடக்கு மக்கள் பற்றியோ, பரம்பரை பரம்பரையாக தொழில் செய்யும் மீனவர்கள் பற்றியோ கரிசனை கொண்டிருக்கவில்லை. யார் யாரை இங்கு அழைத்து வந்து தங்கள் பொக்கற்றுக்களை நிரப்ப முடியுமோ அந்த வேலையைத் தான் செய்து வருகின்றார்கள்.
சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் யாரால் அமைக்கப்படுகின்றன?
இது நெக்ரா நிறுவனத்திற்குத்தான் தெரியும். ஏனெனில் அவர்கள் தான் சட்டவிரோத பண்ணைகளை வடக்கில் ஊக்குவிக்கிறார்கள். அதன் வடக்கு பிராந்திய பணிப்பாளர் நிருபராஜ் என்பவர் தான் இதன் பின்னால் செயற்படும் நபராக சட்டவிரோத நடவடிக்கைகளின் மாபியாவாக இருக்கிறார். இங்கு சட்டவிரோதமாக அமைக்கும் பண்ணைகள் உள்ளூர் வாசிகள் சிலரின் பெயரிலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் சிலரின் பெயரிலும் அமைக்கப்பட்டாலும், அவற்றின் முதலீடுகள் சீனர்களுடையதாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன.
கடலட்டைப் பண்ணை எனும் போர்வையில் சீன இராணுவம் வடக்கில் ஊடுருவியிருப்பதாக தமிழக புலனாய்வுப் பிரிவு எச்சரித்திருக்கிறதே?
தமிழக புலனாய்வுப் பிரிவினரால் தான் அந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது. அதற்கு மீனவர்களான நாங்கள் ஆராய்ந்து பதில் கூற முடியாது. ஆனால் வடக்கில் சீனாவிற்கு கடலட்டைப் பண்ணைகள் உள்ளன என்பதும், இங்குள்ள வேறு நபர்களுடைய பெயர்களில் பதிவுகளை மேற்கொண்டு சீனா மறைமுகமாக கடலட்டைப் பண்ணைகளை வடக்கில் அமைத்துள்ளமையும் எங்களுக்குத் தெரிந்த விடயங்கள். இங்கு சீனா இராணுவம் உடுருவி விட்டதா என்பதை எங்களால் அறிந்து கொள்ளவோ, உறுதிப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. 2015 ஆம் ஆண்டில் இருந்து அரியாலையில் குயிலன் என்ற நிறுவனத்தின் ஊடாக சீன நாட்டவர் கடலட்டைப் பண்ணை அமைத்திருந்தமை அனைவருக்கும் தெரிந்த உண்மை. இவ்வாறு வடக்கில் பல இடங்களில் சீனா வேறு நபர்களின் பெயர்களில் பதிவுகளை மேற்கொண்டும், சட்டவிரோத நடவடிக்கைகள் ஊடாகவும் கடலட்டைப் பண்ணைகளை அமைத்திருக்கின்றது. வடக்கில் கடலட்டை எனும் போர்வையில் என்ன நடக்கிறதே என்று தெரியாத அச்சமான நிலை இருக்கிறது. உதாரணமாக பருத்தித் தீவில் 50 ஏக்கரில் அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணை யாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே தெரியாத நிலைதான் காணப்படுகின்றது.
சீனாவின் கடலட்டைப் பண்ணைகள் வடக்கில் எங்கெங்கு உள்ளன?
