செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ‘பாதச்சுவடு’ | கி. விசாகரூபன்

‘பாதச்சுவடு’ | கி. விசாகரூபன்

5 minutes read

‘பழகின வண்டில் ஒழுங்கைக்குள்ள இழுக்கிறதுபோல’ வெள்ளிக்கிழமை என்டால் என்ர கால் ஏனோ செல்வச்சந்நிதியை நாடும். பள்ளிக்கூடமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. என்ர பாலன் பருவத்தில பாதி கழிஞ்சது அந்த வீதியில தான் பாருங்கோ. என்ர ஐயாவுக்கு அங்க ஒரு இருபத்தியஞ்சு வருசமா ஒரு தேத்தண்ணிக்கடை இருந்திச்சு… ஐயாவுக்கு ஒன்பது பிள்ளையள். பெண்பிள்ளையள ஐயா எப்பவுமே கஷ்ரப்படுத்தமாட்டார். அண்ணன் தம்பி ஆறுபேருக்கும் அவரவர் இயலுமைக்கான வேலைகள் பல இருக்கும்.
விறகு கொத்து!
உழுந்தரைப்பு!
மா அரிப்பு!
தோசை சுடுபவனுக்கு அடுப்புக்குள்ள அளவாக வெட்டின கிடுகுத்துண்டைத் தள்ளுவது
இப்படிப் பல சோலிகள்.

அதில ஒண்டு
கடை ‘வாங்கில’ (Bench) ஆத்தங்கரையில கழுவுறது. வாங்கைத் தலையில கவிட்டுப்போட்டு, ஆத்தில கொண்டுபோய் இறக்கி, அங்கேயும் கவிட்டுப்போட்டு ‘லோஞ்சி’ (Boat) விளையாட்டு நடக்கும்.
நேரஞ் செல்லச் செல்ல மாம்பலகை தன்ர விளையாட்டைக் காட்டும்.
ஊறின பலகை வாங்கு பிணப்பாரமாக இருக்கும். அதுவரை வளையாடின சந்தோசமெல்லாம் ‘அதுவாகவே இல்லாமல் போகும்’

இதுக்கிடையில ‘ஐயாவிட்ட கோள்மூட்டுறதுக்கெண்டே’ ஒரு கூட்டம் வரும்.

‘என்ன கிட்டினபிள்ளை
உன்ர இளையவன் வாங்கோட ஆத்தில விளையாடுறான் பார்க்கிறதில்லையே?’

மகாபாரதத்தில சகுனியைப் பார்க்க முதலே அவனை நான் ‘சந்நிதியி’ல பார்த்திருக்கிறன்.
ஐயா கண்டிப்பான பேர்வழி. ஆனாலும் அடிக்கடி அடிக்க மாட்டார்.
அடிக்க வெளிக்கிட்டால் வஞ்சகமில்லாமல் எல்லோருக்கும் அண்டு அடிதான்.
அதை வெளுவை எண்டும் சொல்லலாம்.
சும்மா இல்ல!
சொல்லிச் சொல்லி
அதில இந்த ‘வாங்குப் பிரச்சினையும்’ வந்துபோகும்.

அண்ணமாரின்ர வேலையளில எங்கள அடிக்கிறதும் வெருட்டுறதும் இருக்கும்.
‘எளியவனாப் பிறந்தாலும் இளையவனாப் பிறக்கக் கூடாதெண்டு’ என்ன சும்மாவே சொன்னவங்க.

