வைத்திய கலாநிதி கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்தவம் என்ற நூல் வெளியீடு கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஒரு பெண் பூப்பெய்துவது தொடக்கம் மாதசுகயீன நிறுத்தம் வரையில் எதிர்கொள்ளும் பல்வேறு மாற்றங்களை குறித்து ஆராயும் இந்த நூல் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு வீடுகளிலும் பேணிப் படிக்க வேண்டியதாகும்.
மருத்துவர் ஏ. திலீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அணிந்துரையை மருத்துவர் வை. சிவகரன் நிகழ்த்த, வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக பொறியில் பீட பீடாதிபதி கே. பிரபாகரன் வழங்கினார். தாம் பொறியல் துறையை சார்ந்தவர் என்ற போதும் இந்த நூலின் உள்ளடக்கம் மற்றும் வெளிப்பாடு தமக்கு பல விடயங்களை இலகுவாக உணர்த்தியுள்ளதாக தனது வாழ்த்துரையில் திரு பிரபாகரன் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், இந்த நூல் தாய்மார்களுக்கு மாத்திரமின்றி தந்தைமார்களுக்கும் உரியது என்றும் அதனை அவர்கள் படிக்கும் போது பல மாற்றங்கள் உருவாகும் என்றும் கூறியதுடன் போருக்குப் பிந்தைய காலத்தில் மருத்துவர் குருபரன் கிளிநொச்சியில் ஆற்றிய பணிகளையும் நினைவுகூர்ந்தார்.
இதேவேளை நூலுக்கான ஆய்வுரையை நிகழ்த்திய மருத்துவர் சிவரதன், இந்த நூலை கிளிநொச்சியில் வெளியிடுவது சிறந்த விடயம் என்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் யாழ் மாவட்டத்திற்குள் முடங்கி இருப்பதாக தோன்றுவதாகவும் கூறினார். போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலேயே மருத்துவ பீடத்தின் சேவைகளும் ஆய்வுகளும் அவசியமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழ் மருத்துவம், மருத்துவத் தமிழ் என்பதுடன் மருத்துவத் தமிழ் இலக்கியம் என்பது குறித்தும் மருத்துவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் நந்தி இந்த வழியில்தான் மக்கள் மத்தியில் மருத்துவக் கருத்துக்களை விதைத்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் எளிய தமிழில் நூலாசிரியர் கந்தையா குருபரன், இந்த நூலை படைத்தளித்தமை பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் நூலினை கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் வெளியிட மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய அதிபர் திரு விக்கினேஸ்வரன், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய அதிபர் பங்கயற்செல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நூலாசிரியர் கலாநிதி கந்தையா குருபரன் ஏற்புரை ஆற்றிய வேளை, மக்களுடன் மருத்துவசேவையை ஆற்றுகின்ற போது ஏற்பட்ட அனுபவங்களில் இருந்தே இந்த நூலை ஆக்கியதாகவும் வடக்கு கிழக்கில் மகப்பேறு மற்றும் தாய்மையியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு சேர்க்கும் பணிக்கு கிளி பீப்பிள் அமைப்பு அனுசரனை அளித்தமை நன்றிக்கும் மகிழ்வுக்கும் உரியது என்றும் கூறினார்.
கிளி பீப்பிள் அமைப்பின் வெளியீடான தாயாகிய தனித்துவம் நூல் வெளியீட்டு நிகழ்வில், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமாதுக்கள், உளவளத்துணை பணியாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை முக்கிய அம்சமாகும்.