செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை துப்பாக்கி முனைகளுக்குள் ஒளிர்ந்த தீபங்கள் | தீபச்செல்வன்

துப்பாக்கி முனைகளுக்குள் ஒளிர்ந்த தீபங்கள் | தீபச்செல்வன்

4 minutes read

மாவீரர் தினம் என்பது ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு நிகழ்வு. அத்துடன் ஒவ்வொரு மாவீரர் நாளும் ஒரு செய்தியை இந்த உலகத்திற்கு அறிவித்தே வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முந்தைய மாவீரர் தினம் ஒவ்வொன்றிலும் தலைவர் பிரபாகரன் அவர்களின் மாவீரர் தினப் பேருரை சிங்கள தேசத்திற்கும் உலகத்திற்கும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே வந்திருக்கிறது. அந்த நிலையில் 2022ஆம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வும் ஈழத் தமிழ் மக்கள் எப்படியான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் எப்படியான வாழ்வை வாழ விரும்புகிறார்கள் என்கிற கனவையும் வெளிப்படுத்தி நிற்கிறது. ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் கனவுக்குமாய் விதைகப்பட்ட கல்லறைகள் அதையே அவாவி குரலிடுகின்றன.

மாவீரர் நாள், ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் பண்பாட்டிலும் மகத்துவம் மிக்க நன்நாளாக மதிக்கப்படுகிறது. ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக, உரிமைக்காக, கனவுக்காக களமாடி மாண்ட பல்லாயிரம் மாவீரர்களை நெினைவேந்தல் செய்கின்ற உன்னத நாள். மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்கிற தலைவர் பிரபாகரனின் பொன் மொழிக்கு இணங்க,  மாண்டவர்களின் கனவுகளையும் ஏக்கங்களையும் பற்றிக் கொள்ளுகிற எழுச்சி நாள். இது வெறுமனே துயரம் கொள்வதற்கான, அழுவதற்கான நாள் அல்ல. அழுகையில் இருந்து எழுவதற்கும் எழுகை பெறுவதற்கான உத்வேகங்களை பெருக்குவதற்குமான வல்லமை கொண்ட நாள்.

நாம் மீண்டும் மீண்டும் பல்வேறு குரல்களின் வழியாக இந்த உலகை நோக்கியும் ஸ்ரீலங்கா அரசை நோக்கியும் ஒன்றை வலியுறுத்தி வருகிறோம். மிகக் கொடிய இனவழிப்புப் போரில் எமது மக்கள் ஒன்றரை லட்சம் பேரை இனப்படுகொலை செய்தீர்கள். எமது இனத்தின் பெரும்பாலான மனிதர்களை கையற்றவர்களா, கண்ணற்றவர்களாக, கால்களற்றவர்களாக முடமாக்கினீர்கள். எல்லா காயங்களையும் நாங்கள் தாங்கிக் கொண்டே வாழ்கிறோம். மீண்டு எழுகிறோம். ஆனால் எங்கள் கல்லறைகள்மீது தீர்க்கப்பட்ட வஞ்சத்தை எங்கள் மனங்கள் ஒருபோதும் மன்னிக்காது. மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்கிற ஆழமான வலியை தருகிறது.

இனவழிப்புப் போரின் இறுதியில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஸ்ரீலங்கா அரச படைகள் புல்டோசர் கொண்டு அழித்தன. எங்கள் மாவீரர்கள் உங்களுக்கு பயங்கரவாதியாகவே இருக்கட்டும். ஆனால் ஒவ்வொரு கல்லறையிலும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எம் நிலத்தின் தாய்மார்களின் பிள்ளைகள். இருப்புக்காய் போராடி, வாழ்வுக்காய் போராடி உறங்கியவர்களின் உறக்கம் கலைத்து, உறங்க இடம் மறுப்பது என்பது ஈழத் தமிழ் இனம்மீது மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரியதொரு இனவழிப்பு என்பதையும் ஸ்ரீலங்கா அரசு புலப்படுத்தியிருக்கிறது.

தமிழ் இனத்தின் மீது மாத்திரமின்றி மாவீரர்களின் கல்லறைகள்மீதும் மாபெரும் இனழிவ்பை நடாத்திய ஸ்ரீலங்கா அரசு 2009இற்குப் பிந்தைய காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள்மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பும் அடாவடியும் கூட ஈழத் தமிழ் இனம் எப்படியான ஆக்கிரமிப்புக்குள் அழிப்புக்குள் வாழ்கிறார்கள் என்பதையும் உலகிற்கு சொல்லியது. மாவீரர் துயிலும் இல்லங்களில் சிதைக்கப்பட்ட கல்லறைகளின் மேல் இராணுவ முகாம் அமைத்து தங்கியும் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடியும் வஞ்சம் தீர்கின்ற வன்மம் தீர்கின்ற வேலையை ஸ்ரீலங்கா அரச படைகள் செய்தன.

