நடிகையர் திலகம் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுப் பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரகு தாத்தா’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ரகு தாத்தா’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வரும் இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தயாராகியிருக்கும் இந்த திரைக்கதையில், நாயகி,தைரியமிக்க பெண். கொள்கைகளுக்காக துணிச்சலாக போராட்டத்தையும் நடத்துகிறார். இதன் மூலம் தன்னுடைய தனித்துவத்தை கண்டுணரும் நாயகி, மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகமளிக்கும் வகையில் சவால்களை எதிர்கொண்டு, தன் சுய அடையாளத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதையும் விவரிக்கிறது” என்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தயாராகி வரும் ‘ரகு தாத்தா’ படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது. அடுத்த ஆண்டு கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ், பென்சில் ஓவியத்தில் புரட்சிப் பெண்ணாக தோன்றுவதும், பின்னணியில் வள்ளுவன்பேட்டை எனும் புகையிரத நிலையத்தின் பெயர் பலகை இடம்பெற்றிருப்பதும் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது.