உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் எதிர்வரும் 22 ஆம் திகதி (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும்.
எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் கே.பி.பி பதிரன தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை குறித்து விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
அரசாங்கத்தின் நோக்கத்திற்கமைய செயற்பட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது.
தேர்தல் முறைமையில் காணப்படும் அடிப்படை குறைபாடுகளுக்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்தும் போது முறையான அரசியல் கட்டமைப்பு உருவாகாது.
தேர்தல் கட்டமைப்பு ஊடாக சிறந்த அரசியல் சூழலை ஏற்படுத்தும் பொறுப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.
தேர்தல் முறைமையில் காலம் காலமாக பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு விடுபட்ட தவறுகளினால் இன்று மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.அரசியல் மீது மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது.
தேர்தல் முறைமையில் முன்னெடுக்க வேண்டிய அடிப்படை மாற்றங்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற தெரிவு குழுவுக்கு முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.ஒரு சில பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு துணைபோவதாக அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.தேர்தலை தாமதப்படுத்த வேண்டிய தேவை ஆணைக்குழுவுக்கு கிடையாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தொழில்நுட்ப ரீதியான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல் தொடர்பில் ஒரு உத்தியோகபூர்வமான தீர்மானத்தை எடுக்கும் வகையில் எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை ஆணைக்குழு கூடவுள்ளது.
தேர்தலை விரைவாக நடத்துவதே ஆணைக்குழுவின் பிரதான நிலைப்பாடாக உள்ளது என்றார்.