செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவட்ட சபையே ரணிலின் திட்டம்! – போட்டுடைத்தார் கஜேந்திரகுமார்

மாவட்ட சபையே ரணிலின் திட்டம்! – போட்டுடைத்தார் கஜேந்திரகுமார்

6 minutes read

“மாகாண சபைகளையும், மாகாண மட்டத்திற்குரிய அதிகாரங்களையும் நிராகரித்து, அதை மாவட்ட மட்டத்திற்கு மாற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைகளைத்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டு வரப் போகிறார். அதை அவர் ஏற்கனவே என்னிடம் நேரில் கூறியும் இருக்கிறார்.”

– இவ்வாறு விடயத்தை போட்டு உடைத்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்புக்கு மாவை சேனாதிராஜா விடுத்த அழைப்பைத் தான் ராகரித்திருக்கின்றமை பற்றியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில், அமைச்சர்களுக்குக் கீழே இருக்கக்கூடிய விவாதங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இருக்கக்கூடிய மாவட்ட, மாகாண சபைகளைத் தாண்டி மாவட்ட மட்டத்திலே அதிகாரங்களைப் பரவலாக்கி, மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றபோது, செலவுகளைக் குறைக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அவ்வேளை சபையிலிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் மீண்டும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்ற கருத்தை ஆணித்தரமாகக் கூறியிருந்தார்.

அவர் கூறிய விடயம் ஊடகங்கள் ஊடாகவும் காணொளி ஊடாகவும் நிரூபணமாகியிருக்கின்றது. மாகாண சபைகளை நிராகரித்து, மாகாண மட்டத்திற்குரிய அதிகாரங்களை நிராகரித்து, அதை மாவட்ட மட்டத்திற்குள்ளான, மாவட்ட அபிவிருத்தி சபைகளைத் தான் கொண்டு வரப் போகிறார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் அலுவலகம் ஊடகங்கள் ஜனாதிபதியின் கருத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று கருத்துக்களை வெளிப்படுத்தி மறுப்புத் தெரிவித்திருக்கிறது.

தமிழ்க் கட்சிகளை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வருமாறு அழைத்துள்ள ரணில் விக்கிரசிங்கவுடன், அந்தத் தமிழ்க் கட்சிகள் விழுந்தடித்து நிபந்தனையில்லாமல் போய் அவரோடு பேச விரும்பிய இடத்திலே அதிலே மாகாண மட்டத்தினைத் தாண்டி, மாவட்ட மட்டத்திற்குத்தான் அதிகாரங்களைப் பற்றி யோசிக்கலாம் என்று சொல்லியதால் ரணிலினதும், கூட்டமைப்பினதும் நிலைப்பாடுகள் அம்பலப்பட்டுள்ள சூழல் உருவாகியுள்ள நிலையிலே, அவர்களைக் காப்பாற்றும் நோக்கில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்படி முன்னுக்குப் பின் முரணாண கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஜனாதிபதியின் உண்மை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ள நிலையில் ஊடகங்கள்தான் பிழையாக விளங்கிக் கொண்டிருக்கின்றன எனக் கூறி காதில் பூச்சுற்றும் ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.

நடந்தது என்ன?

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முதல் நாள் என்னைச் சந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய வஜிர அபேகுணவர்த்தனவின் வீட்டில் சந்தித்த போது – தமிழருடைய இனப்பிரச்சினையை நீடித்துச் செல்ல விடமுடியாது, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க சொன்னபோது, நான் அவரிடம் அந்தத் தீர்வு ஒரு சமஷ்டியின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற தீர்வாக மட்டும்தான் அமையலாம், அந்தவகையில் நீங்கள் இதில் உறுதியாக இருங்கள் எனக் கூறியிருந்தேன். அப்படிப்பட்ட சூழலில், அது நடைமுறை சாத்தியமில்லை என்று நிராகரித்து, இந்த மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்ற விடயங்கள் தொடர்பாகத் தான் அன்றைக்கும் என்னிடம் பேசினார்.

இது சம்பந்தமாக நான் ஊடகங்களுக்கும் அறிவித்து இருக்கின்றேன். அதேபோன்று நாம் சந்தித்துவரும் தூதரகங்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். உரிய நேரங்களில் இந்த விடயங்களை அம்பலப்படுத்தியிருக்கிறேன்.
இதே ரணில் விக்கிரமசிங்க இன்றைக்கு இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தன்னுடைய யோசனை இல்லை எனவும், மைத்திரிபால சிறிசேன சொன்னதற்கு அதனைப் பரிசீலிக்கத் தயார் என்று சொன்னதாகக் குறிப்பிட்டு, தனது யோசனை அதுவென்று எந்தவிடத்திலும் சொல்லவில்லை என்று பொய் கூறுகின்றார்.

ரணில் விக்கிரமசிங்க என்னைச் சந்தித்த போது நான் இந்த மாவட்ட அபிவிருத்தி சபைகள் பற்றி வாய் திறக்கவேயில்லை. அச்சிந்தனையும் என் மனதில் இருக்கவில்லை. அவரேதான் மிகத்தெளிவாக அந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளைப் பற்றி அன்றைக்கு வலியுறுத்தியிருந்தார்.

