சிறகுகளில் ஏந்திய பகலை
இரவுகளில் களையும் பறவையின் தேடலென
நடுக்கமுறும் மழையிரவில்
கூடு கொடுத்த கிளையின்றி
இருண்டு கிடக்கிறது வானம்.
அடர்ந்து விரியும் சூரியனின் அந்திமத்தை
அலைவுறும் சிறு மின்மினிகளின் ஒளிகொண்டுதான்
துடைத்தெறிய வேண்டும்.
தூரத்தில் கரிய மேகங்களின் சன்னதம்
இடையறாத மோதல்
இழை நார்கிழியும் பறையோசை
எழுந்தாடும் மின்னற்கீற்று,
இவற்றினிடையில்
அந்தரத்தில் பறந்தலையுமென் மனவீடெங்கும்
நினைவுகளின் பெருநதி
அங்கு சலசலக்கும் நீர்மேட்டில்
மார்கழி மேகத்தின் ஆட்சி
உடல் சிலிக்க மயிர்க்கூச்செறியும் இந்தத் தேகத்தை அடக்கியபடி
தொடுவானவெளியெங்கும் வியாபித்த உன்னிடம்
கதைபேச விளையும்
ஊமைச் சிறுமி நான் !
வானத்தாய் நீ !!
2022.
சர்மிலா வினோதினி