வெள்ளிக்கிழமை விடிகாலைப் பொழுதிலேயே தட்டிவான்கள் (செவர்லட்) அணிவகுக்கத் தொடங்கும். ‘வாராசாவா’, ‘இலட்சுமி’ இப்படிப் பல பெயர்கள்.
தட்டிவானில ஆயிரம் பாட்சுகள் (Parts) இருந்தாலும் அதன் தட்டியும் றப்பர் கோணும் தனிரகம் பாருங்கோ. உங்களுக்கு அந்தக் கோணை (Horn) தெரியுமோ?
இப்பத்தைய மீன்காரனின் கோணின் பெரியசைஸ்தான் அது. இந்தக் கோணைக் கண்டுபிடிச்சதென்னவோ வெள்ளைக்காரன் தான் ஆனால் இந்த வெற்று றப்பர்கோணை அளவாப்பிசைந்து அதுக்குள்ள காத்த நிரப்பி, விதம் விதமா ஒலி எழுப்பி, அதனை வெளியில விடுறதில இந்தக் கொடிகாமத்தான், நெல்லியடியான்களை வெல்ல ஒருத்தரும் இல்லைப்பாருங்கோ. என்ன காத்தோட்டமான வாகனம் பாருங்கோ. அந்தப் ‘பிசையலில’ கனக்க சிக்கினலும் (Signal) இருந்திச்சு. அதுக்க இப்ப நான் வரயில்ல.

விமானத்தில இருந்து குண்டு போடுவதப் போல உரல், உலக்கை, கச்சான் மூடை, கடகம், பெட்டி, பாய், சத்தகம், அரிவாள் இப்படிப் பலதும் பத்தும் தட்டிவானின் உச்சியில இருந்து கீழே விழும்.
‘எப்பன் பார்த்துப் போடு மோனே’ இது வயதான கிழவிகளின் வேண்டுகோள்.
‘உரல் தெறிக்காமல் போடுவன் எப்பன் தள்ளி நில்லு’ இது வான்காரனின் ‘பதில் வசனம்.’
அடி உரல்குத்தியைச் சைற்றால நிலத்தில் குத்திக்குத்தி அவன் போடுவான். கிழவிக்கு பிறசர் ஏறும்.

வான்கள் வந்த கையோட ஒஸ்ரின் A – 40, A – 30, A – 35, சோமர்செற், ஹில்மன், 304, கேம்பிறிச், ஒக்ஸ்போட், வொக்ஸ்வேகன் என பல தினுசுக் கார்களில் எங்களுக்கு அலுப்புத்தருவதற்கென்றே ஒரு கூட்டம் அதிகாலையிலேயே வந்து சேரும். இப்படி ஒரு காரை நானும் வாங்கவேணுமெண்டு நெடுகிலும் ஆசைப்படுவன். காரின் மக்காட்டின் வாளிப்பான பாகங்களினை வருடிப்பார்ப்பதுடன் என்ர ஆசை ‘அவிஞ்சு’போகும்.
கம்பஸில வேலை கிடைச்ச கையோட ஒரு ‘மொறிஸ்மைனர்’ காரோடதான் என்ர எட்டடிப்புத் தொடங்கிச்சு எண்டால் பாருங்கோவன்.

‘முதலை வாயைப் பிளப்பது போல’ கார்களின் ‘போனட்ட’ திறந்துவிட்ட கையோட பிளேன்ரி குடிக்க எங்கட கடைக்குத்தான் வருவினம். பிளேன்ரி அவ்வளவு ‘உரிசை’.
‘எப்பன் வெளுத்தாப்போல வந்தா என்ன குறைஞ்சா போவங்க எனக் கேக்க மனசு வரும்’ ஆனால் கேட்கமுடியாது.
மூண்டு மணிக்கு எழும்பிய கண்ணெரிச்சலோடு கடை வியாபாரம் தொடங்கும்.

