எமக்கான அரசியல் தீர்வை எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள் தாருங்கள் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-
“எமது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்த தசாப்தத்தில் இன்னுமொரு சாணக்கியன், சுமந்திரன், சம்பந்தன், சிறீதரன் போன்ற பலர் வருவார்கள். இது மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்.
சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த வார்த்தைகளை விடாமல், எமக்கான அரசியல் தீர்வை எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள் தாருங்கள்.
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமை இல்லை, அக்கறை இல்லை போன்ற விடயங்களை நீங்கள் பார்க்கத் தேவையில்லை.
நாட்டை ஆட்சி செய்த மஹிந்த, கோட்டாபாய – அண்ணன், தம்பிகளே ஒற்றுமை இல்லாமல் நாட்டை நாசமாக்கிவிட்டார்கள்.
ஆகவே, தமிழ்க் கட்சியினராகிய நாம் கருத்து வேறுபாட்டைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுக்காக ஒன்றாக நின்றே செயற்படுவோம். எங்களால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” – என்றார்.