சீனாவின் கடலட்டைப் பண்ணைகள் எவையும் சீன நிறுவனங்களின் பெயரில் உத்தியோகபூர்வமாக இல்லை. வடக்கில் உள்ள வேறு நபர்களின் பெயர்களில் அவை உள்ளன. ஆனால் சீனா தான் முதலீடுகளை மேற்கொண்டு கடலட்டைப் பண்ணைகளை மேற்கொண்டிருக்கிறது. வடக்கில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனத்தின் பண்ணைகள் உள்ளன. ஆனால் அவை சீன நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை. இங்குள்ள பலர் சீனாவின் காசிற்காக தங்கள் பெயரில் பதிவுகளை மேற்கொண்டு சீன நிறுவனங்களுக்கு கடலட்டைப் பண்ணைகள் அமைக்க இடம் கொடுத்திருக்கிறார்கள். இதனால் முழுமையாக எங்களால் சீனாவின் பண்ணைகள் எவை எவை என குறிப்பிட்டுக் கூற முடியாது. பூநகரி உள்ளிட்ட இடங்களில் சீனாவின் கடலட்டைப் பண்ணைகள் குயிலன் எனும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் பொறிமுறையைத் தான் இங்குள்ள அதிகாரிகள் கையாண்டு வருகின்றார்கள். ஏனெனில் யாரேனும் கேட்டால் அது சீனாவினுடையது இல்லை என இலகுவாகக் கூற முடியும். வடக்கில் சீனாவின் காசு வெகுவாகப் பிளக்கத்தில் உள்ளது. எனவே இந்த அதிகாரிகள் இப்படித்தான் செய்வார்கள்.
கடலட்டைப் பண்ணை வளர்ப்பில் வடக்கு தமிழ் மீனவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா?
எங்களுக்கு பெரியளவில் ஆர்வமில்லை. நாங்கள் பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வரும் மீன்பிடித் தொழிலையே மேற்கொள்ள பெரிதும் ஆர்வம் காட்டுகின்றோம். இங்கு இயற்கையாக கடலட்டைகள் வளர்கின்றன. அவற்றை பிடித்து பதப்படுத்தி விற்பனை செய்பவர்களும் முன்னர் தொடக்கம் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களது பண்ணை வளர்ப்பால் இயற்கை கடலட்டை பிடிப்பு தடைப்பட்டு விட்டது.
நெக்ரா நிறுவனம் வடக்கில் கடலட்டைக்கு காணி இருப்பதாகவும், கடலட்டை வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவித்தல் விடுத்திருந்தது. எமது மீனவர்கள் இதனை விரும்பவில்லை. உடனே பண்ணை வேண்டாம் என எங்களிடம் கடிதங்கள் வாங்கி கட்டி வைத்து விட்டு கடலட்டைப் பண்ணைக்குரிய இடங்களை வெளி மாவட்ட சிங்கள மீனவர்களுக்கு வழங்கப்போவதாக மிரட்டினா். எனவே அதற்குப் பயந்து தான் பல மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்குள் உள்வாங்கப்பட்டனர். அதிலும் பெரும்பாலானவை அவர்களுக்குரிய பண்ணையாகக் கூட இருக்கவில்லை. இவர்களின் பெயரில் பதிவுகளை மேற்கொண்டு ஒரு தொகைப் பணத்தினை பெற்றுக் கொடுத்து அவை சீனா உள்ளிட்ட நிறுவனங்களிற்கு கடலட்டை வளர்ப்பிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தங்கள் பொறிக்குள் எங்கள் மீனவர்களை மிக லாபகமாக வீழ்த்தி விட்டார்கள். வடக்கில் நல்லூர், வேலணை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தான் கடலட்டைப் பண்ணைக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட பண்ணைகள் சுமார் 200 தான் உள்ளன. ஆனால் பதிவுகளற்று சட்டவிரோதமான பண்ணைகளையும் சேர்த்தால் வடக்குக் கடலில் சுமார் 350 இற்கும் மேற்பட்ட பண்ணைகள் உள்ளன. இது தான் எங்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. இது யார் யாருடைய பண்ணைகள் எனத் தெரியவில்லை. எங்கள் வளங்களை யார் யாரோ வந்து சூறையாடிச் செல்கிறார்கள். இதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் துணை போகின்றார்கள். இதில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த 350 இற்கு மேற்பட்ட பண்ணைகளில் சுமார் 120 பண்ணைகள் தான் மீனவ சமூகத்திற்குரியவை. ஏனையவை மீன்பிடித்தொழிலே தெரியாத வேறு வேறு நபர்கள் நிறுவனங்களில் பெயரில் பதிவு செய்யப்பட்டவை. இவற்றின் மீது தான் எங்களுக்கு சந்தேகங்கள் எழுகின்றன. இவை அனைத்தும் சீனாவினுடையதா என.