இப்படி இருக்கும்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பிரச்சினைகள் இருக்கின்றன என்று காட்டுவது ஒரு நாடகம். சுமந்திரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இருக்கின்ற பிரச்சினைகள், விமர்சனங்கள் எல்லாமே நாடகம்.

ஒன்றாக இருந்த இந்த மூன்று தரப்புக்களும் தமிழினத்தை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு செய்த சதி அம்பலமாகியிருக்கின்றது. இந்தநிலையில் – இன்றைக்கு புதிதாக ஒன்றைத் தொடங்குவதாக காட்டுவதற்கு தங்களுக்கிடையில் பிரச்சினை இருப்பதாக நடித்துக்கொண்டு ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் ஒன்று சேருவதற்கான நாடகமே மிகத்தெளிவாக நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எங்களுடைய மக்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமென நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வரப்போகின்ற இந்தத் தீர்வு என்ற பேரிலே நடைபெறப்போகின்ற சதியை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். சமஷ்டியைத்தான் கொண்டுவருகின்றோம் என சொல்லிக்கொண்டு மீண்டுமொருமுறை தமிழ் மக்களாகவே ஒற்றையாட்சிக்குரிய ஒப்புதலை விரும்பிக் கொடுக்க வைக்கின்ற ஒரு மோசமான துரோகம் ஒன்று அரங்கேற இருக்கின்றது என்பதை எம்முடைய மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சிங்கள மக்கள் மட்டத்திலேயே ஓர் அங்கீகாரம் பெற முடியாத, முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியினுடைய தலைவராக இருந்து – நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட உறுப்பினராக வந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்கள் கொடுத்த ஆணையை மீளப்பெற்று, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவையும் பிரதமர் மஹிந்தவையும் துரத்தியிருந்தனர். எஞ்சிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் துரத்த வேண்டிய இடத்தில், அந்த நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாலே நியமிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி, பேச்சுவார்த்தை என்று நடத்துகின்ற நாடகத்துக்கு ஓர் அங்கீகாரத்தைக. கொடுப்பதற்காகவே தமிழ்க் கட்சிகள் அவசரப்படுகின்றன.

எல்லோரும் தன்னுடன் பேசுவதால் தனக்கொரு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று, சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து தப்புவதற்கு நடைபெறப்போகின்ற இந்த நாடகத்திற்கு மட்டும் தமிழ்க்கட்சிகள் அவசரப்பட்டு கலந்துகொள்ள இருப்பதால், மிகப்பெரிய பின்னடைவாக இது இருக்கப்போகின்றது என்பதையும் நாங்கள் எங்களுடைய மக்களுக்கு சுட்டிக்காட்ட விருப்புகின்றோம்.

மாவையின் அழைப்பை
நிராகரித்தோம்

இதன் பின்னணியில் நேற்று முதலாம் திகதி காலை மாவை சேனாதிராஜா தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு என்னுடன் கதைத்திருந்தார். அவர் தமிழ்க் கட்சிகளின் பொதுநிலைப்பாடு சம்பந்தமாக என்னுடன் தான் பேச விரும்புகிறார் எனக் கூறியிருந்தார்.

இந்தவேளையில் – நீங்கள் எம்முடன் பேசுவதற்கு அழைப்பு விடுக்காமல், மற்ற தரப்புக்களுடன் நீங்கள் கூடிக் கதைத்து ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒரு முடிவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். மூன்று விடயங்களை வலியுறுத்தி நீங்கள் பேசப்போகின்றீர்கள் என முடிவெடுத்து அதனை அறிவித்து விட்டு, அதற்கு பிறகு நீங்கள் ஒரு பொது நிலைப்பாடு தொடர்பில் எங்களோடு பேசுவதென்பது ஒரு நாடகம். அதில் எந்தவிதமான பெறுமதியும் இருக்கப்போவதில்லை என்பது எங்களுக்குத்தெரியும். ஆகவே நாங்கள் இனிமேல் அந்த விடயம் தொடர்பாக கதைப்பதற்கு தயாராக இல்லை என்கின்ற விடயத்தையும் கூறி, ஒரு மூத்த அரசியல்வாதி என்ற கோணத்தில் நான் அவரிடம் ஒரு சில விடயங்களைக் கூறினேன்.

விசேடமாக அவர் தன்னுடைய அரசியல் பயணத்தின் இறுதித் தறுவாயில் இருக்கின்றார். 2009 ஆம் ஆண்டு நான் சுவிஸ்லாந்தில் இனப்பிரச்சினை சம்பந்தமாக ஓர் ஆய்வு மையத்தில் புத்தகம் வெளியிடுவது சம்பந்தமாக புலம்பெயர் அமைப்புக்களுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக வேலை செய்துகொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாவை சேனாதிராஜாவும் சுவிஸ்லாந்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது நான் அவரை சந்தித்திருந்தேன்.

