செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வசந்ததீபன் | இரு கவிதைகள்

வசந்ததீபன் | இரு கவிதைகள்

1 minutes read

~ மாயையின் வானவில் ~


பரிசளிக்கப்பட்ட நாட்கள்
கை நழுவி.. விழுந்து
உடைந்து போகின்றன
பதை பதைப்புடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கடந்த காலம் கசப்பானது
நிகழ்காலம் முள்ளானது
எதிர்காலம் இருட்டானது
காரிருள் குகை
கால் போன போக்கில் நடை
பிழைக்க எத்தனை வதை
அடிபட்டவள் நிமிர்ந்தாள்
அடித்தவன் தலை குனிந்தான்
புழு பாம்பானது
தீராப் பசி
ஆறாப் பசி
தீயாய் எரியும்.
போதையூட்டுகிறது பெயர்
புகையாய் வெளியேறுகிறது உயிர்
பாலை மண்ணில் பாயுது கானல்நீர்
மனசுகளெங்கும் பூத்திருக்கின்றன
நிதம் பறிக்காமல்
உதிர்ந்தபடி இருக்கின்றன
கனவுகள் தான்
பூக்கட்டிக் கொண்டிருக்கின்றன
நேசத்தைத் தேடி
வனாந்தரங்களில் திரியும் பறவை
தொலை வானத்தில் ஒற்றை நட்சத்திரம்
வானம் பறந்து கொண்டிருக்கிறது
பூமி ஓடிக் கொண்டிருக்கிறது
நான் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

🦀

~ அமைதிப் பெருங்கடல் ~


இமைகள் நனையும் முன்னே
இதயம் உதிர்ந்து விட்டது.

துயரம் சுமந்த நிலவு
கரைந்து…
மேகங்களுக்குள்..
கலந்து போனது.

நெடுந் தவம் இயற்றும்
அடிவானம்
சிவந்திருக்க…
கண் விழிப்பின் இழப்பு
முடிந்து போனது.

வழிப்பயணக் கனவுகள் முறிய
அழுகுரல்கள்
எழுகின்ற நாளில்
பயம்
வெறித்தோடுகிறது.

குருதி கொப்பளிக்கும்
உயிர்த்தெழல்
அலைக்கழிக்கப்பட்டாலும்
நிராசையின் ஓலம்
கிளர்ந்தெழவில்லை.

உறைய வைக்கும்
துருவத்தின் குளிரால்
ஊற்றெடுக்கும் ஈரம்
உலர
பழங்கால வெயில்
நீளுகிறது.

சிதைவான நினைவுகளை
துயிலிழந்து
அவதியுற்று
அசை போட்டபடி..
நெடு மூச்செறிந்த காலம்
இனியும் தொடராது.

தொலைந்தவைகளை
மறந்து விட்டு
உயிர்ப்பை நிலைப்படுத்த…
பாடாய் படுத்திய சினத்தை
தவிர்க்க….
சாந்தம் நிறைகிறது.

புதிதாய் ஜனிக்கும்
எஞ்சியுள்ளவைகளால்
மனதிலே கசப்பு மீறியே…
நம்பிக்கைகள்
பிறப்பெடுக்கிறது.

வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More