புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டாவை விட அதிக பணத்தை வெளிநாட்டுப் பயணத்துக்குச் செலவிட்ட மஹிந்த

கோட்டாவை விட அதிக பணத்தை வெளிநாட்டுப் பயணத்துக்குச் செலவிட்ட மஹிந்த

2 minutes read

2021 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களை விட அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

சிங்களப் பத்திரிகை ஒன்றால், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் மேற்கொண்ட 5 வெளிநாட்டு பயணங்களால் அரசுக்கு மொத்தமாக 4 கோடியே 47 இலட்சத்து 39 ஆயிரத்து 184 ரூபா 91 சதம் செலவு ஏற்பட்டுள்ளது.

அதில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரண்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக 3.6 கோடி (36,970,864.14) ரூபாவை செலவிட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மூன்று பயணங்களுக்காக 70 இலட்சம் ரூபாவை மாத்திரமே செலவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு கடந்த ஜனவரியில், ஜனாதிபதி செயலகம் மறுப்புத் தெரிவித்திருந்தது.

எனினும், மேன்முறையீட்டுக்கு அமைய தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் 10 மாதங்களின் பின்னர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளன.

அதன்படி, முன்னாள் பிரதமர் மஹிந்தவின் உத்தியோகபூர்வ பயணங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் செலவு 17 சதவீதமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வின் நியூயோர்க் பயணத்துக்காக 5,461,221 ரூபாவும், இங்கிலாந்து (கிளாஸ்கோ) பயணத்துக்காக 1,785, 210 ரூபாவும், ஐக்கிய அரபு இராச்சிய பயணத்துக்காக 521,888 ரூபாவும் செலவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பயணங்களின் நோக்கம் ஜனாதிபதி செயலகத்தால் விளக்கப்படவில்லை.

அவ்வாறே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஷேக் முகர்ஜி ரஹ்மானின் பிறந்தநாளில் கலந்துகொள்வதற்காக 2021 மார்ச் 19 அன்று மேற்கொண்ட பங்களாதேஷ் பயணத்துக்காக 10,568,962 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஜி – 20 சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 2021 செப்டெம்பர் 10 ஆம் திகதியன்று அவர் இத்தாலிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது 26,401,901 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கலந்துக் கொண்டனர்.

முன்னாள் பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இத்தாலியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அது அப்போதைய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பிடும் போது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட நண்பர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றமையே, பெருமளவு செலவு ஏற்படக் காரணம் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் காமினி செனரத், முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் பிரதமர் மஹிந்த மற்றும் அவரது மனைவி, மகனுடன் இத்தாலியில் உணவருந்துவதைக் காட்டும் புகைப்படமொன்றை தி கார்டியன் இணையத்தளம் வெளியிட்டிருந்தது.

நடைமுறையின்படி பிரதமர் வெளிநாட்டில் இருக்கும் போது, அவரது செயலாளர் நாட்டில் இருக்க வேண்டும். இது வெளியுறவு அமைச்சருக்கும் வெளியுறவுத்துறை செயலருக்கும் பொருந்தும்.

எனினும், இத்தாலி பயணத்தின் போது காமினி செனரத் பிரதமருடன் சென்றிருந்த அதேவேளை ஜயநாத் கொலம்பகேயும் வெளிவிவகார அமைச்சருடன் சென்றிருந்தார்.

எனினும், இரண்டு செயலாளர்களும் ஏன் இத்தாலிக்குச் சென்றனர் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More