“சம்பந்தன் தமிழ்த் தேசிய அரசியலை ஒரு மோசமான நிலைக்கு கொண்டு போகப்போகின்றார். தமிழ்த் தேசிய அரசியலை முற்றிலும் கைவிட்டு ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுடைய அரசியலை முடக்கப்போகிறார். நீங்கள் ஒரு மூத்த அரசியல்வாதி. உங்களுடைய அரசியல் வருகை என்பது ஒரு விடுதலை அரசியலை நோக்கி வளர்ந்தது. தயவு செய்து இந்த மோசமான பாவத்தை செய்ய நீங்கள் அனுமதிக்கக்கூடாது” என்று என அப்போதே அவரிடம் தெளிவாகக் கூறினேன். “தமிழரசுக்கட்சியில் நீங்கள் தான் ஒரு மூத்த உறுப்பினர். அவரை கட்டுப்படுத்த இருக்கக்கூடிய ஒருவர். நீங்கள் இந்த நேரத்தில் அமைதியாக இருக்கக்கூடாது” என்று சொன்னபோது, அவர் பதிலெதுவும் சொல்லியிருக்கவில்லை. என்பதை நினைவுபடுத்தியிருந்தேன்.

இறுதியில், கடந்த பதினான்கு வருடங்களாகச் சம்பந்தன் செய்த அநியாயத்திற்கு நீங்கள் துணை நின்றிருக்கிறீர்கள். இனியாவது நீங்கள் இப்படி நடந்துகொள்ளக்கூடாது. உங்கள் அரசியலின் கடைசி கட்டத்திலாவது நீங்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும் ஐயா எனக் கூறியுள்ளேன்.

தெற்கில் இருக்கக்கூடிய மக்கள் மட்டத்திலே எந்தவிதத்திலும் ஓர் அங்கீகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் பேசுவதே பிழை. அந்தப் பேச்சில் எந்தவிதமான பிரயோசனமும் இருக்கப்போவதில்லை. தன்னுடைய சொந்த மக்களிடமே செல்வாக்கு இல்லாத ஜனாதிபதிக்கு பிணையெடுத்துக்கொடுக்கும் வேலையை மட்டுமே நீங்கள் செய்து கொடுக்கப்போகிறீர்கள்.

நீங்கள் பேச்சுவார்த்தை மேசையில் உட்காருவதற்கு முதல், ஆகக்குறைந்தது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சம்பந்தமாக, ஒற்றையாட்சிக்குள் இந்த பிரச்சினை தீக்கப்பட மாட்டாது என்கின்ற உத்தரவாதத்தைப் பெற்று – அது தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு சமஷ்டி தீர்வின் அடிப்படையில் மட்டும்தான் அமையும் என்ற உத்தரவாதத்தைப்பெற்று – அந்த உத்தரவாதத்தை வைத்துக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியிலும் இந்த விடயத்தை மிகவும் வெளிப்படைத்தன்மையாக கூறி – அதை உறுதிப்படுத்தாமல், பேச்சு மேசையில் உட்காருவது, தமிழ் மக்களுடைய அரசியல் நிலைமையை கேவலப்படுத்துகின்ற ஒரு விடயமாக மட்டும் தான் அமையும் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன்றைக்கு எஜமான் சொல்லுகின்றார் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவை பிணை எடுப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய இந்தக் கூட்டமைப்பையும் விக்னேஸ்வரன் தரப்பையும் அம்பலப்படுத்துகின்ற வகையில் அதே ரணில் விக்கிரமசிங்க, மாவட்ட அபிவிருத்தி சபைகளைப் பற்றி பேசியிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கருத்து எந்தளவுக்கு இந்தத் தமிழ்த் தலைவர்களை அவர் மதிக்க தயார் என்பது மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இனியாவது முதுகெலும்பை நிமிர்த்துவதற்கு இந்த தமிழ்த் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இந்தளவு கேவலமாக தங்களை அவமதித்த பிறகும், தமிழ்த் தலைமைகளாக இருந்து ஒரு சிங்கள ஜனாதிபதி சொல்வதை கேட்பதென்றால், பிறகு எதற்கு தமிழ்த் தலைமைகள் என்று இருக்க வேண்டும்?

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் தமிழ் மக்களுடன்தான் பேச வேண்டும். ஜனாதிபதி என்கின்ற வகையில், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை விளங்கிக் கொண்டு அதற்கு ஒரு தீர்வினை வழங்க முன்வரவேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குரிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

தமிழ் மக்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வராமல், சிங்கள தலைமைகள் விரும்புவதற்கு ஆம் என்று கூறினால் அது எப்படிப்பட்ட ஒரு பேச்சாக இருக்கப் போகின்றது? இந்த விடயத்தையாவது தமிழ் மக்கள் புரிந்து கொண்டு தங்களுடைய அரசியல் தலைவிதியை தங்களுடைய கைகளுக்கு எடுப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

அந்த காலம் வந்துவிட்டது. தமிழ் மக்கள் சிங்கள மக்களைப்போல தமது தலைமைகள் இழைக்கின்ற தவறுகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் இந்த தலைவர்கள் செய்ய இருக்கின்ற துஷ்பிரயோகத்தையாவது தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More