பாணந்துறையில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் உட்பட மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாணந்துறை – சில்வன் ஒழுங்கைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குக் கடன் கொடுத்துள்ளார்.
பணத்தைத் திருப்பிக் கொடுக்காதமை குறித்து விசாரிப்பதற்காக குறித்த பெண், சட்டத்தரணியுடன் அங்கு சென்றுள்ளார்.
அதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சட்டத்தரணி வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தமது உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தியே குறித்த சட்டத்தரணி வானத்தை நோக்கி சுட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த துப்பாக்கி மற்றும் சட்டத்தரணிக்குச் சொந்தமான வாகனம் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.