ஐயாவை நினைச்சால் இப்பவும் கண்கள் பனிக்கும்.
உழைப்பின் மறுபெயர் என்றால் என்ர ஐயா!
உழைச்சதைச் சேமிக்க வழி தெரியாததால் கடைசிவரை அவரால் மேலெழவே முடியவில்லை. நேர்மையாக இருக்கவேணும் என்பார். அவர் எங்களிடம் விட்டுப்போனதெல்லாம் என்னவோ அவரின் நேர்மையும் கடும் உழைப்பையும் தான்.
வெள்ளி காலை மூண்டுமணி தொடங்கினால் இரவு பத்து மணிக்கு கடை பூட்டும்வரை ஐயா ஓயமாட்டார். நாமும் தான்.
பத்துமணி வாக்கில கடைப் பலகையை ஒண்டன்பின் ஒண்டாகச் செருகி ஒத்தப்பலகையில் நிண்டு காதில பென்சிலச் சொருகி என்ர ஐயா கணக்குப்பாக்கத் தொடங்குவார். அந்த நேரம் நாம் வீதிக்கு ஒடிவிடுவோம்.
ஐயர் பொடியள், அயல் பொடியளுடன் சேர்ந்து
‘கன்னை’ பிரிஞ்சு
எட்டுக்கோடு!
கிளித்தட்டு!
கள்ளன் பொலிஸ்!
சண்டைகள்!
குருமண் விசுறல்கள்!
என ஆக்களின்ர எண்ணிக்கைக்கு ஏற்ப பல விளையாட்டுக்கள்.

விளையாட்டுக்கு ஆக்கள் ஆப்பிடாவிட்டால் மணலில் பொறிக்கிடங்கு கிண்டி, சுள்ளி அடுக்கி. அதன்மேல் ஆலம் சருகுமூடி மண்போட்டு சாமி கும்பிட வருபவர்களை விழுத்திப் பார்ப்பதில ஒரு அலாதிப்பிரியம் இருந்திச்சுது பாருங்கோ.
கோதாரியில போவார்!
வம்பில பிறந்ததுகள்!
நாசமாப் போவார்!
குறுக்கால போவார்!
இப்பிடிப் பல வசைமொழிகள்….. அதையும் தாண்டி அவர்கள் விழுவதைப் பார்த்து ரசிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது.
வாறான ‘விழுவை’ எண்டால் நானே போய் தூக்கி விடுவன். ‘ஆர்பெத்த பிள்ளையோ ராசா நீ நல்லாயிருப்ப’ என கிழவி சொல்வதுடன் முன்னர் கூறிய வசைமொழிகள் எல்லாம் ‘டிலீற்’ (Delete) ஆகி காற்றில கரைஞ்சு போகும்.

ஆனாலும் பாருங்கோ வடமராச்சியாங்களுக்கு தோசையில் ஆரோ சூனியம் வச்சிட்டாங்கள். தோசையில அப்பிடி ஒரு ‘லவ்’ (Love). புளிப்பான தோசையில ஒரு அஞ்சை வட்டமா அடுக்கி, நடுவில பள்ளம் தோண்டி, அதுக்குள்ள சாம்பாறை விட்டு, சம்பலுடன் சேர்த்து குழைச்சு கவளமாக்கி எறிவாங்கள் ஒரு எறியல்…. வெள்ளியில நடக்கிற ‘சன்னதி’ எறியல் ஞாயிறில வல்லிபுரக்கோவிலில கிழவியளின்ர தோசைத்தட்டுவரை நீளும்….. புள்ளிகள் நிறைஞ்ச புளித்தோசையில அவங்களுக்கு அப்பிடி ஒரு ‘அவா.’

புளிப்பும் உறைப்பும் சேர்ந்த வாய்க்குள்ள, நம்மளப்போல பச்சத்தண்ணிய அவங்கள் விடமாட்டங்கள்.
வெதவெதப்பான பிளேன்றிய கிளாசோட அங்காலும் இங்காலும் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ வாய்க்குள்ள அலசித் தொண்டைக்குள்ள இறக்குறதோட அவங்கட சோலி முடிஞ்சுபோகும்.

நம்மட சோலி பத்து மணிவரை நீளும்.

