“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிடுவது குறித்து பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாகப் பேசித்தான் முடிவு எடுப்போமே தவிர தனித்துத் தீர்மானத்தை எடுப்போம் எனக் கூறவில்லை.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இல்லாமல் பங்காளிக் கட்சிகள் மூன்றும் தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது எனச் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் , அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனியாகப் போட்டிடுவது என்பது, தமிழரசுக் கட்சியின் தனி முடிவல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்துதான் இந்த முடிவை எடுக்கவுள்ளோம்.
தற்போது உள்ள தேர்தல் முறைமையின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாக இருந்தால் கூடுதலான ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
சில சபைகளில் அவ்வாறு போட்டிடுவதால் ஆசனங்கள் கூடும் எனக் கூற முடியாது. ஆனால், சில இடங்களில் கூறலாம். சில இடங்களில் குறையலாம். நாங்கள் பலமாக இருக்கின்ற பிரதேசங்களில் போட்டியிட்டால், எல்லா வட்டாரத்தையும் ஒரே கட்சி வெல்லுமாக இருந்தால் மட்டுமே விகிதாசாரத்தில் வருகின்ற ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரே கட்சியாகப் போட்டியிட்டால் வட்டாரங்களில் கூடுதலாக வென்றால் விகிதாசார முறையில் நமக்கு ஆசனங்கள் கிடைக்காது.
இந்தக் கணக்கை அடிப்படையாக வைத்து த்தான் ஒரு தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம். இது சம்பந்தமாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதனுடனும், தர்மலிங்கம் சித்தார்த்தனுடனும் பேசியிருக்கின்றேன். எனவே, அவர்களுடன் பேசித்தான் நாங்கள் இந்த விடயத்தை அறிவித்திருந்தோம்.
ஆனால், நாங்கள் இறுதி முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு சபையிலும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை வைத்து நாங்கள் அந்த முடிவை எடுப்போம்.
சில வேளைகளில் சில இடங்களிலே சேர்ந்து போட்டியிடலாம். சில இடங்களில் தனித்தனியே போட்டிடலாம். எனவே, அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு தொழில்துறை ரீதியாக அந்தத் தீர்மானங்கள் எடுக்கப்படும்.
பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாகப் பேசித்தான் இந்த முடிவை எடுப்போமே தவிர தமிழரசுக் கட்சி தனித்துத் தீர்மானம் எடுக்கும் என்று நாங்கள் கூறவில்லை. பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசித்தான் முடிவை எடுப்போம்” – என்றார்.