உலகின் மிக மேசமான மனிதாபிமானற்ற செயல் இதுவாகும். போரில் மாண்டவர்களுக்கு மதிப்பு கொடுப்பது எதிரிகிளன் மாண்பாகும். போரின் போது கைப்பற்றப்பட்ட ஸ்ரீலங்கா அரச படைகளின் உடலங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அதனை ஸ்ரீலங்கா அரசிடம் கையளித்தும், ஏற்காத பட்சத்தில் உரிய இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் விடுதலைப் புலிகள் தமது இராணுவ ஒழுக்கத்தையும் மாண்பையும் கடந்த காலத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் போரில் இறந்த புலி வீரர்களின் நினைவுக் கற்களை உடைத்து வன்மம் தீர்க்கும் போரைச் செய்தமை அருவருப்பானது.

இந்த நிலையில் 2009இற்குப் பின்னரான காலத்தில் மாவீரர்களை நினைவுகூர ஸ்ரீலங்கா அரசு தடைபோட்டது. துயிலும் இல்லங்களில் இராணுவங்களை குவித்து, மாவீரர் நாளில் கோயில்களில் விளக்குகள் ஏற்றுவதை ஆலய மணிகள் இசைப்பதை தடுத்து மாவீரர்களின் நினைவுகளை தடுக்கலாம் என நினைத்தது. வீடுகளில் எரியும் தீபங்களை எட்டி காலால் உதைத்து, தம் போரை தொடுத்தது. வன்மத்தை வெளிப்படுத்தியது. இத்தகைய அட்டூழியங்களினால் ஸ்ரீலங்கா அரசே மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தது. 2015இல் மகிந்த தலைமயிலான ஸ்ரீலங்கா அரசு தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில், 2016 ஆம் ஆண்டு நவம்பரில் ஈழ மக்கள் மாவீரர் நாளை அதன் மரபு வழி நின்று முன்னெடுத்தனர்.

தன்னெழுச்சியாக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்ற மக்கள், துயிலும் இல்லத்தை துப்புரவு செய்து, விதைக்கப்பட்ட கல்லறைகளை ஸ்ரீலங்கா அரச படையினர் சிதைக்கப்பட்ட நிலையில் அவற்றை தேடி மீட்னர். துயிலும் இல்லத்தை அழகு படுத்தி, அக் கோயிலில் தீபங்களை ஏற்றி, மலர்களை தூவி மக்கள் விழி நீரால் விளக்கேற்றி அஞ்சலி செய்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈழ மண் மாவீரர்களுக்காய் ஒளிர்ந்தது தமிழர்களின் தாயகம்.  தாம் அனுமதித்தாலும்கூட விடுதலைப் புலிகளுக்கு மக்கள் விளக்கேற்றி அஞ்சலிக்க மட்டார்கள் என்று அன்றைய ஸ்ரீலங்கா அரசு கூறிய நிலையில் வடக்கு கிழக்கு தாயகம் எங்குமுள்ள மக்கள் ஒன்றுபட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஸ்ரீலங்கா அரசிற்கு பதிலடி கொடுத்தனர்.

வாழ்தலைப் போல ஒரு போராட்டம் ஏதுமில்லை என்பதை இக் கட்டுரையாளர் என் எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் வலியுறுத்தி வருகிறார். இது ஈழ மக்களுக்கு என்றுமே பொருந்தி வருகிறது. 2019இல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்ற போது மாவீரர் தினத்தை தடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட போதும் 2020இல் கொரோனா கிருமியை துணைக்கழைத்து மாவீரர் தினத்தை தடுக்க கோத்தபாய நடவடிக்கை எடுத்தார். அவர் ஆட்சியும் அதிக காலம் நிலைக்கவில்லை. 2021இல் ஸ்ரீலங்கா அரச படைகளின் கடுமையான அச்சுறுத்தல்கள், தடைகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிரும் இல்லங்களில் விளக்குகள் ஒளிர்ந்தன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாவீரர் இன்று தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு மக்கள் விளக்கேற்றி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். எம் வீரர்களை நினைகூர்வதன் வழியாக அவர்களின் தாகத்தையும் கனவையும் சுமக்கும் இந்த நிலத்தின் சனங்கள், இப்போதும் துப்பாக்கி முனைகளுக்குள் தான் தங்கள் சுடரை ஒளிர விட்டுள்ளனர். இந்த வெளிச்சம் ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் படர்ந்தெழ வேண்டியதே காலத்தின் தேவையாகும்.

தீபச்செல்வன்

நன்றி – உரிமை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More