முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து நில அளவை செய்ய அதிகாரிகள் வருகை தருகின்றனர் என அறிந்த மக்கள் அந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கைக்காக ஒன்றுகூடினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சிவபாதம் குகநேசன், கணபதிப்பிள்ளை விஜயகுமார், ஆறுமுகம் ஜோன்சன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் கிராம மக்கள் ஆகியோர் ஒன்றுகூடினர்.
மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காணி அளவீட்டு நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலக காணிப்பகுதியினர் மற்றும் பொலிஸார் அந்தப் பகுதிக்கு வருகை தந்திருந்த போதிலும் நில அளவையாளர்கள் எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை.
அளவீடு இடம்பெறும் என அறிவித்தில் விடுத்து விட்டு நில அளவையாளர்கள் வெளிப்படையாக வருகை தராதமையால் இரகசியமான முறையில் அளவீடுகள் எவையும் இடம்பெறுகின்றதோ எனச் தாம் சந்தேகிப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கலகம் அடக்கும் பொலிஸார், கண்ணீர்ப் புகை குண்டு வீச தயாராக நிறுத்தப்பட்டிருந்தமையோடு பெருமளவான புலனாய்வாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.