“இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள முன்மொழிவுகள் அடுத்த சர்வகட்சிக் கூட்டத்தில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். சர்வகட்சிப் பேச்சு சரியான திசையை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றது. கூட்டமைப்பினரின் தற்போதைய அதிருப்தி நிலையை ஏற்க முடியாது.”
– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளமை தொடர்பில் பிரதமர் கருத்துரைக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சர்வகட்சிக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அந்த முதலாவது அமர்வில் தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் உடன்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த சர்வகட்சிப் பேச்சு எதிர்வரும் 10, 11, 12ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
இந்த இரண்டாம்கட்டப் பேச்சுக்கு முன்னர் ஒரு முன்னேற்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதர விடயங்கள் தொடர்பிலும் அவர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவுகளுக்கு அமைய அடுத்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறும். அதன்போது கூட்டமைப்பினரின் முன்மொழிவுகள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். ஆதலால், கூட்டமைப்பினரின் தற்போதைய அதிருப்தி நிலையை ஏற்க முடியாது. ஏனெனில், சர்வகட்சிக் கூட்டமானது அதன் சரியான திசையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது” – என்றார்.