திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆதி நடிக்கவிருக்கும் புதிய தமிழ் திரைப்படத்திற்கு ‘சப்தம்’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஹாரர் திரில்லர் ஸ்பெசலிஸ்ட் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘சப்தம்’. இதில் நடிகர் ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.
ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 ஜி பிலிம்ஸ் மற்றும் ஆல்பா ஃப்ரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் அறிவழகன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
நடிகர் ஆதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘கிளாப்’ மற்றும் ‘தி வாரியர்’ ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் வலைதள தொடர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இவரது இயக்கத்தில் தயாரான ‘பார்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘ஈரம்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் ஆதியுடன் ‘சப்தம்’ படம் மூலம் மீண்டும் இயக்குநர் அறிவழகன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த கூட்டணி வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.