நானாவித வேலைகளால் கால்கள் சுருண்டு போகும். தார் ஊற்றியவன் கால்கள் போல பாதங்கள் காட்சிதரும். ‘ஊட்டுக்க’ (Gap) கையில கிடைக்கும் காசுகளுடன் வீதிக்குப்போய் பரப்பிக் கிடக்கும் கடைகளில்,
அவிச்ச வத்தாளம் கிழங்கு
தாயத்தின்னிப் ‘பனங்குட்டான்’
ஐஸ்கிறீம்
சுண்டல்
நாவல்பழம்
அலுவாத்துண்டு
இனிப்பு முட்டாஸ்….
இப்படி பல ஐற்ரங்களையும் ஒரே அடியாய் வாங்கி உள்ளே இறக்கிவிட்டு ஒண்டும் தெரியாதது போல வந்துவிடுவோம்.
பதமான பனை ஓலைக்குட்டானுடன் சேர்த்து பனங்கட்டியை ‘மாடு வைக்கலைத் தின்பது போல’ அரைப்பதிலும் ஒரு சுகம் இருந்தது பாருங்கோ.
‘அது ஒரு கனாக்காலம்’

சன்னியாசிகளில எனக்கு எப்பவும் ஒரு ‘காதல்.’
இப்பிடித்தான் அந்த மூலஸ்தானத்துக்குப் பின்னுக்கு உள்ள பூவரசுக்கடியில் ஒரு ‘சன்னியாசி’ இருந்தார்.
வெறிச்ச பார்வை!
ஊத்தை உடுப்பு!
நெற்றி நிறைஞ்ச விபூதி!
இலையான்கள் மொய்க்கும் வாய்பிளந்த ஆறாப்புண்!
பார்க்கவே பயமாயிருக்கும்…..

அவரைத் தொட்டுப்பார்க்க எனக்கு வலு விருப்பம்.
வடையைக் கொண்டுவந்து கொடுத்துப் பார்த்தன்; வடையால மூஞ்சியில எறிஞ்சார்.
காசைக் கொடுத்துப் பார்த்தன் அதையும் என்னை நோக்கி விட்டெறிஞ்சார்.
சரி! வடமராச்சிச் சாமிதானே நாலு தோசையைக் கொடுத்துப் பாப்பம். அதுக்கு மசியாமலா விடுவார்? எண்டு பார்த்தன். அதுவும் சரிவரல்ல.

ஒருநாள் என்ர தலைமுடியை பற்றிப்பிடித்து ஒரு சுழட்டுச் சுழட்டி ‘நீ நல்லாயிருப்ப’ ஓடடா எண்டு தள்ளி விழுத்தினார். அண்டைக்குப் பிறகு என்றுமே அவரை நான் கண்டதில்ல.

உங்களுக்குத் தெரியுமா பூவரசடியில அவர் இருந்த இடத்தில இன்றும் எனக்கு ‘கரன்ட்’ (Electricity) அடிப்பது போல ஒரு ‘பிரமை.’ நம்பினால் நம்புங்கள்..

நாற்பது வருசமா ‘வேலைப்’ பார்த்துப் பார்த்து என்ர கண்கள் நிறைஞ்சு போச்சு!
என்ர கண்களும் கால்களும் வீதியில் தேடுவது என்னவோ என்ர ஐயாவைத்தான்.
‘ஐயா’ நடந்த வழித்தடத்தில பிரதி வெள்ளிகள் தோறும் நான் அங்கும் இங்கும் நடந்து பார்க்கிறேன்.
மானசீகமாக உரையாடுகிறேன்.
அதில் ஒரு சுகம் எனக்கு.

ஏனப்பா! வீதியை விட்டு கடைத்தெருவில சுற்றுகிறீர்கள் என்பான் என் மகன்!

ஐயாவின் ‘பாதச்சுவடு’ பற்றிச் சொன்னேன்.
என் கண்கள் பனித்தன.

அதனை அவன் கண்டான்!

‘நீயும் ஒருநாள் உன்ர மகனுடன் என்னை நினைத்து நடப்பாய் இத் தடத்தில்.’ இது நான்.

அவன் கண்கள் பனித்ததை, அவன் மறைத்ததை நான் கண்டேன்.

எழுதியவர்
பேராசிரியர் விசாகருபன் கிருஸ்ணபிள்ளை
விரிவுரையாளர்
தமிழ்துறை
யாழ் பல்கழைக்கழகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More